Published:Updated:

அமெரிக்கா மரபணு மாற்றிய 75 கோடி கொசுக்கள்... ரிலீஸுக்கு ரெடி!

`இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலை' என்று கூறி நாம் படும் அவஸ்தையைச் சரிக்கட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் முன் வைத்துள்ள தீர்வுதான் இந்த மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்.

அமெரிக்க அரசாங்கம், விரைவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களைத் திறந்துவிடப் போகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது கொசுக்களின் மரபணுக்களையும் மாற்றியமைத்து, வெளியிடுகிறார்கள். சரி, அதென்ன மரபணு மாற்றம்?

தாவரங்கள், உயிரினங்களுடைய மரபணுக்களை மாற்றியமைக்கும் வேலையை மனிதர்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் செய்துகொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, இதற்குப் பெயர்தான் மரபணு மாற்றம் என்பதேகூடத் தெரியாமல் இருந்த காலகட்டத்திலும்கூட, அவர்கள் தங்கள் செயல்களின் வழியே அதை மேற்கொண்டுள்ளனர்.

மரபணு மாற்றம்
மரபணு மாற்றம்

தாவரங்களை, கால்நடைகளை வளர்ப்பவர்கள், குறிப்பிட்ட சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அதிக விளைச்சலைக் கொடுக்க, அதிகப் பயனை நல்கக்கூடிய வகையில் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையை மேற்கொள்வார்கள். அதாவது, எந்தெந்த விலங்குகள் இணை சேர்ந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதைக் கவனித்து, இணை சேர வைப்பார்கள். அந்த அணுகுமுறையின் மூலமே, பல்வேறு வகையான வளர்ப்பு நாய் வகைகளும் உருவாகின. மிகவும் நன்றியுள்ள, எளிமையாகப் பழக்கப்படுத்தக்கூடிய வகையில் அவை இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அவற்றின் மரபணுக்களில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. அதையே, நவீன காலத்தில் முழுமையான அறிவியல் ஆய்வுகளின் மூலம், நுட்பமாக நிகழ்த்துகின்றனர்.

உடலின் ஊட்டச்சத்துகளை உருவாக்கக்கூடிய, உயிரினத்தின் செயல்பாடுகளை வடிவமைக்கின்ற ஒன்றுதான் மரபணுக்கள். அவை அனைத்து உயிரினங்களிலும் தாவரங்களிலும் இருக்கும். ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுவும் சில தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அந்த மரபணுவில் மாற்றங்களைச் செய்ய, அதன் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணித்து, எங்கு என்ன மாற்றத்தைச் செய்தால் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றார்கள். இதை அடிப்படையாக வைத்தே, அதிக உற்பத்தியை நல்கக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம் பெரும்பான்மையாகப் பாதிப்புகளே ஏற்படுகின்றன என்பதால், பல நாடுகளில் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

மரபணு மாற்றப்பட்ட கொசு
மரபணு மாற்றப்பட்ட கொசு
Oxitec
இந்த மரபணு மாற்ற அறிவியல், பக்க விளைவுகளை அதிகமாகக் கொண்டதென்று ஒரு சாரர் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருவதும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. சரி, இப்போது இந்த மரபணு மாற்றத்தைக் கொசுக்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழைக்காலம் வந்துவிட்டால், ``இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலை" என்று கூறி நாம் படும் அதே அவஸ்தையைத்தான் உலகம் முழுவதும் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமன்றி, டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா போன்ற நோய்களும் கொசுக்கடியின் வழியாகவே ஏற்படுகின்றன. அதைச் சரிக்கட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் முன்வைத்துள்ள தீர்வுதான் இந்த மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்.

பெண் கொசு முட்டையிடத் தேவையான புரதச் சத்து ரத்தத்திலிருந்து கிடைக்கின்றது
பெண் கொசு முட்டையிடத் தேவையான புரதச் சத்து ரத்தத்திலிருந்து கிடைக்கின்றது
Pixabay

கடந்த மே மாதம், அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்காவில் செயல்படுகின்ற ஆக்சிடெக் என்ற நிறுவனத்துக்கு மரபணு மாற்றம் செய்த கொசுக்களை உருவாக்க அனுமதி வழங்கியது. ஏடெஸ் எகிப்தி என்ற வகையைச் சேர்ந்த கொசுக்கள், மனிதர்கள் மத்தியில் ஸிகா, சிக்கன்குன்யா போன்றவற்றைக் கொண்டுவருகின்றன. அந்த இனத்தின் ஆண் கொசுக்களிடமே இந்த மரபணு மாற்றப் பரிசோதனையை அவர்கள் மேற்கொண்டனர்.

பொதுவாக, பெண் கொசுக்கள்தாம் மற்ற உயிரினங்களைக் கடித்து ரத்தம் உறிஞ்சும். இனப்பெருக்கத்தின்போது, முட்டை உருவாக்கத்துக்கு ரத்தம் தேவைப்படுவதால் அவை ரத்தம் குடிக்கின்றன. நம்மைக் கடிக்கின்ற கொசுக்கள் அனைத்துமே பெண் கொசுக்கள்தாம். ஆண் கொசுக்கள் நம் காதுகளைச் சுற்றி ரீங்காரமிட்டு ஒருவித எரிச்சலை உண்டாக்குமே ஒழிய, ரத்தம் குடிக்காது. அடிப்படையில், ஆண் மற்றும் பெண் கொசுக்கள் இரண்டுமே தாவரங்களிலுள்ள தேன் துளிகளைத்தான் உணவாகக் கொள்கின்றன. அதிலுள்ள சர்க்கரை, அவற்றுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. ஆனால், பெண் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும். அவை, முட்டைகளை உருவாக்க வேண்டும். அதற்குத் தேவையான புரதச் சத்துக்காக மட்டுமே மற்ற உயிரினங்களிடன் ரத்தத்தை அவை குடிக்கின்றன.

ஆக்சிடெக் நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைச் சுமந்து செல்லும் வாகனம்
ஆக்சிடெக் நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைச் சுமந்து செல்லும் வாகனம்
Oxitec

அப்படி, ரத்தம் குடிப்பதற்காக அவை நம் உடலில் கடிக்கும்போது, அவை சுமந்து வருகின்ற தொற்றுக் கிருமிகள் நம்மைப் பாதிக்கின்றன. அதைச் சரிக்கட்டவே அமெரிக்காவில் இந்தப் புதிய முயற்சியை மேற்கொள்ளப்போகின்றனர். OX5034 என்று பெயரிடப்பட்டுள்ள அவை அனைத்துமே ஆண் கொசுக்கள்தாம். குறிப்பிட்டு ஆண் கொசுக்களை மட்டுமே மரபணு மாற்றம் செய்வதன் மூலம், அவற்றுடைய இனப்பெருக்கச் செயல்முறையையே குலைக்க முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர். மரபணு மாற்றப்பட்ட ஆண் இனத்தோடு பெண் கொசுக்களுடைய இனப்பெருக்கச் செயல்முறை நிகழ்ந்தால், அதன் மூலம் பிறக்கின்றவை, முட்டையிலிருந்து வெளியாகிப் புழு வடிவத்தில் இருக்கையிலேயே இறந்துவிடும். அதாவது, கொசு முட்டைகள் பொறிந்து, புழுவாகி, அதிலிருந்து அவை வளர்ந்து பறக்கும் அளவுக்கு வளர்ந்து நோய்களைப் பரப்பும் வரை உயிர்வாழத் தேவையான புரதம் அவற்றுக்கு இருக்காது. ஆகவே, புழு வடிவத்தில் இருக்கும்போதே அவை இறந்துவிடும். அதன்மூலம், கொசுக்கள் பரப்புகின்ற நோய்கள் பரவாமல் தடுக்க முடியும் என்று ஆக்சிடெக் நிறுவனம் கூறுகின்றது.

இந்தக் கொசுக்களை ஃபுளோரிடா கீஸ் என்ற ஒரு சிறிய தீவில் முதலில் திறந்துவிடப் போவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதற்குரிய மத்திய மற்றும் மாகாண அரசுகளின் ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன. கடந்த செவ்வாய்க் கிழமையன்று, ஃபுளோரிடா கீஸ் மாவட்டத்தினுடைய கொசுக்கள் கட்டுப்பாடு நிறுவனமும் அதற்குரிய ஒப்புதலை வழங்கிவிட்டது. இது வெற்றியடைந்தால், இனி மக்கள் கொசுத் தொல்லையின்றி நிம்மதியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

கடந்த ஆண்டு, பிரேசிலில் சுமார் 100 கோடி (1 பில்லியன்) கொசுக்களைத் திறந்துவிட்டுள்ளோம். அதனால், எவ்வித சூழலியல் பாதிப்புகளோ சமூக பாதிப்புகளோ இல்லை.
ஆக்சிடெக் நிறுவனம்

இதற்கு அமெரிக்கா முழுவதுமிருந்து ஆதரவு பெருகிய போதிலும், இதற்கு எதிரான விமர்சனங்களும் கணிசமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. change.org என்ற இணையதளத்தில் சுமார் 2,40,000 பேர் ஆக்சிடெக் நிறுவனத்துடைய இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கையெழுத்திட்டுள்ளார்கள். அமெரிக்க மாகாணங்களை, ஆக்சிடெக் நிறுவனத்தின் பரிசோதனைக் கூடமாக மாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் பலர், இதை `ஜுராசிக் பார்க் பரிசோதனை' என்று விமர்சிக்கின்றனர்.

அந்த நிறுவனத்துடைய இணையதளத் தகவல்கள், அவர்கள் ஏற்கெனவே பிரேசிலில் நடத்திய பரிசோதனையில் வெற்றி அடைந்துள்ளதாகவும், 2021-ம் ஆண்டுத் தொடக்கத்தில் டெக்சாஸ் மாகாணத்திலும் இதை மேற்கொள்ளப் போவதாகவும் கூறுகின்றன. மேலும், அதற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும் டெக்சாஸ் மாகாணத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vikatan

இந்த முயற்சியை விமர்சித்த சூழலியல் ஆர்வலர்கள், ``மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிடுவதால், ஃபுளோரிடா மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, உயிரினங்களின் உணவுச் சுழற்சிக்குப் பல பாதிப்புகள் ஏற்படும். ஏற்கெனவே, கொரோனா பேரிடரில் சிக்கித் தவிக்கின்ற இந்தச் சூழ்நிலையில் இந்த விஷப் பரீட்சை தேவையா!" என்று கூறுகின்றனர்.

ஏ.பி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அந்த நிறுவனம், ``கடந்த ஆண்டு, சுமார் 100 கோடி கொசுக்களைத் திறந்துவிட்டுள்ளோம். அதனால், எவ்வித சூழலியல் பாதிப்புகளோ சமூக பாதிப்புகளோ இல்லை" என்று கூறியுள்ளது.

நோய்க் கிருமிகள்
நோய்க் கிருமிகள்
Pixabay

உலகிலேயே ஆபத்தான உயிரினமாகப் பார்க்கப்படுவது கொசுக்கள்தாம். அவை சுமந்து வருகின்ற நோய்கள், ஆண்டுக்குச் சுமார் 7 லட்சம் பேரைப் பலிவாங்குவதாக ISGlobal, Institute for Global Health என்ற அமைப்பினுடைய தரவுகள் கூறுகின்றன. அவை சுமந்து வருகின்ற ஸிகா வைரஸ், தென் அமெரிக்காவில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படுவது ஆகிய இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த உயிரினத்தையே முற்றிலும் துடைத்து அழிப்பதற்கான முயற்சியை இந்த மரபணு மாற்றக் கண்டுபிடிப்பின் மூலமாக மேற்கொள்வது சரியா? ஓர் இனமே அழிய வேண்டுமா?

பூமியில் மொத்தமாக, 3,500 வகையான கொசுக்கள் வாழ்கின்றன. அதில் 6 சதவிகிதம் கொசு வகைகளிலுள்ள பெண் கொசுக்கள் மட்டுமே, இனப்பெருக்கத்துக்காக, முட்டை வளர்ச்சிக்காக உயிரினங்களின் ரத்தத்தைக் குடிக்கின்றன. அதில் 3 சதவிகிதம் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்ற நோய்க் கிருமிகளைச் சுமக்கின்றன.

கொசுக்கள் தாவரங்களைத்தான் அவற்றின் உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன. தாவரங்களுடைய மகரந்தச் சேர்க்கையில் அவற்றுடைய பங்கு மிகவும் முக்கியமானது. அதேநேரம், அவை பறவைகள், வௌவால்கள் போன்றவற்றின் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மீன்கள் மற்றும் தவளைகளுடைய உணவுப் பட்டியலில் கொசு முட்டைகளுக்குத் தனி இடமுண்டு. இந்நிலையில், அவற்றை அழிப்பது, இந்த உணவுச் சங்கிலியைக் குலைத்துவிடும். கொசுக்கள் அழிக்கப்பட்டால், அந்த இடத்தை வேறு ஏதேனும் பூச்சி வகை நிரப்பிக்கொள்ளும் என்று இந்த முயற்சியை ஆதரிக்கும் தரப்பு கூறுகின்றது.

``கொசுக்கள் உணவுச் சங்கிலியையும் தாண்டிய பல வேலைகளைப் பூமியில் செய்கின்றன. இன்றளவும் மழைக்காடுகளுடைய பல்வேறு உள்ளார்ந்த பகுதிகள் மனிதர்களால் வாழ முடியாத சூழலிலேயே இருப்பதற்கு முக்கியக் காரணம் இவைதாம். இவற்றுடைய ஆதிக்கம் அங்கு இருப்பதாலும் அதை மனிதர்களால் சமாளிக்க முடியாது என்பதாலுமேதான், கடந்த 10,000 ஆண்டுகளாக அத்தகைய அடர்ந்த சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன" என்று குறிப்பிடுகின்றார் அறிவியல் எழுத்தாளர் டேவிட் க்வாமென் (David Quammen).

கொசுக்கள்
கொசுக்கள்
Pixabay

இயற்கையினுடைய அமைப்பில் தோன்றியுள்ள ஒவ்வோர் உயிரினத்துக்கும், இங்கு நடைபெறுகின்ற சுழற்சி நிறைந்த செயல்முறையில் ஏதாவதொரு வகையில் முக்கியப் பங்கு உண்டு. அந்தப் பங்கு, ஒருவேளை நமக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அது நம்மைப் பாதிப்பதாகக்கூட இருக்கலாம். மான்களைப் புலி கொல்கின்றது என்று கூறி மொத்தமாக அந்த இனத்தையே அழித்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கின்றது மனிதர்களைக் கொசுக்கள் பாதிப்பதாகக் கூறி, அந்த இனத்தையே முற்றிலுமாக அழிப்பதென்பது.

இயற்கை விதிகளின்படி, நமக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்தலாம், அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், அதிலிருந்து தப்பிக்க, ஓர் இனத்தையே அழிப்பதென்பது, அறம் அல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு