Published:Updated:

விஷவாயுக்களை அளவு மீறி உமிழும் தொழிற்சாலைகள்; அடுத்த போபாலாக மாறும் வடசென்னை; கவனிக்குமா தமிழக அரசு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனல்மின் நிலையம்
அனல்மின் நிலையம் ( Chennai Climate Action Group )

``இப்போது வடசென்னையில் நாங்கள் அனுபவிக்கும் தோல்நோய், கண் எரிச்சல், சுவாசக் கோளாறு அனைத்தையும் விரைவில் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அனுபவிக்க நேரிடும்" - வடசென்னை மக்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எண்ணூர்-மணலியில் உள்ள தொழிற்சாலைகள் 2020-ம் ஆண்டில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களைக் காற்றில் உமிழ்ந்ததோடு, கண்காணிப்பு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளன. சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு இதை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் விதிகளுக்குப் புறம்பாக நச்சு மிகுந்த காற்றை வெளியிடுவது குறித்துத் தெரிந்திருந்தும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

வடசென்னை
வடசென்னை
Chennai Climate Action Group

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், எண்ணூர்-மணலி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவைக் கண்காணிக்க கேர் ஏர் சென்டர் (Care Air Centre) என்ற மையத்தை நிறுவியுள்ளது. இந்த மையத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவின் இளைஞர்கள் 16 லட்சம் மணி நேரத்துக்கும் மேற்பட்ட காலகட்டத்துக்கு உரிய தரவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று ஆய்வு செய்தார்கள். இதேபோல் 2019-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அப்போதைய அளவில் 59 சதவிகிதம் நேரம், காற்று மாசுபாடு மற்றும் கண்காணிப்பு விதிமுறைகளை அப்பகுதியில் அமைந்துள்ள ஆறு தொழிற்சாலைகள் மீறியிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு அதேபோல் மேற்கொள்ளப்பட்ட மற்றுமோர் ஆய்வில், இந்த நிலை அப்படியே இருப்பதும், இதுவரைக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ``CPCL, Madras Fertilizers, வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், தமிழ்நாடு பெட்ரோகெமிக்கல் லிமிடெட் போன்ற பெரிய நிறுவனங்கள் அப்பகுதியில் மாசுபாட்டுக்குக் காரணமான செயல்படுகின்றன.

இவையனைத்துமே விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாகச் செயல்படுவதைக் கண்காணிக்க வேண்டியது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பொறுப்பு. இங்குள்ள தொழிற்சாலைகள் இப்பகுதியை நச்சுத்தன்மை வாய்ந்த இடமாக மாற்றியுள்ளன. அதோடு இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், இவற்றைக் கண்காணித்து பாதுகாக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் தவறிவிட்டது. இந்தத் தொழிற்சாலைகளே இப்பகுதியின் மாசுபாட்டுக்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகளாக இருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளனர்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு
Chennai Climate Action Group
குழந்தைகளுக்கும் சிறுநீரகத்தில் கல், மக்களுக்கு உடல்நல பாதிப்புகள்; ஆபத்தில் எண்ணூர் மக்கள்!

இந்த ஆலைகளிலிருந்து, கந்தக டை ஆக்ஸைடு (SO2), நைட்ரஸ் ஆக்ஸைடுகள் (NOX) மற்றும் இதர நுண்துகள்கள் (PM) ஆகியவை அதிக அளவில் சென்னையின் காற்று மண்டலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியாகும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களும் நுண்துகள்களும் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தின்போது வளிமண்டல நிலைமை மாசுபட்ட காற்றை நிலத்தை நோக்கி அழுத்தும்போது, வடக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்று நகரத்தின் தெற்கு, தென்மேற்கு மற்றும் மையப் பகுதிகளுக்கு இந்த நச்சு வாயுக்கள் மற்றும் நுண்துகள்களைக் கொண்டு செல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை ஓராண்டின் 67% நேரங்களில் காற்று உமிழ்வு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளது. நுண்துகள் உமிழ்வைப் பொறுத்தவரை, ஓராண்டின் 96 சதவிகித நேரத்துக்கு விதிகளை மீறி அதிகமாக வெளியிட்டுள்ளது. போபால் விஷவாயு விபத்து பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அதற்குக் காரணமாக இருந்த வாயுக்களில் ஒன்றான ஹைட்ரஜன் ஃப்ளோரைடு என்ற வாயுவை இந்த ஆலையும் வெளியிடுகிறது. அதை விதிமுறைகளின்படி கண்காணித்து, கட்டுக்குள் வைக்க, ஓராண்டின் 48% நேரத்துக்குத் தவறிவிட்டது. இந்த வாயு கசிவது கண்டறியப்பட்டாலோ, ஆரம்பக்கட்ட எச்சரிக்கை வழிமுறைகள் தோல்வியடைந்தாலோ பரவலாக அதிக மரணங்களை ஏற்படுத்தக்கூடும்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு
Chennai Climate Action Group

மேலும், சென்னை பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் தொழிற்சாலை, 2020-ம் ஆண்டில் 58 சதவிகித நேரத்துக்கு அதற்குரிய வாயு உமிழ்வு விதிமுறைகளை மீறியுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையம் 70 சதவிகித நேரத்துக்கு நச்சு வாய்ந்த கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியீட்டுக்கான விதிமுறைகளை மீறியுள்ளது. வல்லூர் அனல்மின் நிலையம், சராசரியாக 45 சதவிகித நேரத்துக்கு நச்சு வாயு உமிழ்வு விதிமுறைகளை மீறியுள்ளது. அதில், கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியீட்டில் 60 சதவிகித நேரத்துக்கு அளவுக்கு அதிகமாக வெளியேற்றியுள்ளது. நைட்ரஜன் ஆக்ஸைடுகளை 47 சதவிகித நேரம் விதிகளை மீறி அதிக அளவில் வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூரைச் சேர்ந்த எம்.எஸ்ஸி கிளினிக்கல் ரிசர்ச் மாணவரான லோகேஷ், ``இந்தப் பிரச்னையை வடசென்னையின் பிரச்னையாக மட்டுமே பார்க்காதீர்கள். இது ஒட்டுமொத்த சென்னையின் பிரச்னை. காற்றை நம்மால் வேலி போட்டு மூடி வைக்க முடியாது. பருவ காலங்களில் காற்று பூமியை நோக்கி கீழே வரும்போது, வீசுகின்ற காற்றின் வேகத்தால் தென் சென்னை, மத்திய சென்னையுமே இங்கிருந்து வெளியிடப்படும் நச்சு வாயுக்களால் பாதிக்கப்படும்.

காற்று மாசு குறித்த அறிக்கை வெளியீடு
காற்று மாசு குறித்த அறிக்கை வெளியீடு

இப்போது நாங்கள் அனுபவிக்கும் தோல்நோய், கண் எரிச்சல், சுவாசக் கோளாறு அனைத்தையும் விரைவில் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அனுபவிக்க நேரிடும். நாங்களும் எங்கள் எதிர்கால சந்ததிகளும் பாதுகாப்பாக இருக்க, இப்போதே இதைச் சரிசெய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்று கூறினார்.

வடசென்னையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஹைருனிஷா, ``இங்கிருக்கும் அனைத்துத் தொழிற்சாலைகளுமே விதிகளுக்குப் புறம்பாகத்தான் செயல்படுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால், வடசென்னையின் நிலைமை என்னாகுமென்று யோசித்துப் பாருங்கள். இவர்கள் விதிகளைச் சரியாகப் பின்பற்றினாலே காற்று மாசுபாட்டைப் பெருமளவுக்குக் குறைத்துவிட முடியும். ஆனால், அதைச் செய்ய வேண்டுமே!

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதன் வேலையைச் சரியாகச் செய்வில்லை என்பதற்கு நாங்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையே சாட்சி. கடந்த ஆண்டு இருந்த நிலையிலிருந்து கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லை. இப்போது சரிசெய்கிறோம், அப்போது சரிசெய்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கூற வேண்டும். அந்த அவகாசத்திற்குள் தொழிற்சாலைகளின் விதிமீறலுக்கு நடவடிக்கை எடுத்து, காற்று மாசுபாட்டைச் சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

வடசென்னை
வடசென்னை
Chennai Climate Action Group
சென்னையின் வளர்ச்சிக்கு நடுவே வீழ்ந்த அடையாறு; ஒரு காலத்தில் எப்படி விளங்கியது தெரியுமா?

இந்த ஆய்வறிக்கை வெளியீட்டின்போது பேசிய திருவொற்றியூர், மணலி மற்றும் எண்ணூரைச் சேர்ந்த மாணவர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், ``காற்று மாசுபாடு எங்களுடைய ஆயுட்காலத்தையே குறைக்கிறது. அரசு எங்கள் உயிர்களைப் பற்றிக் கவலைப்படவில்லையா?

எங்களுக்கு விஷமளிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதிப்பது ஏன்?

சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் முதலமைச்சர், காற்று மாசுபாட்டைச் சரி செய்ய வேண்டும். இதன் முதல்படியாக, இந்தப் பிரச்னைகளை உரிய முறையில் கண்காணிக்காமல் இருந்த மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை பொறுப்பாளராக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு