Published:Updated:

``இதெல்லாம் நீர்நிலைகளே இல்லை!" - கட்டுமானப் பணிகள் குறித்து காமராஜர் துறைமுகத்தின் பதில்

காமராஜர் துறைமுகம் சார்பில் கடலோர வேலைவாய்ப்பு மண்டலம் என்ற பெயரில் வரவுள்ள தொழில்மயமாக்கல் திட்டம் குறித்த விகடன் கட்டுரைக்கு அவர்கள் அளித்த பதில்களும் அதிலுள்ள முரண்பாடுகளும்...

எண்ணூர் காமராஜர் துறைமுகம்
எண்ணூர் காமராஜர் துறைமுகம் ( Kamarajar port ltd., )
  • எண்ணூர் காமராஜர் துறைமுகம் கடலோர வேலைவாய்ப்பு மண்டலம் என்ற பெயரில் சில புதிய கட்டுமானங்களைத் தொடங்கியிருக்கிறது.

  • அந்தக் கட்டுமானங்கள் அனைத்தும் நடப்பது உப்பங்கழியிலும் சதுப்புநிலத்திலும். ஆனால், இதை மறுக்கிறது துறைமுக நிர்வாகம்.

  • இந்தப் பணிகள் சூழலியல் அனுமதி, காற்று, நீர் சட்டங்கள் என்று எந்தவிதச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழும் அனுமதி பெறாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

எண்ணூர் காமராஜர் துறைமுகம், எண்ணூர் சதுப்பு நிலங்களையும் உப்பளங்களையும் தொழில்துறை கட்டுமானங்களுக்காகத் திருப்புவது குறித்துக் கடந்த நான்காம் தேதி விகடன் இணைய தளத்தில் வெளியான கட்டுரைக்குக் காமராஜர் துறைமுக நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அந்தப் பதில்கள் பின்வருமாறு...

சதுப்பு நிலம்
சதுப்பு நிலம்
க.சுபகுணம்

காமராஜர் துறைமுகம் புதிதாக ரயில்வே யார்டு எதுவும் கட்டவில்லை என்றும் ஏற்கெனவே நிலுவையிலிருந்த ரயில்வே திட்டத்தைத்தான் தொடர்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் ஆனதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த திட்டமே தற்போது நடந்துகொண்டிருப்பதாக நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

தற்போது இருக்கும் இரண்டு ரயில்வே பாதையோடு மேலும் இரண்டு பாதைகளை அமைப்பதே அந்தத் திட்டம். அதாவது, முதல் ரயில்வே முற்றத்தையும் (Holding yard 1) காமராஜர் துறைமுக ரயில்வே முனையத்தையும் (Rail terminal yard of KPL) இணைப்பதற்காக இந்த ரயில் பாதை போடப்படுகிறது. இதன் மொத்த நீளம் 2.65 கிலோமீட்டர். அதில் 1.45 கிலோமீட்டர் கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்கு (CRZ) உள்ளே வருகிறது. அதற்கு அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வாங்குவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்கு வெளியே உள்ள 1.2 கிலோமீட்டர் பாதைக்கான வேலைகளைத்தான் தாங்கள் தொடங்கியிருந்ததாகத் தெரிவித்தனர்.

எண்ணூர்
எண்ணூர்
க.சுபகுணம்

ஒரு திட்டத்தில் எவ்வளவு நிலம் பாதுகாப்பு மண்டலத்துக்கு உள்ளே வருகிறது, எவ்வளவு வெளியே வருகிறது என்பதை வைத்து, வெளியே வருகிற நிலத்தில் திட்டத்தைத் தொடங்க எந்த விதிகளும் இடம் தரவில்லை. நாம் சென்று பார்வையிடுகையில் நடந்துகொண்டிருந்த வேலைகள் திட்டம் தொடங்கும்முன் நடைபெற்ற அடிப்படை வேலைகளே என்றும் அவை நடப்பதுகூட கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்கு வெளியேயுள்ள நிலத்தில்தான் என்றும் தெரிவித்தனர். கடலோரப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் வருகின்ற திட்டத்துக்கு முழுமையான சூழலியல் அனுமதி வாங்காமல் எந்த வேலையையும் தொடங்கக் கூடாது என்றுதான் சூழலியல் சட்டங்கள் கூறுகின்றன. தற்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்குப் பிறகு தொடங்கப்பட்ட வேலைகளை நிறுத்திவிட்டதாகவும் அதற்கான சூழலியல் அனுமதி பெற்ற பிறகே இனி வேலைகள் தொடங்குமென்றும் கூறினர்.

வரிச்சலுகை பெறக்கூடிய விற்பனைக் கிடங்கு (Free trade ware house zone) அமைக்கும் திட்டம் துறைமுக நிர்வாகத்திடம் இருந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. அதற்குப் பதிலாக அதே இடத்தில், கடலோர வேலைவாய்ப்பு மண்டலத்தைச் சாகர் மாலா திட்டத்தின்கீழ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதன்கீழ், துறைமுக வழிகாட்டுதலோடு தொழில்மயமாக்கம் நடைபெறும் என்று கூறினர்.

இங்கு கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு.

``2016-ம் ஆண்டில் வரிச்சலுகை பெறக்கூடிய விற்பனைக் கிடங்கு அமைக்கத் திட்டமிட்டு தொடங்கப்பட்ட வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன. அந்தத் திட்டம் நடக்கவிருக்கும் நிலம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று கூறி அப்போதே நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அதே இடத்தில்தான் வேலைவாய்ப்பு மண்டலம் உருவாக இருக்கிறது."

இப்போது, கடலோர வேலைவாய்ப்பு மண்டலத்துக்கான சூழலியல் அனுமதி கோரி வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின்கீழ், இன்னமும் ஒரு சதவிகித வேலைகூடக் களத்தில் தொடங்கப்படவில்லை என்கின்றனர். ஆனால், 2016-ம் ஆண்டே தொடங்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட திட்டமான ரயில்வே யார்டு, வரிச்சலுகை பெறக்கூடிய விற்பனைக் கிடங்கு கட்டுமானங்கள் எங்கு நடக்க இருந்தனவோ அதே நிலத்தில்தான் இந்தக் கடலோர வேலைவாய்ப்பு மண்டலம் வரவிருக்கிறது. ஒரே இடம், ஒரே வேலை, பெயர் மட்டும் வேறு.

``சூழலியல் அனுமதி பெறாமல் நாங்கள் வேலையைத் தொடங்கமாட்டோம். சம்பந்தப்பட்ட அனுமதிகளை முழுமையாகப் பெறாமல் திட்டத்துக்கான நிதி ஓதுக்கீடே நடைபெறாது. பிறகு எப்படி எங்களால் வேலைகளைத் தொடங்கமுடியும்?"
துறைமுக அதிகாரிகள்

முறையான அனுமதிகள் பெறாமல் வேலைகளைச் செய்ய நிதி கிடைக்காது என்றால், 2016-ம் ஆண்டு இதே இடத்தில் வேறு பெயரில் நடைபெற்ற திட்டம் முறையான அனுமதிகளின்றி எப்படித் தொடங்கியது என்ற கேள்வியும் எழுகின்றது. அதேபோல், ரயில்வே பாதை அமைக்கும் வேலைகளில் கடலோரப் பாதுகாப்பு மண்டல அனுமதிக்கு விண்ணப்பித்திருக்கும் சமயத்தில் அதே திட்டத்தில் ஆனால், அந்த எல்லைக்குள் வராத நிலம் என்பதால் மட்டும் அங்கு வேலைகளைத் தொடங்க எப்படி நிதி கிடைத்தது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

அதோடு இன்னொரு கேள்வியும் எழுகிறது, 2017-ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இந்த விற்பனைக் கிடங்குக்கான கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தது குறிப்பிடப்பட்டது. புதிய கடலோர பாதுகாப்பு மண்டல விதிகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில்தான். அதுவரை அது பரீசிலனையில்தான் இருந்தது. அப்படியிருக்க எந்த விதிகளை வைத்து அந்தக் கட்டுமானம் தொடங்கப்பட்டது? அதற்கு எப்படி நிதி ஒதுக்கப்பட்டது?

காமராஜர் துறைமுக நிர்வாகம் கடலோர வேலைவாய்ப்பு மண்டலத் திட்டத்துக்குப் பரிந்துரைத்துள்ள நிலப்பகுதி, சென்னை மெட்ரோவுக்கு உட்பட்ட நில வகைப்பாட்டில் தொழில்சார் நிலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சதுப்புநிலங்களோ நீர்நிலைகளோ இல்லை, அவை தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான நிலப்பகுதி என்று கூறுகிறது காமராஜர் துறைமுக நிர்வாகம். சென்னை மெட்ரோ ஆணையத்துக்குத் தொழில் தொடங்க நிலம் ஒதுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த நிலத்தை வகைப்படுத்தும் அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் வருவாய்த் துறையுடையது. சென்னை மெட்ரோ (CMA) இந்த நிலத்தைத் தொழில்மயமாக்கலுக்குத் தகுந்தது என்று கூறிவிட்டதால், அங்கு சதுப்பு நிலங்களோ உப்பளங்களோ இல்லையென்று கூறிவிடமுடியாது.

நிலவியல் பதிவேடு
நிலவியல் பதிவேடு

கடலோர வேலைவாய்ப்பு மண்டலம் அமையவிருக்கும் அத்திப்பட்டு கிராமத்தின் நிலங்கள் என்ன வகைப்பாட்டில் வருகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்தத் திட்டம் வரவிருக்கும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள அத்திப்பட்டு கிராம நிலம் சர்வே எண்:354-ல் 300 ஏக்கர்களுக்கு உப்பளங்கள் இருப்பதாகப் பதிவேடுகள் கூறுகின்றன. ஆனால், அந்தப் பகுதி சென்னை மெட்ரோவில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது நகைமுரண். சதுப்பு நிலப் பாதுகாப்புக்கான ராம்சார் கன்வென்ஷன் கமிட்டி என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஓர் அங்கம். அதன் சட்டங்கள் உப்பளங்களும் நீர்நிலைகளே என்று கூறுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி, சென்னை மெட்ரோ வளர்ச்சி ஆணையத்துக்கு (Chennai Metropolitan development authority) ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நீரியல் ஆர்வலர் பேரா.ஜனகராஜன் ஆகியோர் எழுதிய கடிதத்தில் சென்னை மெட்ரோ தரப்பில் தொழிற்சாலை நிலங்களாகக் கூறப்பட்டுள்ள எண்ணூர் நிலப்பகுதிகள் உப்பளங்கள் நிறைந்தவை, சதுப்பு நிலங்களும் இந்தத் தொழிற்சாலை நில வகைபாட்டுக்குள் வருகிறது, அது பாதுகாக்கப்பட வேண்டிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய முரணான நில வகைப்பாட்டைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தித்தான் தற்போது கடலோர வேலைவாய்ப்பு மண்டலம் வரவிருக்கிறது.

சதுப்பு நிலத்தில் நடக்கும் மேடேற்றும் வேலை
சதுப்பு நிலத்தில் நடக்கும் மேடேற்றும் வேலை
க.சுபகுணம்

2011-ம் ஆண்டின் கடலோர பாதுகாப்பு மண்டலங்களுக்கான மேம்படுத்தப்பட்ட வரைபடம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. ஆனால், அது இன்னமும் முழுமையடையவில்லை. 1996-ம் ஆண்டின் வரைபடத்தின்படி பாதுகாக்கப்பட்ட பல பகுதிகள் இந்த வரைபடத்தில் நீக்கப்பட்டுள்ளன. அதில் அத்திப்பட்டு கிராமத்தில் இந்தத் திட்டம் வரவுள்ள பகுதியும் அடக்கம். இந்த நிலையில், முந்தைய வரைபடத்திலிருந்த நிலப்பகுதிகள் இதில் நீக்கப்பட்டதற்கான நியாயமான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகுதான் இது முழுமையடையும். அப்படியிருக்க, முழுமையடையாத வரைபடத்தை வைத்தே இந்தத் திட்டத்துக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

சதுப்புநிலத்தில் மணல் கொட்டி மேடேற்றுவதாகக் கூறப்பட்டது குறித்துப் பதிலளித்துள்ள நிர்வாகம் அது சதுப்புநிலமோ உப்பளமோ இல்லையென்றும் அங்கு மணல் கொட்டுவதற்கு உரிய சூழலியல் அனுமதி இருப்பதாகவும் கூறியது.

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களுக்குக் கிடைத்த சூழலியல் அனுமதியின் அடிப்படையில்தான் துறைமுக வளாகத்துக்குள் எடுக்கப்பட்ட மணலை வெளியே உயரம் குறைவான இடத்தில் நிரப்பி மேடேற்ற அனுமதி இருப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. 2015-ம் ஆண்டின் 12.3.2015 தேதியிட்ட அந்த அனுமதியை ஆராய்ந்து பார்க்கையில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் 57.94 ஏக்கர் நிலப்பகுதியும் தற்போது நிலக்கரி மற்றும் இரும்புக் கிடங்கு அமைந்திருக்கும் நிலப்பகுதியும் ஒன்றுதான் என்பது தெரியவருகிறது.

ஆனால், 8.50 ஏக்கர்களுக்கு மணல் கொட்டி மேடேற்றப்படும் நிலப்பகுதி அதற்கும் தெற்கே வேறிடத்தில் அமைந்துள்ளது. அங்கு அதைச் செய்வதற்குச் சூழலியல் அனுமதி அவசியம்.

இங்கு குறிப்பிட வேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவென்றால்,

இதே இடத்தில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மணல் கொட்டி மேடேற்றும் வேலை நடந்தது. அப்போது, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் எண்ணூர் கழிவெளிப்பகுதியைப் பருவமழைக்குத் தயார்படுத்துவதற்காக எண்ணூர் மீனவர்களும் கடலோர வள மேம்பாட்டு மையமும் ஆய்வு செய்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் நீர்நிலைகளும் சதுப்பு நிலங்களும் இந்த மேடேற்றத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறி துணை ஆட்சியர் தலைமையில் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.
அனல்மின் நிலையத்தின் சாம்பல் குட்டை
அனல்மின் நிலையத்தின் சாம்பல் குட்டை
க.சுபகுணம்

அதற்கும் முன்னமே மூன்று கிலோமீட்டர் நீளத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயிலும் நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களிலும் இருக்கும் காமராஜர் துறைமுக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) என்ற ஆங்கில நாளிதழில் செய்தியாகவும் அப்போது வெளிவந்தது. தற்போது நடைபெறும் மணல் கொட்டி மேடேற்றும் வேலை அதே இடத்தில் ஆனால், வேறு பெயரில் நடக்கிறது. பெயர்கள் மாறலாம், ஆனால் விளைவுகள் ஒன்றுதான்.

துறைமுக அதிகாரிகளோடு குறிப்பிட்ட நிலப்பகுதிகளைப் பார்வையிடச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சில நீர்நிலைகளை நீர்நிலைகளே இல்லையென்றும் அவை செப்பாக்கம் சாம்பல் குளத்திலிருந்து வடிந்து தேங்கிக் கிடக்கும் சாம்பல் கழிவு நீர்தான் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், கடந்த ஜூன் மாதம் நிலக்கரி பெர்த்துகள் 3&4 (Coal Berths 3&4) கட்டுமானத்துக்காகச் செய்யப்பட்ட சூழலியல் தாக்க மதிப்பீட்டிலேயே அது உப்பளங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் அலையாத்திக் காடுகள் நிறைந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அந்த நிலம் அலைத்தாக்கம் நிறைந்த பகுதி என்றும் அங்கு அலைகளும் நீர்வழித்தடங்களும் கட்டுமானங்களால் தடைப்பட்டுவிட்டதாகவும் தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu State Coastal zone management authority) மதிப்பீட்டுக் குழு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அவை நீர்நிலைகளே இல்லையெனில் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் சாலைகளில் செயற்கையாக நீர்வழித் தடங்களை அமைத்திருப்பது எதற்காக? இயற்கையான நீர்வழிப்பாதை தடைப்பட்டு ஆங்காங்கே தேங்கிவிட்ட நீர்நிலைகள் நீர்நிலைகளே இல்லையென்று துறைமுக நிர்வாகம் சார்பில் தற்போது சொல்லப்படுகிறது.

அத்துமீறும் காமராஜர் துறைமுக நிர்வாகம்... அழிக்கப்படுகிறதா எண்ணூர்!?

எண்ணூர் ஏற்கெனவே பல சூழலியல் சீரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சாகர்மாலா திட்டத்தின்கீழ் வந்துகொண்டிருக்கும் இந்தத் திட்டங்கள் அந்த நிலத்தின் அமைப்பை மாற்றிவிடும் அபாயமுள்ளது. கொற்றலை ஆரணி படுகையும், எண்ணூர் சதுப்பு நிலங்களும் அந்தப் பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னையின் தண்ணீர் தேவையில் அவற்றால் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர்வரை பூர்த்தி செய்யமுடியும். அந்நிலத்தின் இத்தகைய சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிந்து செயல்பட வேண்டிய அவசியத்தைக் காமராஜர் துறைமுக நிர்வாகம் உணர வேண்டும்.