Published:Updated:

தனியார் முதலீட்டில் நிலக்கரிச் சுரங்கம்... அரசின் முடிவு சரிதானா?

`ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' எனப்படும் `தற்சார்பு இந்தியா' என்கிற திட்டத்தின் கீழ், வர்த்தகச் சுரங்கத்திற்காக 41 நிலக்கரித் தொகுதிகளின் ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் இது தொடங்கி வைக்கப்பட்டது. சூழலியல் ஆர்வலர்களுடைய குரல் இதற்கு எதிராகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இதில் புதிய விஷயம் என்னவென்றால், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, சுரங்கங்களில் வணிக நோக்கங்களுக்காகத் தனியார் துறை அனுமதிக்கப்படுகிறது. இப்படிச் செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறை. அதாவது, இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரியைச் சொந்த நுகர்வுக்கு (எடுத்துக் காட்டாக மின்சார உற்பத்திக்கு) மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற நிபந்தனை இருந்தது. இனிமேல் அந்த நிபந்தனை கிடையாது. அதாவது, வெட்டியெடுக்கும் நிலக்கரியை வெளியே யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

சுரங்கத் துறை
சுரங்கத் துறை
Pixabay

இந்தியாவைப் பொறுத்தவரை, ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக ரீதியாக நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் நாம் ஈடுபட்டுள்ளோம். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் சில தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள் அறிவியல்பூர்வ கட்டுப்பாடுகளற்ற நடைமுறைகளைப் பயன்படுத்தியதும் தொழிலாளர்களுக்கு மிக மோசமான வேலைச் சூழலை ஏற்படுத்தியதும் அரசின் கவனத்திற்குச் சென்றது. இதையறிந்த இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய மத்திய அரசு, தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க 1973-ம் ஆண்டு முடிவெடுத்தது. இதே காலகட்டத்தில்தான் பல்வேறு தனியார் நிறுவனங்களும் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் 100% அந்நிய நேரடி முதலீடு, குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எனப் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் எனவும் வேலைவாய்ப்பு பெருகும் எனவும், இந்தியா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியின் அளவு குறையும் எனவும் மத்திய அரசு எதிர்பார்க்கின்றது.

இந்த நடவடிக்கை எந்த விதமான பலனைத் தரும் என்பது விவாதத்துக்கு உரியது. நிலக்கரியைப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஓர் அரிய பண்டமாகப் பார்க்கப்பட்ட காலம் உண்டு. இன்றைய தேதி வரை நிலக்கரி மூலம் கிட்டத்தட்ட 55% மின்சாரம் இந்தியாவில் பெறப்பட்டாலும், அதன் மீதான எண்ணங்களும் பொருளாதாரச் சாத்தியக்கூறுகளும் வெகுவாக மாற்றமடைந்து வருகிறது.

இந்தியாவின் எரிசக்திக் கலவை, ஏற்கனவே தூய்மையான புதுப்பிக்கத்தக் எரிசக்தியை நோக்கி நகர்கின்றது.

தூய்மையான வழிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு நிலக்கரியை விட மிகவும் குறைந்து விட்டது மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரை உலகிலேயே குறைவான செலவில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் உள்ளது என்பதையும் ``சீனாவை முந்திய தமிழகம்" என்கிற கட்டுரையில் பார்த்தோம். மேலும் உலகளாவிய அளவில் பெரும்பாலான நாடுகள், காற்றையும் சூழலையும் மாசுபடுத்தும் நிலக்கரியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை எந்த விதமான பலனைக் கொடுக்கும்?

நிலையான பொருளாதார வளர்ச்சி என்கிற கோணத்தில் பார்த்தால், இந்த நிலக்கரி ஏலம் சரியானதாகத் தெரியவில்லை.
டிம் பக்லி

ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு நிறுவனத்தின் (Institute of Energy Economics and Financial Analysis) தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான இயக்குனர் டிம் பக்லி இந்தியாவின் இந்த முயற்சி குறித்து, ``உலகில் நிலக்கரி மின்சக்தித் திறனின் பயன்பாடு தற்போது அதன் உச்சத்தில் உள்ளது. இது இனி ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாகக் குறையும். வளர்ந்த நாடுகளில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ஓய்வு பெறுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் 2012-2016 ஆம் ஆண்டில் இந்தியா ஆண்டுதோறும் புதியதாக 20GW வெப்ப ஆற்றல் திறன் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்தியது. ஆனால் 2017-2020 ஆம் ஆண்டில், இது 80% குறைந்து, ஆண்டு சராசரி விகிதம் 4GW ஆக குறைந்தது. ஒரு நிலையான பொருளாதார வளர்ச்சி என்கிற கோணத்தில் பார்த்தால், இந்த நிலக்கரி ஏலம் சரியானதாகத் தெரியவில்லை.

குறிப்பாக, இந்த நிலக்கரி கிடைக்கும் இடங்களில் பெரும்பாலானவை, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலோ அல்லது நில உரிமை பிரச்சினைகளைக் கொண்டவையாகவோதான் இருக்கின்றன. நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவு மக்கள் வனப்பகுதிகளில் வசிக்கின்றனர். இந்தச் சிக்கல்கள் அனைத்தும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை குறைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களுடைய ஆராய்ச்சி முடிவுகள்படி, உலகளவில் குறிப்பிடத்தக்க 139 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் முறையான நிலக்கரி விலக்கு கொள்கைகளைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளோம். அதாவது நிலக்கரி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதில்லை அல்லது முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குக் கடன் தருவதில்லை என்கிற நிலைப்பாட்டை இவை கொண்டுள்ளன.

இந்திய ஊடகங்கள் BHP குழுமம் (BHP group), ரியோ டின்டோ (Rio Tinto Corp) மற்றும் அல்லது பீபோடி எனர்ஜி (Peabody Energy) ஏலத்தில் ஆர்வம் காட்டும் என்று ஊகித்துள்ளன. இது முற்றிலும் சாத்தியமில்லை என்று நான் கூறுவேன். இந்த மூன்றில் எதுவுமே ஏலத்தில் பங்கேற்காது எனக் கருதுகிறேன். காரணம், BHP குழுமம் சமீபத்தில் அதன் கடைசி ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தை விற்பனைக்கு வைத்ததோடு மட்டுமல்லாமல் 2019-ம் ஆண்டில் வெப்ப நிலக்கரி சுரங்கத்திற்கான ஈடுபாட்டை படிப்படியாகக் குறைக்கப் போவதாக உறுதியளித்தது. ரியோ டின்டோ அதன் கடைசி நிலக்கரி சுரங்கத்தை 2018-ல் விற்றது. பாரிஸ் ஒப்பந்தத்துடன் பயணிக்கும் வகையில், 2014 முதல் நிலக்கரித் துறையிலிருந்து வெளியேறி வருகிறது. பீபாடி எனர்ஜி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதில் முதலீடு செய்த 90% பங்குதாரர்களின் பணத்தை இழந்து விட்டது.

தனியார்மயமாதல்
தனியார்மயமாதல்
Pixabay

உலகளவில் நிலக்கரிச் சுரங்கம் வைத்துள்ள நிறுவனங்கள் மோசமான நிதிச் சூழலில் உள்ளன. அதுமட்டுமின்றி, குறைந்த விலையில் மின்சார உற்பத்தி, காற்றை மாசுபடுத்தாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவை நிலக்கரி சார்ந்த நிறுவனங்களுக்கு மிகுந்த போட்டியாக உள்ளன" என்று `Down to earth' என்கிற சுற்றுச்சூழல் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முந்தைய ஆண்டுகளில் 1950 முதல் 1990 வரை தன்னிறைவு மற்றும் தற்சார்பு அடைவதற்காகப் பல்வேறு கொள்கைகளை வகுத்து அரசு சார்ந்த நிறுவனங்களை உருவாக்கியது. உதாரணத்திற்கு, எஃகு உற்பத்திக்கான இந்திய எஃகு நிறுவனம் (SAIL-Steel Authority of India Limited), உள்நாட்டில் திறமையான பொறியாளர்களை உருவாக்குவதற்காக ஐ.ஐ.டி (IIT-Indian Institute of Technology), மருத்துவ அறிவியலுக்கான எய்ம்ஸ் (AIIMS- All India Institute of Medical Sciences) நிறுவனம், நாட்டின் ராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு டி.ஆர்.டி.ஓ (DRDO- Defence Research and Development Organisation), விமான ஆராய்ச்சிக்கு எச்.ஏ.எல் (HAL-Hindustan Aeronautics Limited), விண்வெளி ஆய்வுக்கு இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), எரிசக்தித் துறைக்காக என்டிபிசி (NTPC-National Thermal Power Corporation) மற்றும் கெயில் (GAIL- Gas Authority of India Limited) நிறுவனங்கள், ரயில்வே துறைக்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF-Integral Coach Factory) எனப் பல்வேறு தரமான நிறுவனங்களை உருவாக்கி, அதில் பெருமளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளது. இது, நம் கண் முன் உள்ள வரலாறு.

ஆனால் தற்போது, ``இந்தியா தன்னிறைவு பெற வேண்டுமென்றால், அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து பல்வேறு சலுகைகளுடன், மிகக் குறைந்த நிபந்தனைகளுடன் அல்லது நிபந்தனையற்ற முறையில் இந்திய நிலப்பரப்பிலுள்ள நிலக்கரி வளத்தைத் தோண்டியெடுத்து உற்பத்தியும் வணிகமும் செய்து கொண்டால்தான் சாத்தியம்" என மத்திய அரசு கருதுகிறது. அதன் வெளிப்பாடாக இந்த ஏலத்தையும் அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியான சூழலில் தனியார்மயம் கைகொடுக்கும் என மத்திய அரசு தற்போது கருதுவது, அரசு இயந்திரம் இதுவரை உருவாக்கி வைத்திருந்த ஒரு வெற்றி வரலாற்றை மறந்ததோடு மட்டுமல்லாமல் தன் மீதே மத்திய அரசு நம்பிக்கை இழந்ததாகத்தான் படுகின்றது.

மின்சார உற்பத்தி
மின்சார உற்பத்தி
Pixabay

கொரோனா சூழ்ந்த இந்த இக்கட்டான சூழலில், அதிக மக்கள் கூட்டத்துடன் பேருந்து இயக்கக்கூடாது என்றவுடன் தனியார் பேருந்து நிறுவனங்கள் தாங்கள் நஷ்டம் அடைவோம் எனத் தெரிந்து, தங்கள் கதவுகளை மூடிக் கொண்டபோது அரசு பேருந்துகளே நமக்குப் பேருதவி புரிந்தன. அதுபோலவே, தனியார் மருத்துவமனைகள் தம் கதவுகளை மூடிய போதும் அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார மையங்களுமே மக்களுக்குக் கலங்கரை விளக்கமாக விளங்கின.

பேரிடர் காலம் மட்டுமின்றி, நீடித்த வளர்ச்சிக்கும் தன்னிறைவு அடைவதற்கும் அரசு சார்ந்த மற்றும் அரசு உதவி பெரும் நிறுவனங்களே இதுவரை இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாய் இருந்துள்ளன என்பதை அரசுக்கு யார், எப்படி எடுத்துரைப்பார்கள் என்பதே, தற்போது நம் முன்னால் இருக்கின்ற மிகப் பெரிய கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு