Published:Updated:

செல்லபிராணிகள் மூலம் கொரோனா தொற்றுமா... ஆய்வுகள் சொல்வது என்ன?

செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள்

கடந்த வியாழனன்று தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட 17 வயதான பொமரேனியன், வெளியே வந்த இரண்டே நாள்களில் மரணித்துவிட்டது. ஆனால், அதன் மரணத்துக்குக் காரணம் கொரோனா வைரஸ் இல்லையென்று தெரியவந்துள்ளது.

இன்றைய நிலவரத்திற்கு, எங்கு திரும்பினாலும் கொரோனா வைரஸ் குறித்த பேச்சுதான். காட்டாற்றைப் போல் பரவிக்கொண்டிருக்கும் தகவல்களுக்கு நடுவே, எது நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான தகவல், எது பொய்யான வதந்தி என்று பிரித்தறிவதே பெரும் பிரயத்தனமாக நிலவுகிறது. இந்நிலையில், நாம் வளர்க்கின்ற நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் வழியே கொரோனா பரவுவதாகப் புதிய பீதியொன்று கிளம்பவே, உலகளவில் உயிர் மேலுள்ள ஆசையில் பலரும் தங்கள் செல்லப்பிராணிகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அந்த அச்சத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கிடைத்துள்ள சில தகவல்கள் நமக்கு ஒரு பக்கம் நம்பிக்கையைக் கொடுக்கின்றன. அதேநேரம், மற்றொரு புறம் நாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையும் மருத்துவர்கள் வழங்குகிறார்கள். அவை குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக அலசுவோம்.

பிப்ரவரி மாத இறுதியில், ஹாங்காங்கில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற வகை நாய் கொரோனா தாக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டுத் தனிமையில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 17 வயது மதிக்கத்தக்க பொமரேனியன் நாய் ஒன்றும் அதனோடு தனிமையில் வைக்கப்பட்டது. இரண்டுமே, கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவுகள் வெளியானதால் மேலும் தனிமையிலேயே அவை கண்காணிக்கப்பட்டன.

பொமரேனியன் நாயினுடைய எசமானருக்கும் கொரோனா இருப்பது உறுதியானதால், அவர் மூலமாக அதற்கும் பரவியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதற்குக் கொரோனாவால் எந்தப் பாதிப்பும் இருந்தது போல் ஓர் அறிகுறி கூடத் தென்படவில்லை. இன்னும் செல்லப்பிராணிகளிடமிருந்து இந்தத் தொற்று மனிதர்களுக்குப் பரவும் என்ற தகவல் உறுதியாகவில்லை. ஆகவே, ஹாங் காங் அரசாங்கம் மக்களிடம் தங்கள் செல்லப்பிராணிகளைக் கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மன் ஷெப்பர்டுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தாலும், அதனிடம் நோய்த் தாக்குதலுக்குரிய எந்தவித அறிகுறியுமே தென்படவில்லை என்று அதைப் பரிசோதித்த ஹாங் காங் விவசாய, மீன் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பொமரேனியனிடமும் அதே கதைதான். இரண்டுமே வைரஸ் தாக்குதலில் பாசிட்டிவ் என்று காட்டினாலும்கூட, அதற்குரிய அறிகுறிகளையே காட்டாததால், அவற்றால் நாய்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றே வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தொடர்ந்து வளர்ப்புப் பிராணிகளைக் கண்காணித்துக்கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் அறிவித்துள்ளனர்.

பூனை
பூனை

கடந்த வியாழனன்று தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட 17 வயதான பொமரேனியன், வெளியே வந்த இரண்டே நாள்களில் மரணித்துவிட்டது. அதன் மரணத்துக்குக் காரணம் கொரோனா வைரஸாக இருக்கலாம் என்று பலரும் அச்சம் தெரிவிக்கவே அதைப் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். ஆனால், அந்த நாயின் உரிமையாளர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதன் வயது காரணமாக, தனிமைப்படுத்தலில் ஏற்பட்ட மன அழுத்தமே அந்த இறப்புக்குக் காரணம் என்று கூறி பிரேத பரிசோதனை செய்ய அவர் அனுமதி மறுத்துவிட்டார். ஹாங் காங் விலங்கு நல வாரியமும் கூட, அந்தப் பொமரேனியனிடம் வைரஸ் பாதிப்புக்கான அடையாளமே தென்படாததால் அதுதான் காரணமாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளது.

கொரோனா.. இத்தாலியில் நடப்பது என்ன?! - தமிழரின் நேரடி ரிப்போர்ட் #MyVikatan

அதேபோல், பூனைகளிடமும் இதுவரை கொரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் செல்லப்பிராணிகளைக் கைவிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டுமென்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க விலங்கு மருத்துவர்கள் கூட்டமைப்பு, பாரிஸில் செயல்படுகின்ற விலங்குகள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச அமைப்பு, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க மையம் உட்படப் பல்வேறு சர்வதேச மனித மற்றும் விலங்கு மருத்துவ அமைப்புகள் Covid-19 என்ற கொரோனா தொற்று நோய் செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கோ மற்ற விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதைப் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.

தனிமைப்படுத்துதல்
தனிமைப்படுத்துதல்

செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதாக சமூக வலைதளங்களிலில் தகவல்கள் வலம்வர, இந்த விஷயம் உலகம் முழுக்கத் தீயாய்ப் பரவவே, அனைவரும் செல்லப்பிராணிகளைக் கண்டு அஞ்சத் தொடங்கிவிட்டனர். ஆனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த அமைப்புகள் நடத்திய ஆய்வுகள், மனிதர்கள் மூலமாக நாய்கள், பூனைகளுக்கோ அவற்றின் மூலமாக மனிதர்களுக்கோ கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றன. இருப்பினும் ஆதாரங்கள் கிடைக்காததால் முன்னெச்சரிக்கையாக இருக்கக் கூடாது என்றில்லை. அதனால், மக்கள் ஓரளவுக்கு எச்சரிக்கையாக நடந்துகொள்வது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணத்திற்கு, நாய்களிடம் அதிகம் நெருங்கிக் கொஞ்சிக் கொண்டிருக்காமல், அவற்றை முத்தம் கொடுக்க விடாமல் பார்த்துக்கொள்ளலாம். சராசரி மக்களும் சரி, கொரோனா அறிகுறிகளால் தனிமையில் வாழ்பவர்களும் சரி சிலவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

  • செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால், தங்கள் வளர்ப்பு உயிரினங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். அவற்றைக் கட்டிப்பிடித்து கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது, உணவைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைச் செய்யாமல் இருக்கலாம். அவற்றைப் பராமரிக்க வேறு யாருடைய உதவியையாவது நாடுவது நல்லது.

  • மக்கள், தங்கள் செல்லப்பிராணிகளோடு உறவாடும்போது முகத்திற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உறவாடிய பின்னரும் கைகளை, சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
  • தங்கள் நாய் அல்லது பூனையின் மருத்துவப் பதிவுகளைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். சமீபத்திய தேதி வரையிலான அவற்றின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்துக் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்வது நல்லது.

  • அவற்றுக்குத் தேவைப்படுகின்ற உணவு மற்றும் இதர பொருள்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அதற்காக வெளியே செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

  • அவற்றுக்குத் தேவைப்படுகின்ற தடுப்பூசிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இதுவரை போட்டிருக்க வேண்டிய தடுப்பூசிகள் முறையாகப் போடப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இவையெல்லாவற்றையும் தாண்டி, விலங்கு மருத்துவரிடம் உங்கள் நாயையோ பூனையையோ ஒருமுறை உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்த வைரஸ் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியும்வரை, உங்கள் வளர்ப்புப் பிராணிகளோடு அளவான உறவாடலை மட்டுமே வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதற்காக, அவற்றைக் கைவிட்டு வெளியே துரத்திவிட வேண்டாம். அந்த அளவுக்கு ஆபத்து ஏதுமில்லை என்று சர்வதேச மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்பு
அன்பு

IDEXX என்ற ஆய்வு நிறுவனம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களையும் பூனைகளையும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அவற்றில் ஒன்றுக்குக்கூட கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

தனிமையில் வாழவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நாள்களில், நம் செல்லப்பிராணிகளே நமக்குப் பெரும் ஆறுதலைத் தருகின்றன. அவை, ஒருவித பாதுகாப்பு உணர்வையும் அன்பையும் நம்மிடையே பகிர்ந்துகொள்வதன் மூலம் நம் மனதில் அமைதியை நிலைநாட்டுகின்றன. அவற்றைக் கைவிட வேண்டாம். அவற்றோடு நீங்கள் செலவு செய்யாமல் விட்ட நேரங்களை இந்தக் காலகட்டத்தில் செலவழித்து அவற்றின் அன்பிற்குத் தகுதியானவர்களாக மாற முயலுங்கள். அதுவே, அவற்றின் நன்றிக்கு நாம் திருப்பிச் செலுத்துகின்ற நன்றிக்கடன்.

அடுத்த கட்டுரைக்கு