Published:Updated:

கொரோனா பாதிப்பால்  காற்று மாசுபடுதலில் நடந்த மாற்றம்! உப விளைவுகளைத் தக்கவைக்குமா உலக நாடுகள்!?

கொரோனா
News
கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று மக்களின் செயல்பாடுகளைக் குறைத்து காற்றின் தரத்தை அதிகரித்திருப்பது இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கொரோனா மக்களை அச்சுறுத்தி வீட்டிலேயே முடக்கினாலும், சுற்றுச்சூழலுக்கு அது சில நன்மைகளையும் செய்துள்ளது. ஆம், பீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டதால் நகர்ப்புறங்களில் இத்தனை நாள்களாகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துவிட்டது. காற்றில் நைட்ரஜன் ஆக்சைட், மார்ச் 2018-ம் ஆண்டில் இருந்த அளவை விட மிகக் குறைவாகத்தான் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருப்பதாகக் கூறுகிறது, காற்றுத்தரம் மற்றும் வானிலை ஆய்வு மையம் (SAFAR). பி.எம் 2.5 அளவுள்ள நுண்துகள்களின் அடர்த்தி காற்றில் இந்த ஆண்டில் குறைந்துள்ளது.

இத்தாலியில் நைட்ரஜன் டை ஆக்சைட் அளவைக் காட்டுகின்ற வரைபடம்
இத்தாலியில் நைட்ரஜன் டை ஆக்சைட் அளவைக் காட்டுகின்ற வரைபடம்
ESA

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை, "வாகனப் புகை மூலமாகக் காற்றில் கலக்கின்ற புதைபடிம எரிபொருளில்தான் 60 முதல் 80 சதவிகித நைட்ரஜன் ஆக்சைடும் 35 முதல் 50 சதவிகித பி.எம் 2.5 நுண்துகள்களும் இருக்கின்றன. சென்னை, டெல்லி, புனே, அகமதாபாத், மும்பை போன்ற நகரங்களில் இயங்குகின்ற அளவுக்கு அதிகமான வாகனங்களே, இவற்றின் வெளியீட்டில் அதிகப் பங்கு வகித்துக்கொண்டிருந்தன. கடந்த சில நாள்களாகக் கொரோனா பீதியால், இந்த வாகனங்களின் செயல்பாடு குறைந்துள்ளதால் அவை வெளியிடுகின்ற மாசுபாட்டுக் காரணிகளின் அளவும் காற்றில் குறைந்துள்ளது" என்று குறிப்பிடுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதை அடிப்படையாகக்கொண்டு, சூழலியல் ஆர்வமுள்ள மக்கள் பலரும் இத்தகைய சுய ஊரடங்கு முறை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பேசிவருகின்றனர்.

காலநிலை மாற்றத்தின் அடுத்த குழந்தைதான் கொரோனா வைரஸ் என்ற பேச்சு நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த வைரஸ் தொற்று மக்களின் செயல்பாடுகளைக் குறைத்து காற்றின் தரத்தை அதிகரித்திருப்பது இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

நியூயார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பி.பி.சி-க்குக் கொடுத்துள்ள பேட்டியில் அவர்களுடைய ஆய்வு முடிவுகள் மூலம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின்போது வெளியான கார்பன் மோனோ ஆக்சைட் அளவில் 50 சதவிகிதம் இந்த ஆண்டில் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். பூமியைச் சூடாக்கிக் கொண்டிருக்கும் கரிம வாயு வெளியீடும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர் சர்வதேச புவி வெப்பமயமாதல் குறித்த ஆராய்ச்சியாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால், உலகளவில் பொருளாதாரச் செயற்பாடுகள் அனைத்துமே முடங்கிக் கொண்டிருக்கின்றன. ஆற்றல் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றால் அதிகரிக்கின்ற பசுமை இல்ல வாயு வெளியீட்டை இந்தப் பொருளாதார முடக்கம் குறைத்துள்ளது. மே மாதத்திற்குள் கரிம வாயு வெளியீடு இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பத்தாண்டுகளுக்கும் முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த அளவுக்குக் கரிம வெளியீடு குறைந்தது இதுவே முதல்முறை.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கரிம வாயு வெளியீட்டைத் தொடர்ந்து குறைப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்.

மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருந்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் போக்குவரத்து நெரிசலின் அளவு 35 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக, சர்வதேச அளவில் வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக கார் பயன்பாடும் லாரி போன்ற கனரக வாகனங்களின் செயல்பாடும் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கரிம வாயு வெளியீடு மட்டுமன்றி, நியூயார்க் நகரத்தில் மீத்தேன் வெளியீடும் குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

காற்றுத் தரம் மட்டுமன்றி, சீனாவின் ஆற்றல் பயன்பாடும் (Energy Usage) கடந்த இரண்டு வார காலத்தில் 25 சதவிகிதம் குறைந்துள்ளதாக கார்பன் ப்ரீஃப் என்ற காலநிலை மாற்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான இந்தத் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இங்கும் இந்த முன்னேற்றம் நிச்சயம் இருக்கும் என்று சூழலியலாளர்கள் கணிக்கின்றனர். சீனா மற்றும் வடக்கு இத்தாலியில் மக்கள் கார் பயணங்களைத் தவிர்த்ததாலும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாலும் நைட்ரஜன் டை ஆக்சைட் வெளியீடு பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. வெப்பமயமாதலில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடிய இந்த வேதிமம், காற்றின் தரத்தையும் மோசமாகப் பாதிக்கக்கூடியது. இதன் அளவு காற்றில் குறைவதால், அந்த மக்கள் சுவாசிக்கின்ற காற்று தூய்மையடைந்துகொண்டிருக்கிறது. உலகளவில் ஏற்படுகின்ற இந்த முடக்கம், இந்த ஆண்டின் கரிம வாயு வெளியீட்டில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பினால் சீனாவில் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டிருக்கும் காற்று மாசுபாடு
கொரோனா பாதிப்பினால் சீனாவில் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டிருக்கும் காற்று மாசுபாடு

பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை இதேபோல் கட்டுக்குள் வைப்பது குறித்து, கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டுவந்த பிறகு, அரசுகள் சிந்தித்துத் திட்டமிட வேண்டும். உலக மக்களைப் பெரிதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கொரோனா பாதிப்பு நமக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. உலக வெப்பமயமாதலை, காலநிலை அவசரத்தைச் சரிக்கட்ட நாம் முதலில் செய்யவேண்டியதை அதுவே செய்ய வைத்துள்ளது.

அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்தி, நாம் இதிலிருந்து மீண்ட பிறகும் நீண்டகால நன்மை கிடைக்கும் வகையில் செயல்படவேண்டும். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் உலக நாடுகள், அதற்குரிய வகையில் தங்கள் பொருளாதாரத் திட்டங்களை வகுக்கவேண்டும்.

2008-09 காலகட்டத்தில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, மீண்டு வந்தபோது கரிம வெளியீட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முயலாததால், அந்த அளவு மேலும் 5 சதவிகிதம் அதிகமானது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாம் கடந்த ஆண்டுகளில் அனுபவித்துவிட்டோம். இதையெல்லாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கரிம வாயு வெளியீட்டைத் தொடர்ந்து குறைப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்.

இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டெழுகையில், பொருளாதார மீட்டெடுப்பின்போது காலநிலை மாற்றம் குறித்து மிகக் கவனமாகக் கருத்தில்கொண்டு திட்டமிட வேண்டும். புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை இப்போது போலவே குறைப்பதில் தீவிரமாக இறங்கவேண்டும்.