Election bannerElection banner
Published:Updated:

ஆபத்தில் 1,35,250 மரங்கள்... புதிய பெங்களூர் - சென்னை விரைவுச்சாலையின் சூழலியல் சிக்கல்கள் என்ன?

Highway (Representational Image)
Highway (Representational Image) ( Photo: Vikatan / Ashok kumar.D )

இந்தச் சாலை பொருளாதார அடிப்படையில் நல்ல பலன் தருமென்றும் கணிக்கப்படுகிறது. இருப்பினும், இதன் விளைவாக நிகழப்போகும் சூழலியல் சீர்கேடுகள் குறித்தும் கவனித்தாக வேண்டியுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூர் வரை, 262 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழி விரைவுச் சாலை போடும் திட்டத்தைச் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நீண்ட நாள்களாக முயன்று வருகிறது. 13,500 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சாலை கட்டமைப்பின் முதல் கட்டமாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இது, சென்னையின் எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தின் திருபாண்டியூரில் தொடங்கி, கிழக்கு பெங்களூரில் முடிகிறது.

இது பல்வேறு சூழலியல் அமைப்புகளைச் சிதைத்துவிடும் என்று சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலிருந்து விமர்சனங்கள் எழுந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தச் சாலையை அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகின்ற மார்ச் 13 மற்றும் 16-ம் தேதிகளில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

Highway (Representational Image)
Highway (Representational Image)
Photo: Vikatan / T. Vijay

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முன்னெடுத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் அமைக்கப்படவுள்ள 1,000 கிலோமீட்டர் விரைவுச்சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த விரைவுச்சாலை, கர்நாடகாவிலுள்ள ஹோஸ்கோட், பங்காரபேட்டை, கோலார் ஆகிய பகுதிகளை இணைத்து, சென்னையின் எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் வரை நீள்கின்றது. இது செயல்படுத்தப்பட்டால், தற்போது சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ஆகும் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் என்ற கால அவகாசம் குறைந்து, வெறும் 3 மணி நேரத்தில் பயணித்துவிட முடியும் என்று இத்திட்டத்துக்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது, பொருளாதார அடிப்படையில் நல்ல பலன் தருமென்றும் கணிக்கப்படுகிறது. இருப்பினும், இதன்விளைவாக நிகழப்போகும் சூழலியல் சீர்கேடுகள் குறித்தும் கவனித்தாக வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், நீர்நிலைகள் சீரழிதல் என்று பல்வேறு சீர்கேடுகள் இதனால் நிகழும். பெங்களூருவில் மட்டுமே 72 கிராமங்களை ஊடுருவி இந்த விரைவுச்சாலை பயணிக்கவுள்ளது. அங்கு கையகப் படுத்தப்போகும் 764.08 ஹெக்டேர் நிலப்பகுதியில், 717.35 ஹெக்டேர் தனியார் நிலப்பகுதிகள். இந்தச் சாலை, பாலாறு மற்றும் 73 உள்ளூர் ஓடைகளை ஊடுருவிச் செல்லும்.

இந்த நீராதாரங்கள் அனைத்துமே மழைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை ஊடுருவிச் செல்லும் இந்தச் சாலையை அமைப்பதற்கான கட்டுக்கரை (Embankment) மட்டுமே 2.5 மீட்டருக்கு உயரப்படுத்தப்படும். இதனால், இந்த நீர்நிலைகளின் வடிகால் அமைப்பு பாதிக்கப்படும்.

இவற்றோடு, சாலைக்காக கையகப்படுத்தப் போகும் நிலப்பகுதிகளில் 14 குளங்களும் அடக்கம். கட்டுமானப் பணிகளுக்காக இந்த 14 குளங்களையும் கையகப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது என்று 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட முதல் கட்டப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயம் (Representational Image)
விவசாயம் (Representational Image)

ஆனால், அந்தக் குளங்கள் அனைத்துமே நீர்ப்பாசனத்துக்காக அப்பகுதி விவசாயிகள் சார்ந்திருக்கும் முக்கிய நீர்நிலைகள். அந்தக் குளங்களை ஆக்கிரமிப்பது, அந்தக் குளங்களைச் சார்ந்துள்ள விவசாயிகளின் நீர்த் தேவையைப் பெரியளவில் பாதிக்கும். அதுபோக, தற்போது வெளியாகியுள்ள மூன்றாம்கட்ட பணிகளுக்குரிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவின்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேலும் 23 நீர்த்தேக்கங்கள் இதனால் பாதிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் வரும் பகுதிகளில் வேலூர் மாவட்டத்தைத் தவிர மற்ற பகுதிகளில் நிலத்தடிநீர் அதிகமாக உறிஞ்சியெடுக்கப்பட்டிருந்தாலும்கூட, அவை செயற்கையாக மீண்டும் மீள்நிரப்பு செய்ய உகந்த பகுதிகளாகவே உள்ளன.

இவைபோக, இந்தச் சாலை திட்டமிடப்பட்டுள்ள எல்லைக்குள் முதல் கட்டமாக, ஒரு லட்சம் மரங்களும் இரண்டாம் கட்ட வேலைகளின்போது 24,800 மரங்களும் மூன்றாம் கட்டப் பணிகளின்போது 10,450 மரங்களுமாகச் சேர்த்து, மொத்தம் 1,35,250 மரங்கள் பெங்களூரு-சென்னை விரைவுச்சாலைக்காக மட்டுமே வெட்டுப்படும். இவற்றோடு, 69 ஹெக்டேர் காட்டுப் பகுதிக்குரிய நிலத்தைப் பயன்படுத்தப் போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ``இதில் சில விஷயங்களை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மொத்தமாக 1,35,000 மரங்களை வெட்டப் போகிறார்கள். 69 ஹெக்டேர் வனப்பகுதியை இழக்க வேண்டிவரும். இப்போதுள்ள சென்னை-பெங்களூரு சாலை 320 கிலோமீட்டர். இந்த தூரம் 296 கிலோமீட்டராகக் குறைகிறது.

நெடுஞ்சாலை (Representational Image)
நெடுஞ்சாலை (Representational Image)

இதில், தூரம் ஒன்றும் பெரியளவில் குறையவில்லை. வேண்டுமானால், இப்போதுள்ள நெடுஞ்சாலையில் நெரிசல் அதிகமாக இருக்கிறதென்றால், அதையே நான்குவழிச் சாலையிலிருந்து எட்டு வழிச் சாலையாக மாற்றலாம். இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலைகள் வரும்போது, இதற்காக மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படுவதற்கு ஈடாக மீண்டும் மரங்கள் வளர்க்கப்பட வேண்டுமென்று கூறுகிறார்கள். ஆனால், அது எந்தளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறிதான். இன்றைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறமும் மரங்களற்ற நிலமாகவே இருக்கின்றன. இவ்வளவு பெரிய விலையைக் கொடுத்து, வெறும் 24 கிலோமீட்டர் மட்டுமே குறைப்பதற்கு எதற்கு அந்தத் திட்டம்?" என்றார்.

மேலும், ``2020 செப்டம்பரில் வெளியான முதல்கட்டப் பணிகளுக்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டில் பெங்களூர் முதல் சென்னைக்குப் பயணிக்கும் தற்போதைய நேரம் 5.30 மணிநேரம் என்றும் இந்தச் சாலை வந்தால், அது வெறும் 3 மணிநேரமாகக் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அது இந்திய சாலை வேகக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரானது. மொத்தம் 296 கிலோமீட்டர். இதை மூன்று மணி நேரத்தில் கடக்க வேண்டுமெனில், ஒரு மணிநேரத்துக்கு சராசரியாக 100 கிலோ மீட்டரைக் கடந்தாக வேண்டும். அதற்கு, 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால்தான் அந்த நேரத்துக்குள் அந்தத் தொலைவைக் கடக்க முடியும். அப்படியென்றால், சராசரியாக 150 வேகத்தில் பயணிக்குமாறு அரசாங்கமே அனுமதிக்கின்றதா?" என்ற கேள்வியையும் எழுப்பினார்.

Chennai - Bengaluru Expressway
Chennai - Bengaluru Expressway
`இந்த ஆண்டுக்குள் எட்டு வழிச் சாலை பணிகள் துவக்கம்!' - பட்ஜெட் அறிவிப்பும் மக்களின் எதிர்ப்பும்

இந்தத் திட்டம் குறித்துப் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், ``ஒரு நெடுஞ்சாலை என்று வந்தாலே, அதில் நிச்சயம் சூழலியல் சீர்கேடுகள் இருக்கும். நீர்நிலைகள் பாதிக்கப்படுவது ஒருபக்கமெனில், நீர்நிலைகளை வெட்டிச் செல்லும் சாலையைக் கடந்து ஒருபக்கமிருக்கும் நீர் இன்னொரு புறம் வரமுடியாது. சாலையின் கட்டுக்கரையின் உயரமே 2.5 மீட்டருக்கு இருப்பதால், நீர் ஒருபுறத்திலேயே தேங்கும். அப்போது, நீர் எங்கிருந்து ஓடி வருகிறதோ அந்தப் பக்கமே தேங்குவதால் அங்கு வெள்ள அபாயம் ஏற்படும். அதேநேரம், இன்னொருபுறம் நீர் வருவதற்கான வாய்ப்பை சாலை அடைத்துவிடுவதால் அங்கு வறட்சி ஏற்படும்" என்று கூறினார்.

ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப் போகும் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் தேவைதானா என்ற கேள்வியை சூழலியலாளர்கள் மட்டுமன்றி, அரசு கையகப்படுத்தப்போகும் நிலங்களில் வாழும் மக்களும் எழுப்புகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு