Published:Updated:

`பொருளாதார நெருக்கடி; உணவுப் பற்றாக்குறை!’ -மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்து உயிர்விட்ட சிங்கம்

மிகவும் மோசமான நிலையிலிருந்த இரண்டு சிங்கங்களில் ஒன்று இறந்தது. மீதமுள்ள சிங்கங்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என நெட்டிசன்கள் வேதனையுடன் பதிவு செய்து வருகின்றனர்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகரில் அல்-குரேஷி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் கடந்த சில வருடங்களாக ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குரேஷி பூங்கா சூடானின் தலைநகரான கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் அமைப்புகளின் நிதி மற்றும் நகராட்சியின் நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி பூங்கா ஊழியர்கள் விலங்குகளைப் பராமரித்து வருகின்றனர்.

சிங்கத்தின் உடலை கோனிப்பையால் சுற்றும் ஊழியர்கள்
சிங்கத்தின் உடலை கோனிப்பையால் சுற்றும் ஊழியர்கள்

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கடுமையான நிதி மற்றும் உணவுப் பற்றாக்குறை இங்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சிங்கங்கள் தங்களின் உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கை இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்று பூங்காவின் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்த சிங்கங்களுக்குப் பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென நெட்டிசன்கள் #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவு செய்து வந்தனர்.

உலக அளவில் இந்த ஹேஷ்டேக்குகள் கவனம் பெற்று வருவதற்கு மத்தியில் பூங்காவிலிருந்த ஐந்து சிங்கங்களில் ஒன்று இறந்துள்ளது நெட்டிசன்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்-குரேஷி பூங்காவின் மேலாளர் பிரிகேடியர் எசமெல்ட்டின் ஹஜ்ஜர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த இரண்டு சிங்கங்களில் ஒன்று மரணமடைந்தது. இந்த இரண்டு சிங்கங்களுக்கும் உணவளித்த பின்னர் மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஒரு சிங்கத்தின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் இருந்தது. ஆனால், மற்றொரு சிங்கம் இறந்துவிட்டது” என்று கவலையுடன் தெரிவித்தார்.

ஒரு சிங்கத்தின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் இருந்தது. ஆனால், மற்றொரு சிங்கம் இறந்துவிட்டது.
அல்-குரேஷி பூங்காவின் மேலாளர்

இதுதொடர்பாக சூழலியல் ஆய்வாளர் ஒருவர் ட்விட்டரில், ``தீவிரமாக நோய்வாய்ப்பட்ட சிங்கங்கள் சிகிச்சைக்காக சோபா என்கிற கால்நடை மருத்துவமனைக்கு இன்று கொண்டுசெல்லப்பட்டன. ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதற்கு முன்பு ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை. மீதமுள்ள சிங்கங்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் ஆப்பிரிக்க சிங்கங்கள் எளிதில் பாதிப்படையக்கூடிய சிங்கங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1993 முதல் 2014-ம் ஆண்டுகளுக்குள் ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை 43 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் காடுகளில் 20,000 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழிந்துவரும் ஆசிய சிங்கம்... காப்பாற்றவேண்டிய குஜராத் செய்வது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு