Published:Updated:

``மோடியின் தெரியாத பக்கங்கள்!” - #ManVsWild பியர் க்ரில்ஸ் ட்வீட்டும் நெட்டிசன்களின் கேள்வியும்

ம.காசி விஸ்வநாதன்

இன்று சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தச் சிறப்பு எபிசோடின் புரொமோ வெளியிடப்பட்டிருக்கிறது.

பியர் க்ரில்ஸ் & மோடியின் #ManVsWild
பியர் க்ரில்ஸ் & மோடியின் #ManVsWild

டிஸ்கவரி சேனலுக்கு தமிழில் நல்ல மைலேஜ் கொடுத்ததில் முக்கிய நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்ட்'. கடுமையான சூழல்களில் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ் எப்படி அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியே வருகிறார் என்னும் சர்வைவல் சீரிஸ்தான். தமிழ் மட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கென்ற உலகமெங்கும் தனி ரசிகர்களை உண்டு. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடு ஒன்றில் இந்தியாவின் முக்கிய பிரமுகர் ஒருவர் பியர் க்ரில்ஸுடன் வனப்பகுதியில் களமிறங்கியிருக்கிறார். அவர் யார் தெரியுமா? நமது பிரதமர் நரேந்திர மோடிதான்.

உத்தரகாண்ட்டில் இருக்கும் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த எபிசோடு படமாக்கப்பட்டுள்ளது. அழிந்துவரும் வங்கப் புலிகள் அதிகம் வாழும் இடம் இது. இன்று சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இதன் புரொமோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது டிஸ்கவரி சேனல். பியர் க்ரில்ஸ், "நரேந்திர மோடியின் பெரிதும் அறியப்படாத இன்னொரு முகத்தை, காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த இந்தப் பயணத்தில் உலகம் காணப்போகிறது. "என ட்வீட் செய்துள்ளார்.

இந்த எபிசோடு ஆகஸ்ட் 12 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

மோடியின் இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே சமயம் நெட்டிசன்கள் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கின்றனர். "புல்வாமா தாக்குதலின்போது இந்த ஷூட்டிங்கில்தான் பிரதமர் பிஸியாக இருந்தாரா?"என்பதுதான் அது. காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா பிப்ரவரி மாதமே பிரதமர் இந்த நேரத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள கார்பட் புலிகள் சரணாலயத்தில் ஷூட்டிங் ஒன்றில் பங்குபெற்றுவருகிறார் எனக் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

Vikatan

பியர் க்ரில்ஸ் இந்தியாவவுக்கு வந்ததும் அதே நேரத்தில்தான் என்பதும் அவர் அப்போது பதிவிட்ட ட்வீட் மூலம் தெரிகிறது. ஆனால், பியர் க்ரில்ஸ் எதற்கு இந்தியா வந்திருக்கிறார் என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்த புரொமோவின் மூலம் 'மேன் வெர்சஸ் வைல்ட்'தான் அப்போது படமாக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள். எனினும் பியர் க்ரில்ஸ் அந்த ட்வீட்டை பின்னர் டெலீட் செய்துவிட்டார்.

இப்படி பியர் க்ரில்ஸுடன் பிரபலங்கள் சாகசப் பயணங்கள் மேற்கொள்வது இது முதல்முறையல்ல. திரைபிரபலங்கள் தொடங்கி முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரை பலரும் இதைச் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.