Published:Updated:

பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேமிக்க பிரதமர் யோசனை! - 6 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்த பசுமை விகடன்

`புது போர்வெல் அமைச்சு, தண்ணிக்குப் பதிலா வெறும் புகைதான் வந்தது’ என வேதனைப்படும் விவசாயிகள் அநேகம் பேர். அப்படிப் புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான்.

`பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனை தமிழகத்தில் உதித்துள்ளது. தமிழகத்தில் தோன்றியதுபோல் எண்ணற்ற யோசனைகள் புதிய இந்தியாவுக்கு வலுசேர்த்து வருகின்றன' -இது, குடியரசு தினத்தன்று `மன்கிபாத்' நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, தெரிவித்த செய்தி. தமிழர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்ள வேண்டிய தருணம் இது. உலகுக்கே நீர் மேலாண்மையைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். அதேநேரம், நீர் சேமிப்பு குறித்த அக்கறை இல்லாமல் அதைத் தேடி அலையும் நிலையில் இருப்பவர்களும் நாம்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

மோடி
மோடி

பிரதமருக்குத் தற்போது தோன்றியிருக்கும் இந்த எண்ணத்தை 6 ஆண்டுகளுக்கு முன்பே செய்தியாக வெளியிட்டது பசுமை விகடன். நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ் சொன்ன தகவல்களை `தண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம்' என்ற தலைப்பில், 25 ஏப்ரல் 2014 தேதியிட்ட பசுமை விகடனில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். அதில், `புது போர்வெல் அமைச்சு, தண்ணிக்குப் பதிலா வெறும் புகைதான் வந்தது’ என வேதனைப்படும் விவசாயிகள் அநேகம் பேர். ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படிப் புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான். அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம். கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழைநீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, `நீர்ச் செறிவூட்டல்’ செய்தால், தண்ணீர் ஊறி விடும்' எனக் குறிப்பிட்டிருந்தார் பிரிட்டோ ராஜ்.

பசுமை விகடன் கட்டுரை
பசுமை விகடன் கட்டுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தச் செய்தி, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நூற்றுக்கணக்கான விவசாயிகள், உடனடியாக அதைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். பலர் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார்கள். அந்த வெற்றிக் கதைகளையும் தொடர்ந்து வெளியிட்டது விகடன். அதன்பிறகுதான் அரசின் கவனம் இதை நோக்கித் திரும்பியது. தொடர்ந்து அரசு நிர்வாகமும் அந்தத் தொழில்நுட்பத்தைக் கையிலெடுக்கத் தொடங்கியது. அதன் விளைவாகத் தமிழகத்தில், பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. 2000-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேமிப்புக் கலனாக மாறி இருக்கின்றன. நிலத்தடி நீர் அதலபாதாளத்தில் இருக்கும் சூழ்நிலையில், அதை மீட்டெடுக்கும் முயற்சியின் மைல்கல்லாக இந்தத் தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. விகடனைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டன. அதன் விளைவு தமிழகத்தில் தொடங்கிய தொழில்நுட்பம் இந்தியத் தலைநகரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிரிட்டோ ராஜ்
பிரிட்டோ ராஜ்

மத்திய அரசு இந்தத் தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்கம்தான் பிரதமரின் பேச்சு. தற்போது தமிழகம் முழுவதும், தன்னார்வலர்களும், இளைஞர்களும் களம் இறங்கி நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். பலனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேமிப்புக் கலனாக மாற்றி வருகிறார்கள். பல்வேறு தொழில் நிறுவனங்களும் இதைச் செய்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மழைநீர் சேமிக்கும் இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது.

மழைநீர் சேமிப்பு
மழைநீர் சேமிப்பு

இதன் வெற்றியால், இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தென் தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ் மனதில் உதித்த எண்ணம், இன்றைக்குத் தமிழகத்துக்குப் பெருமையைச் சேர்த்திருக்கிறது. நீர் மேலாண்மையில் தமிழர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு