சென்னையில் சின்னதாய் மழை பெய்தாலே நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிடுவதை ஒவ்வொரு மழையின் போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் சென்னையில் இருந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியதும், நீர்நிலைகளைப் பராமரிக்காததும்தான்.
இத்தகைய சூழலில் அறப்போர் இயக்கத்தினர் வழக்கு தொடுத்து 39 ஏக்கர் பரப்பளவுள்ள வில்லிவாக்கம் ஏரியை மீட்டு அவற்றை சீரமைக்கும் பணியை செயல்படுத்த வைத்தனர். ஆனால் அதிலும் பகுதியளவு மட்டுமே சீரமைக்கப்பட்டு, பாதி இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா கட்டவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ``வில்லிவாக்கம் ஏரி சார்ந்த பகுதிக்குள் எந்தவொரு பொழுதுபோக்கு பூங்காவோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமோ அல்லது வேறு கட்டுமானங்களோ மேற்கொள்ள கூடாது" என உத்தரவிட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த விவகாரம் குறித்து கூடுதல் விவரங்களைப் பற்றி அறப்போர் இயக்கம் ஜெயராமனிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது, ``சென்னையில் பல நீர்நிலைகள் மீட்டெடுக்கவே முடியாத நிலைக்குப் போய்விட்டது. மீட்டெடுக்க முடிந்த சில நீர்நிலைகளை மீட்கும் முயற்சிகளை எடுத்துவருகிறோம். வில்லிவாக்கம் ஏரியை மீட்பதற்கான வழக்கு 2016-ல் இருந்து நடத்திவருகிறோம்.
39 ஏக்கர் பரப்பு உடைய வில்லிவாக்கம் ஏரியை முழுமையாகப் பராமரிக்க வேண்டும். ஏரிப் பரப்பை சுருக்கும் வகையிலான எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது போன்ற பல கோரிக்கைகளை வைத்து வழக்காடினோம்.
2017-ல் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. 20 ஏக்கருக்கு மெட்ரோ ரயில் மண் கொட்டப்பட்ட நிலையில் வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தது. தீர்ப்பையடுத்து சீரமைப்பு பணிகள் நடந்தன. ஆனாலும் அவற்றில் பகுதியளவு பரப்பளவு மட்டுமே சீரமைக்கப்பட்டு ஏரியாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. 27.5 ஏக்கர் பரப்பை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள 11.5 ஏக்கரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை சென்னை மெட்ரோ வாட்டர் மேற்கொண்டது.

அதை எதிர்த்து வழக்கு தொடுத்தும். பசுமைத் தீர்ப்பாயம் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையை அமைக்க தடை விதித்தது. இந்நிலையில் 27.5 ஏக்கர் பரப்பில் பகுதியளவு மட்டும் சீரமைத்துவிட்டு மீதமுள்ள பரப்பில் தனியார் முதலீட்டில் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மாநகராட்சி முயற்சி எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கும் தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் ஆணை வெளியிட்டுள்ளது.
இதுபோலவே செம்மஞ்சேரியில் தாமரைக்கேணி நீர்நிலையை ஆக்கிரமித்து புதிதாக காவல் நிலையம் கட்டினர். அதை அறிந்து காவல் நிலையம் செயல்பட தடைவிதிக்க கோரி அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஐஐடி ஆய்வுக்குழுவிடம் அறிக்கை கேட்டது.
அறிக்கையில், ``நீர் நிலையை மீட்க காவல் நிலையத்தை மட்டுமல்ல; பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர். இதையடுத்து காவல் நிலையம் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
நீர் நிலைகள் அவற்றின் தன்மையோடு பாதுகாக்கப்பட வேண்டும். நீர்நிலைகளை வேறு எதற்காகவும் மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவிலேயே இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் பொழுதுபோக்கு பூங்கா, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏரி பகுதிகளைப் பயன்படுத்துவது சரியல்ல. இதுபோன்ற விவகாரங்களில் மேலும் மேலும் வழக்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது. எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணை நிறைவேற்றப்பட வேண்டும்.

ஏரியின் பகுதிகள் ஏரியாகத்தான் இருக்க வேண்டும். அவற்றின் அளவை மாற்றியோ, குறைத்தோ அந்த இடங்களில் வேறு கட்டுமானங்களைச் செயல்படுத்தக் கூடாது. நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டிய அரசுத் துறைகளே ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன என்றால், பிறகு தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை எப்படி அது தட்டி கேட்கும்?" என்கிறார் ஆதங்கத்துடன்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடக்கவிருந்த நிலையில் பல்வேறு வழக்குகள் இருப்பதால், மார்ச் 3-க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் சொன்னார்.