Published:Updated:

`கடல்ல ஒண்ணுமேயில்ல. போனா... ஒரு கிலோவுக்கே தேறல'-தமிழகக் கடற்கரை நெடுக கேட்கும் துயர ஓசை

திரைகடலோடியும்

ஆவுளியான்னு (ஓங்கல்) ஒரு மீனு வருதாம், அதப் புடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்களாம். அது வலயில புடிச்சு இவங்க தட்டிவுட்டாங்க. இவுங்களக் கொண்டுபோயி கும்மு கும்முனு கும்மி, ஒரு லச்சம் அம்பதாயிரம்னு அபராதம் வாங்கியிருக்காங்க. | திரைகடலோடியும் - 7

`கடல்ல ஒண்ணுமேயில்ல. போனா... ஒரு கிலோவுக்கே தேறல'-தமிழகக் கடற்கரை நெடுக கேட்கும் துயர ஓசை

ஆவுளியான்னு (ஓங்கல்) ஒரு மீனு வருதாம், அதப் புடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்களாம். அது வலயில புடிச்சு இவங்க தட்டிவுட்டாங்க. இவுங்களக் கொண்டுபோயி கும்மு கும்முனு கும்மி, ஒரு லச்சம் அம்பதாயிரம்னு அபராதம் வாங்கியிருக்காங்க. | திரைகடலோடியும் - 7

Published:Updated:
திரைகடலோடியும்

கோடி முனையிலிருந்து இந்தியன் கணேசன் எங்களை வடக்குப் புதுக்குடி ஊர்த் தலைவரைச் சந்திக்க அழைத்துப் போனார். விசாரித்து, அவர் வீட்டுக்குப் போனபோது அவர் கட்டுமாவடிக்குப் போயிருப்பதாகச் சொன்னார் அவர் மனைவி. கடற்கரையில் தென்னை மரநிழலில் உட்கார்ந்து கோவிந்தம்மாளும் (58). சாவித்ரியும் (52, வ.புதுக்குடி) குண்டு வலையிலிருந்து சிறு முள் சங்கு உள்ளிட்ட சங்காயங்களைக் கழித்து ஒரு கேனில் போட்டுக் கொண்டிருந்தனர். அந்த முட்சங்குகள்தான் வலைகளை சுத்தம் செய்து கொடுப்பதற்கான கூலி. சங்குக்கு வருகிறவர்கள் கிலோவுக்கு 5, 10 ரூபாய் கொடுத்து அதைக் கொள்முதல் செய்து கொள்வார்கள். காலை எட்டு மணிக்குத் தொடங்கினால் மதியம் வரை சங்காயம் கழிக்க வேண்டியிருக்கும். கோவிந்தம்மாளின் அருகில் உட்கார்ந்து பேச்சுக் கொடுத்தேன். அவர் பேச்சில் அரசியல் நெடி சற்று தூக்கலாகவே இருந்தது.

கடல் | திரைகடலோடியும்
கடல் | திரைகடலோடியும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வீட்டுக்காரருக்கு வயசாயிடிச்சி, கடலுக்கெல்லாம் போகமுடியாது. வீட்ல ரெண்டு பொண்ணுக, ஒரு பையன். பொண்ணுகளக் கட்டிக் குடுத்துட்டோம், பையன் கல்யாணமாகி தனியாப் போயிட்டான். நானு இந்த மாரி சங்கு கழிக்கறது, இப்படி சின்ன வேலை செஞ்சு சீவனாம்சம் பண்றேன். ஆனா இப்போ சங்கு சதை, நகமெல்லாம் விக்கக் கூடாதுனு அரசு சொல்லுது. தொழிலுக்குப் போனாலும் பாடு வர்றதில்ல. வேற நாங்க எப்படித்தாம் பொழைக்கிறது? இந்த அரிவலயக் குடுத்து (இழுவைமடி) அரசாங்கம் காரைக்கால்லயிருந்தும், நாகப்பட்டினத்திலிருந்தும் கோடியக்கரையிலிருந்தும் ராமேஸ்வரம் வர லோனெல்லாம் குடுத்து எட்டு நாளுக்கு வந்து கடலையெல்லாந் தடவிட்டு போயிர்றாக. ஒரே அரின்னு அரிச்சுடுறாங்க, கடல்ல ஒண்ணுமேயில்ல. போனா ஒரு கிலோ படுது, அத 200 ரூபாய்க்கு வித்து வத்தையில டீசல் செலவு எப்படி சமாளிக்கிறது? கெவர்மெண்டு எங்களக் கண்டுக்கிறதேயில்ல.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

100 நாள் வேலையின்னு ஒண்ணு வச்சுக்கிட்டிருந்தாக, அதையும் இந்த அரசாங்கம் இல்லாம ஆக்கிடிச்சு. சித்திரையில மறிச்சி (மீன்பிடி தடைக்காலம் ) ஆனியில 5000 ரூபா பணம் குடுப்பாக (மீனவர் பஞ்சகால நிவாரணம்), அதோட சரி. அதுவும் சில பேருக்கு வருது, சில பேருக்கு வரல. எங்க வூட்டுக்காரருக்கு வயசாயிடிச்சினு ஸ்கீமிலயிருந்து எடுத்துட்டாக. இந்த மாதிரி வலயில சங்கு கழிச்சுக் குடுக்கிறவங்க வயசானவங்க 190 பேரு இருக்கோம். இளமயில கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம், பிள்ளைகள வளத்தினோம்; இப்போ எங்களுக்கு வயசாயிடுச்சி. பிள்ளைகளும் எங்களக் கவனிக்கிறாக இல்ல.”

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

நிறையப் பெண்கள் கடற்கரையில் கருவாடு மீன் வணிகம் செய்கிறார்களே?

”எங்களுக்காக முயற்சியெடுத்துச் செய்து தர்றதுக்கு யாருமேயில்ல. நாலு ஆபிசர் வருவாங்க. 50 ருபாய்க்கு ஒரு பாரத்தத் தந்து நெரப்பிக் கையெழுத்து வாங்கிட்டுப் போவாக. ஆனா எந்த உதவியும் வராது. இந்த 100 நாள் வேல பார்த்துட்டிருந்தோம்; ஆறு மாசத்துக்கு ஒருக்க ஆர்டிஓ கையெழுத்துன்னு எங்ககிட்ட வாங்கிட்டுப் போவாங்க. அந்த வேலய நெறுத்தி ஒன்றரை வருஷமாச்சி. இப்பவும் வந்து வந்து கையெழுத்து வாங்கிட்டுப் போறாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்? ‘நீங்க இப்ப வேல பாத்தாலும் பாக்காட்டியும் கையெழுத்துப் போட்டுத்தான் ஆவணும்’கறாங்க.

எதையாவது கேட்டமுன்னா, ‘மீம்புடிக்கிறவுக அளவில்லாத சம்பாத்தியங்காரங்க, ஒங்களுக்கு என்ன’ன்னு கேப்பாக. ‘அந்தத் தொழில் வருது, கருவாட்டு லோன் வருதுன்னு ஒவ்வொரு முறையும் வருவாங்க, பணம் வாங்கிட்டு போவாங்க, அப்புறமா எதுவுமே எங்களுக்கு வராது. அம்மா (ஜெயலலிதா) இருந்த வரைக்கும் எல்லாம் நல்லா இருந்திச்சு. இப்போ யாருமே எங்களக் கவனிக்கிறதில்ல.”

நீங்கள் எந்தக் கட்சி?

“நானு 18 வயசுல மொதமொதல ஓட்டுப் போட்டதிலேருந்து எம்ஜியார் கட்சிதான் எனக்குப் புடிச்சது; ஆனா அம்மா போயிட்டாங்க, இனிமே போடமாட்டோம், எங்களுக்கு வாழ என்ன வழியிருக்கு? கடல்ல குறிப்பிட்ட மீனத்தாம் புடிக்கனும்னா அந்த மீனு வந்தாத்தான புடிக்கிறது. எதையாச்சும் புடிச்சுத் தின்னுப் பொழைக்கறதுக்குப் பாப்பான். இதுக்கு எடையில ஆவுளியான்னு (ஓங்கல்) ஒரு மீனு வருதாம், அதப் புடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்களாம். அது வலயில புடிச்சு இவங்க தட்டிவுட்டாங்க. இவுங்களக் கொண்டுபோயி கும்மு கும்முனு கும்மி, ஒரு லச்சம் ஐம்பதாயிரம்னு அபராதம் வாங்கியிருக்காங்க. கடலப் பொட்டலாக்கிட்டிருக்கிற அரிவல லாஞ்சிகள நிறுத்தச் சொல்லுங்களேன்.”

கடற்கரையில் மீனவர்கள் கரை மடி வலை மீன் பிடிக்கும் அழகின் புகைப்படத் தொகுப்பு: ப.கதிரவன்
கடற்கரையில் மீனவர்கள் கரை மடி வலை மீன் பிடிக்கும் அழகின் புகைப்படத் தொகுப்பு: ப.கதிரவன்

பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களா?

“படிக்க வைக்கிறோம். ஆனா நாங்க வன்னியர் படையாச்சின்னு வேல குடுக்கமாட்றாக. நெறைய புள்ளைக படிக்குதுக. படிச்சு முடிச்சுட்டு வேல? சும்மா நிக்குதுவ, துபாய்க்குப் போவுதுவ, நண்டு வலைக்குப் போவுதுவ, மீன் கம்பெனில போய் நிக்குதுவ. எங்க ஊர்லயிருந்து ஒரேயொரு புள்ளக்கி ஐஎஃப் (மீன்வள ஆய்வாளர் - Inepector of fisheries) வேல கெடைச்சிருக்கு. புள்ளைக படிக்காம இல்ல, படிச்சுப்புட்டு வலைக்குப் போகுதுவ. படிக்கறதுக்குக் கொஞ்சக் காசா செலவழியுது? ஒழச்சிப் படிக்க வைக்கிறோம். கெவர்மெண்டு ஏதாச்சும் வேல தரவேணாமா?”

துயரத்தின் தொனி

மன்னார்க் கடல் பகுதியைப் போலவே பாக் வளைகுடாக் கடற்கரைகளிலும் இழுவைமடி விசைப்படகுகள் நாட்டுப்படகு மீனவர்களின் கொடுங்கனவாக நீடிக்கிறது. பொன்னகரம், நம்புதாழை, தாமிரப்பட்டினம், அய்யம்பட்டினம், முத்துக்குடா உள்ளிட்ட பல கிராமங்கள் முழுக்க முழுக்க சிறுபடகு- வலைகளை நம்பிக் காலம் கழிப்பவை. அன்றாடம் சிறு படகுகளில் சென்று 200, 500 ரூபாய் அளவிலான அறுவடைகளுடன் கரைதிரும்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பாரம்பரிய மீனவர்களைப் பொறுத்தவரை தங்கள் வாழ்வாதாரத்தின் வாசல்கள் அறைந்து மூடப்பட்டுவிட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.

கடல் அலைகள் | திரைகடலோடியும்
கடல் அலைகள் | திரைகடலோடியும்

தமிழகக் கடற்கரை நெடுக இத்துயரத்தின் தொனியை நம்மால் கேட்க முடிகிறது. அரசுகள் நினைத்தால் இச்சீர்குலைவைத் தடுத்துவிட முடியும். ஆனால் இம்மக்களின் தரப்பில் நின்று அரசு செயல்படவில்லை என்று மீனவர்கள் சொல்கிறார்கள்.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், நாகப்பட்டினம், மல்லிப் பட்டினம், சேதுபாவாசத்திரம்- இத்தனை ஊர்களிலிருந்தும் ஏறத்தாழ 4000 இழுவை மடிப்படகுகள் இந்தக் கடல் பகுதியில் அரிவலை (இழுவைமடி) இழுப்பதாய்ச் சொல்கிறார் சாவித்ரி. 'இவ்வளவு அரிவலயும் வருசம் பூரா இழுத்த பெறகு கடல்ல எங்களுக்கு என்னதான் மிஞ்சும்?' என்கிற அவரது கேள்வி இந்தச் சூழலில் மட்டுமல்ல, எதிர்காலத்தின் முன்னால் விசுவரூபம் கொள்ளும் ஒன்று. கடலின் காப்பாளர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய கேள்வியும்கூட.

- அலைபாயும்