Published:Updated:

ஊட்டி: `மருத்துவக்கல்லூரி தேவைதான்... ஆனால்?' - 2,000 மரங்களோடு பறிபோகும் விலங்குகளின் வாழிடம்

யூகலிப்டஸ் மரங்கள்
யூகலிப்டஸ் மரங்கள்

மருத்துவக்கல்லூரி அமைவதற்காக சுமார் 2,000 யூகலிப்டஸ் மரங்கள் வெட்டப்படவுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் கரடி, சிறுத்தை, கடமான், குரைக்கும் மான்‌ உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளின் வாழிடமாகவும் உள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியின் மிக நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இந்த வாக்குறுதி தவறாமல் இடம்பெற்று வந்தது.

ஊட்டி கிராமம்
ஊட்டி கிராமம்

நீண்ட இழுபறிக்குப் பின் ஒரு வழியாக இந்தக் கனவுத் திட்டம் தற்போது நனவாக உள்ளது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது முதலே தொடர் சர்ச்சைகள் எழுந்து வண்ணம் உள்ளன.

ஊட்டியில் செயல்பட்டு வந்த கச்சா பிலிம் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், அந்தக் கட்டடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் யோசனை தெரிவித்தனர்.

அது சாத்தியப்படாத நிலையில், ஊட்டி எச்.பி.எஃப் அருகில் வனத்துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலமும், கால்நடைத்துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு வரைபடத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டது.

ஹெச்.பி.எஃப்
ஹெச்.பி.எஃப்

வனத்துறை வழங்கிய நிலத்துக்கு மாற்றாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. எனவே, மாற்றிடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவசரகதியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.

மரங்கள்
மரங்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், "இங்கு மருத்துவக்கல்லூரி அமைவதற்காக சுமார் 2,000 யூகாலிப்டஸ் மரங்கள் வெட்டப்படவுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் கரடி, சிறுத்தை, கடமான், குரைக்கும் மான்‌ உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் வாழிடமாகவும் உள்ளது.

சமீபத்தில் இதே இடத்தில் புலி நடமாட்டமும் இருந்தது. நகரின்‌ அருகில் இருக்கக்கூடிய ஒரு வனநிலம் இதுதான். தற்போது இதுவும் அழிக்கப்படவுள்ளது. மருத்துவமனை தேவை. ஆனால், இந்த இடத்தில் வேண்டாம் என்பதுதான் எங்களின் கோரிக்கை. அரசு இதைப் பரிசீலிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்" என்றார்.

இதுகுறித்து கூடுகள் அமைப்பின் நிறுவனர் சிவதாஸ் பேசுகையில், "மருத்துவக் கல்லூரி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வரவுள்ள செய்தி சந்தோஷத்தை அளிக்கிறது. கூடலூர் பகுதி மக்கள் மருத்துவ சேவைகள் பெற அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. மாநிலம் கடந்து சிகிச்சைக்கு செல்ல வேண்டி உள்ளது. விபத்துகள், இயற்கை பேரிடர்களின்போது அவசர சிகிச்சைக்காக மக்கள் செய்வதறியாது கண்ணீர்விட்டதை உணராமல் நாம் இல்லை. 4 , 5 மணிநேரப் பயணம் என அவசர சிகிச்சைக்குப்போகும் வழியில் பலரும் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற துயரம் மீண்டும் நிகழக் கூடாது என்பதுதான் அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

Sivadhas
Sivadhas

எந்த ஒரு வளர்ச்சிப் பணியை மேற்கொள்ளும்போது இயற்கையை அழித்து நிகழ்வது நாட்டின் ஒரு நிலைப்பாடாகவே மாறிவிட்டது. மற்ற மாவட்டங்களைப் போலல்லாமல் நீலகிரி இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள மாவட்டமாக உள்ளது.

இயற்கைச் சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லாத மருத்துவக் கழிவுகளை உயர் தொழில்நுட்பத்தில் சிதைக்கக் கூடிய, இயற்கையோடு இணைந்த மருத்துவமனை உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்றார்.

நீலகிரி:  இரண்டாண்டில் 96 காட்டு மாடுகள்! - உயிர் பறிக்கும் ஊட்டி ரசாயன கேரட்டுகள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஊட்டியில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடம் கட்ட ரூ.447 கோடியே 32 லட்சம் நிதியும், நிர்வாக செலவினங்களுக்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.

forest land
forest land

வனத்துறை நிலத்தைப் பயன்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை வழங்கிய நிலத்துக்கு மாற்றாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு