Published:Updated:

இந்திய வன உரிமைச் சட்டம்... மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?

Tribes
Tribes

இந்தியாவின் பல மாநிலங்களில் வன உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவே இல்லை. இந்நிலையில், மாநில அரசுகளால் எப்படி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பித்திருக்க முடியும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உரிமை மறுக்கப்பட்ட 11லட்சம் மனுதாரர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் காடுகளுக்குள் அவர்கள் வாழும் நிலத்திலிருந்து வெளியேற்றுமாறு உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பழங்குடிகள் வெளியேற்ற உத்தரவுக்குத் 'தற்காலிக'த் தடை மட்டும் விதித்தது. அதுகுறித்து விரிவான விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, வன உரிமை கோரிய மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட மனுக்களின் நிலைகுறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுகளை வலியுறுத்தியது. ஜூலை 22-ம் தேதி, மாநில அரசுகளும் அந்த அறிக்கையைச் சமர்ப்பித்தன.

Forest
Forest

இந்தியாவின் பல மாநிலங்களில் வன உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவே இல்லை. இந்நிலையில், மாநில அரசுகளால் எப்படி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பித்திருக்க முடியும். உதாரணத்துக்கு, மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இன்னமும் கிராம சபைகளே கூட்டப்படவில்லை. ஆகவே, அங்கு மறுபரிசீலனைக்குச் செல்ல வேண்டிய 3.6 லட்சம் மனுக்கள் இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன. இப்படியிருக்க, மத்தியப் பிரதேச அரசு எப்படி முழுமையான அறிக்கை சமர்ப்பித்திருக்க முடியும்?

ஆனால், அந்த அரசுகள் அறிக்கை சமர்ப்பித்தன.

சில நீதிமன்றக் காரணங்களால், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. இந்திய வன உரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, வெளியேற்ற உத்தரவு தற்காலிக ரத்தில் இருக்கும்வரை, இந்தப் பிரச்னை தீராது என்று பழங்குடி மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் வருந்துகிறார்கள். தற்காலிகமாக அந்த உத்தரவை ரத்து செய்து பிப்ரவரி 28-ம் தேதி தீர்ப்பு வந்த பிறகும்கூட, நாட்டின் பல பகுதிகளில் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள். 2017-18 ஆண்டுகளில் மத்திய அரசு இந்த வழக்கில் சரியாக வாதாடாமல், அமைதி காத்ததே பிரச்னை பெரிதாகக் காரணம். இனியாவது, முறையாகச் செயல்பட்டு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இது லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளை அங்கீகரித்துப் பாதுகாக்க, மக்களாட்சி அரசமைப்பில் எடுத்து வைக்கப்பட்ட முதல்படி. லட்சக்கணக்கானவர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் வன உரிமைச் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் மேலும் மூன்று மனுக்களைச் சமீபத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கியக் கவனமே அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய வன உரிமைச் சட்டம் ஏற்புடையதுதானா என்ற விசாரணைதான். அது உறுதியானால்தான், அடுத்தகட்டமாக அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள சிக்கல்களையும் அதன்மூலம் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வியையும் விசாரிக்க முடியும். ஆனால், பல்வேறு விதமான மனுக்களின் மூலம் இந்த வழக்கின் திசை வேறுபக்கமாகத் திரும்பிப் பழங்குடிகளை வெளியேற்றுமாறு தீர்ப்பு வருமளவுக்குச் சென்றுவிட்டது. இப்போதும் வழக்கு தொடுத்தவர்கள் அதேபோல் செய்கிறார்கள் என்று `கேம்பைன் ஃபார் சர்வைவல் அண்டு டிக்னிடி’ அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

Vikatan

புதிய மனுக்களின் சாராம்சம்

  • மாநில அரசுகள் மறுக்கப்பட்ட மனுக்களை மறுபடியும் விசாரிப்பதை நிறுத்த வேண்டும்.

  • இந்தச் சட்டம் குறித்த வழக்கு நடந்துகொண்டிருப்பதால், உரிமை கோரி வழங்கப்படும் மனுக்களை வாங்கக் கூடாது.

  • இந்திய வன அளவை நிறுவனத்தை, இந்தியாவில் நடக்கும் காடழிப்பு நடவடிக்கைகளைக் கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும். அதோடு இந்திய வன அளவை நிறுவனத்தையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும்.

Forest Rights
Forest Rights

முதல் இரண்டு கோரிக்கைகளும் மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் விசாரிக்கப்போகின்ற சூழலில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும், ஒருசில மாநில அரசுகள், உரிமை கோரும் மனுக்களை விசாரித்ததில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டும் உள்ளன. இந்நிலையில், இந்த விசாரணை நடப்பதில் மனுதாரர்களுக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுவதுபோல இது இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த வழக்கால், பழங்குடி மக்கள் மன அழுத்தம், ஒடுக்குமுறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர்களின் மனுக்களைப் பெறக்கூடாது என்று தடுப்பது அவர்களின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தும். அதுமட்டுமன்றிச் சட்டம், எந்தவிதக் கால வரையறைகளையோ இந்த இந்தச் சூழல்களில் எல்லாம் மனுக்களை வாங்காமல் இருக்கலாமென்றோ குறிப்பிடவில்லை.

Mountain
Mountain

மூன்றாவது கோரிக்கையின் முக்கிய நோக்கமே காடு அழிப்புக்கு, காடு சார்ந்து வாழும் மக்களும் பழங்குடிகளுமே காரணமென்று குற்றம் சாட்ட வேண்டுமென்பதே. "ஏற்கெனவே காடு அழிப்புக்கு அவர்களைக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் மனுதாரர்கள், குறிப்பிட்டு இந்தக் கணக்கெடுப்பை நடத்தச் சொல்வதன் நோக்கம் என்ன?" என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அரசே பல திட்டங்களுக்காகக் காட்டு நிலங்களை அழித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், வெறுமனே காடழிப்பின் விகிதத்தை மட்டும் கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்பது, அந்த விகிதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தானோ என்ற சந்தேகமும் எழாமலில்லை. இந்தச் சட்டத்தின்படி, செயற்கைக்கோள் படங்களை வைத்து மட்டுமே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

இந்தச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த சமயத்தில் பலத்த எதிர்ப்பை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய பழங்குடியின அமைச்சகமும் சந்தித்தது. அதிலிருந்து மத்திய அரசு இந்த வழக்கில் அமைதிகாத்து வருகிறது. நிலுவையிலிருக்கும் இந்த வெளியேற்ற உத்தரவை முற்றிலுமாக ரத்து செய்யுமாறு, மத்திய அரசு இதுவரை உச்ச நீதிமன்றத்திடம் கோரவில்லை. அதற்கு நேர் எதிராக, மேலும் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று (12.9.2019) விசாரிக்கப்போகிறது. இந்நிலையில், நேற்று மாலை இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனமான Wildlife Trust of India வன உரிமைச் சட்டத்துக்கு எதிரான தன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வழக்கிலிருந்து பின்வாங்கியுள்ளது.

இதன்மூலம், தாங்கள் எடுத்த முடிவு தவறு என்பதை உச்ச நீதிமன்றத்துக்கும் மற்ற மனுதாரர்களுக்கும் எடுத்துக் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் அவர்கள் பின்வாங்கியதை ஏற்றுக்கொள்ளுமா, இன்றைய வழக்கில் பழங்குடியின மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வழக்கில் அனைவரிடமும் இப்போது இருக்கும் இரண்டே கேள்விகள்,

  • மத்திய அரசு இந்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை எதிர்த்து வாதிட்டு வன உரிமைச் சட்டத்தைத் தற்காத்து நிற்குமா?

  • இல்லை, மீண்டும் வழக்கம்போல் நுணுக்கங்களைப் பேசுவதுபோல் பேசி வைத்து வாதிட்டு மேலும் தாமதப்படுத்துமா?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு