Published:Updated:

அதிகரிக்கும் யானை - மனித எதிர்கொள்ளலுக்கு தீர்வு என்ன? - ஒரு விரிவான அலசல்!

காட்டு யானை
காட்டு யானை ( Pixabay )

காட்டுயிர்களால் ஏற்படுகின்ற சேதங்களுக்கு அதிக இழப்பீடுகள் வழங்கப்பட்ட மாவட்டங்களில்தான் அதிகளவிலான யானை-மனித எதிர்கொள்ளல் பிரச்னைகளும் பதிவாகியுள்ளன என்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

யானை-மனித எதிர்கொள்ளல் பிரச்னை, நாடு முழுக்கக் காட்டின் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. யானைகள், அவற்றின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கும். இந்நிலையில், உணவுக்காகப் பயணிக்க யானைகளுக்குப் போதிய வனப்பரப்போ, மற்ற காடுகளுக்குப் பயணிக்கத் தேவைப்படுகின்ற வழித்தடமோ இல்லையென்றால், அருகிலிருக்கும் ஊர்களிலுள்ள விவசாய நிலங்களுக்கு உணவு தேடி வருகின்றன. அப்படி வரும்போது யானைகள், மனிதர்கள் இரண்டு தரப்புக்குமே சேதங்கள் உண்டாகின்றன. இந்தப் பிரச்னை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

யானைகள்
யானைகள்
Pixabay

அதைச் சரிசெய்யக் காட்டுயிர் ஆய்வாளர்களும் பல்வேறு ஆய்வுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படிச் சமீபத்தில், கேரளாவில் காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் நடந்த பகுதிகளில், ஏற்படும் சேதங்களுக்காக மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைகளை அடிப்படையாக வைத்துச் சில தரவுகளைச் சேகரித்துள்ளனர். தென்னிந்தியாவில்தான் யானைகளுடைய எண்ணிக்கை அதிகமாக உள்ளது. யானை எதிர்கொள்ளல் பிரச்னைகளால் சேதங்களைச் சந்திக்கின்ற மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளைப் பின்தொடர்ந்து சென்றால், எங்கு அதிகளவில் இந்தப் பிரச்னை நிகழ்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்ற கோணத்தில் இந்த ஆய்வில் மேற்கொண்டுள்ளனர்.

சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கின்ற அசோகா (ATREE) என்ற ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த அஷ்மிதா சென்குப்தா என்பவருடைய குழுதான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. கேரள வனத்துறையிடமிருந்து 14 மாவட்டங்களைச் சேர்ந்த, காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் சம்பந்தப்பட்ட, 2009 முதல் 2015 வரையிலான 17,216 இழப்பீடு வழக்குகள் குறித்த தரவுகளை அவர்கள் தொகுத்தார்கள்.

அதில், 16,312 பதிவுகளில் எந்த விலங்குக்கும் மனிதர்களுக்கும் இடையில் எதிர்கொள்ள நிகழ்கின்றது என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 48 சதவிகிதம் வழக்குகளில் யானைகளோடுதான் அந்தத் தொடர்பு இருந்துள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படையில், மொத்த காட்டுயிர்-மனித எதிர்கொள்ளலில் ஆண்டுக்குச் சுமார் 43.2 சதவிகிதம் யானை-மனித எதிர்கொள்ளல் பிரச்னை நடப்பதாகக் கூறுகின்றது அவருடைய குழு. வயநாடு, கன்னூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் அதிகமாக நடப்பது, சேகரித்த தரவுகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. இதன்மூலம், எந்தெந்த மாவட்டங்களில் அதிகளவில் மக்கள் சேதங்களைச் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தால், அதன்மூலம், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எங்கெல்லாம் முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதைப் புரிந்துகொண்டு செயல்பட உதவியாக இருக்கும் என்பதே இந்த ஆய்வுக்குழுவின் நோக்கம்.

யானை மனித எதிர்கொள்ளல்
யானை மனித எதிர்கொள்ளல்
Pixabay

இந்தியக் காடுகளில் வாழ்கின்ற யானைகளில் பெருமளவிலானவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியேதான் அதிகமாக உணவு தேடுவதாகக் குறிப்பிடுகின்றது இந்த ஆய்வறிக்கை. அதனால், யானை-மனித எதிர்கொள்ளலும் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவிலுள்ள 29,964 யானைகளில் 48 சதவிகிதம் தென்னிந்தியாவில்தான் வாழ்கின்றன. யானை-மனித எதிர்கொள்ளல் குறித்த ஆய்வு நடத்தப்பட்ட கேரள மாநிலம், 5,706 யானைகளோடு அதிக எண்ணிக்கையைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது.

காட்டுயிர்களால் ஏற்படுகின்ற சேதங்களுக்கு அதிக இழப்பீடுகள் வழங்கப்பட்ட மாவட்டங்களில்தான் அதிகளவிலான யானை-மனித எதிர்கொள்ளல் பிரச்னைகளும் பதிவாகியுள்ளன என்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. யானைகளால் ஏற்படுகின்ற சேதங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகளில் மட்டுமல்ல, அவற்றுக்கு எதிராகப் பதிவான வழக்குகளும் அந்த மாவட்டங்களில்தான் அதிகமாகப் பதிவாகியுள்ளன. விவசாய நிலங்களில் அதிகச் சேதங்களை விளைவிக்கக் கூடியவையாக அறியப்படும் முதல் மூன்று விலங்குகளில் யானைகள்தான் முன்னிலையில் இருக்கின்றன என்பதை அஷ்மிதா சென்குப்தா தலைமையிலான குழுவினுடைய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கேரளாவில் 2009 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், பதிவு செய்யப்பட்ட16,948 வழக்குகளுக்கு 21,77,56,915 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 3,21,08,131 ரூபாய் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் மொத்தக் காட்டுயிர்-மனித எதிர்கொள்ள சேதங்களில் 13 சதவிகிதம் யானைகள் பங்கு வகிக்கின்றன. மொத்த வழக்குகளில் 84 சதவிகிதமும் வழங்கப்பட்ட இழப்பீடுகளில் 67 சதவிகிதமும் பயிர்ச் சேதங்கள் பங்கு வகிக்கின்றன. அதேபோல, வழக்குகளிலும் இழப்பீடுகளிலும் மனித உயிரிழப்புகள் முறையே 2.2 சதவிகிதமும் 20 சதவிகிதமும் பங்கு வகிக்கின்றன.

இதுபோல் பல ஆண்டுகளுக்குரிய இழப்பீடு தரவுகளைச் சேகரித்து, அவை எங்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்று அந்தந்தப் பகுதிகளை வரைபடமாக்கினால், பிரச்னை எங்கிருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.
சந்தீப் குமார் திவாரி, ஆசிய யானைகள் குறித்த வல்லுநர் குழுவான IUCN SSC என்ற அமைப்பினுடைய திட்ட மேலாளர்
கோவை:`இப்போதும் பயமாகத்தான் இருக்கு!' - கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜா யானை

இதுபோன்ற எதிர்கொள்ளல் பிரச்னைகளை விரைந்து கவனிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஒரு வழிமுறையை இந்த ஆய்வறிக்கை முன்வைக்கின்றது. இப்படியான சேதங்களுக்குப் பிறகு இழப்பீடுகளை வழங்குவதோடு நிறுத்திவிடக் கூடாது. மாறாக, அந்தந்த மாவட்டங்களில் இதனால் பாதிக்கக்கூடிய நிலையில் வாழ்கின்ற மக்களுக்கு இந்தப் பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். பின்னர், பல்வேறு சூழலியல் அளவுகோல்களின் அடிப்படையில் தரவுகளைச் சேகரிப்பது, கலந்தாய்வுகளில் ஈடுபடுவது, யானை-மனித எதிர்கொள்ளலினால் சேதங்களைச் சந்திக்கின்ற, யானைகளோடு தங்கள் வாழ்விடத்தை, நிலப்பகுதியைப் பகிர்ந்துகொள்கின்ற மக்களோடு கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதன்மூலம் தீர்வுக்கான வழிகளைக் கண்டறியலாம் என்று அஷ்மிதா சென்குப்தா குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வனச் சரகங்களின் இழப்பீட்டுத் தரவுகளை ஒன்றாகத் தொகுக்கும்போது, இந்தப் பிரச்னை குறித்த நிலவியல் ரீதியிலான நுண்ணறிவைப் பெற முடியுமென்று இந்த ஆய்வுகுறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2017 முதல் 2031 வரையிலான, இந்தியாவின் தேசிய காட்டுயிர் பாதுகாப்புச் செயல்திட்டம், இதில் குறிப்பிட்டுள்ளதைப் போன்ற நிலவியல் அடிப்படையிலான பாதுகாப்பு முறையையே காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் பிரச்னையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகப் பரிந்துரைக்கின்றது. ஆசிய யானைகள் குறித்த வல்லுநர் குழுவான IUCN SSC என்ற அமைப்பினுடைய திட்ட மேலாளரான சந்தீப் குமார் திவாரி, இதுகுறித்து மங்காபே என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "இதுபோல் பல ஆண்டுகளுக்குரிய இழப்பீடு தரவுகளைச் சேகரித்து, அவை எங்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்று அந்தந்தப் பகுதிகளை வரைபடமாக்கினால், பிரச்னை எங்கிருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதன்மூலம், காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் நடைபெறுகின்ற முக்கிய இடங்களை, சேதம் எந்த விலங்கினால் ஏற்படுகின்றது என்பதை, பயிர்ச் சேதங்களின் அளவு, பாதிப்புகள் ஏற்படுகின்ற காலகட்டம், அந்தப் பகுதிகளில் இதைச் சமாளிக்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், அதன்மூலம் கிடைத்த பலன்கள் போன்றவற்றை நம்மால் சேகரிக்க முடியும்" என்று கூறியுள்ளார். அவர் சொல்வதைப் போன்ற தரவுகளைச் சேகரித்தால், யானை-மனித எதிர்கொள்ளலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னுரிமை தேவைப்படுகின்ற இடங்களில் நம்மால் நிச்சயம் வழங்க முடியும்.

காட்டுயிர் பாதுகாப்பு
காட்டுயிர் பாதுகாப்பு
Pixabay

கேரளாவில், உணவு தேடி வருவதாலேயே பெரும்பாலான சேதங்களைக் காட்டுயிர்கள் ஏற்படுத்துகின்றன. எதிர்கொள்ளல் பிரச்னை அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் பதிவான மொத்த வழக்குகளில், யானைகளால் பிரச்னை ஏற்படுவதுதான் 57 முதல் 71 சதவிகிதம் வரை சேதங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. பாலக்காடு, கன்னூர், வயநாடு ஆகிய மாவட்டங்களை மேற்கோள் காட்டும் ஆய்வாளர்கள், அந்த மாவட்டங்களைப் போல, அதிக யானை-மனித எதிர்கொள்ளலைச் சந்திக்கும் மாவட்டங்களுக்குத் தற்காப்பு நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.

யானைகளுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பது, குறிப்பிட்ட பகுதியில் மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பது, இயற்கை வளப் பற்றாக்குறை, வனப்பரப்பு பற்றாக்குறை என்று பல காரணிகள், யானை-மனித எதிர்கொள்ளலுக்குக் காரணமாக அமைகின்றன. இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள, பயிரிடும் முறை, ஒவ்வோர் ஆண்டும் பருவமழை பெய்யும் காலகட்டம், எதிர்கொள்ளல் ஏற்படுகின்ற பகுதியிலுள்ள நீர்நிலைகள், யானைகளுடைய பழக்க வழக்கங்கள் போன்றவை உதவுவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

பொதுவாக, இழப்பீடுகளை வழங்குவது மாநில அரசுகள்தான். அப்படி வழங்கப்படும் இழப்பீடுகளைப் பற்றிய தரவுகள், காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் நடைபெறுவதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும். அது, இந்திய விவசாயிகளுக்கும் சரி யானைகளுக்கும் சரி பல ஆண்டுகளாகப் பெரியளவில் இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும்.

புலிகள் அதிகரித்துள்ளன... ஆனால் அவற்றுக்கான வாழிடம்..? - சர்வதேசப் புலிகள் தினப் பகிர்வு!

இழப்பீடுகளைப் பின்தொடர்வதன் மூலம், இதற்குத் தீர்வு காண்பது நீண்டகாலச் செயல்முறை. இப்போது உடனடியாகச் செய்ய வேண்டியது, இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதுதான் என்று இதைப் பற்றிப் பேசிய சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ஹரிஷ் வாசுதேவன் குறிப்பிடுகிறார். அவர், "ஒருவர் உயிரிழந்தால், அவருடைய குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியாக அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கணக்கிட வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான இழப்பீடு முடிவு செய்யப்பட வேண்டும்" என்கிறார்.

யானை-மனித எதிர்கொள்ளல் என்பது தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான பிரச்னை. அதைச் சமாளிக்க மேற்கொள்ளப்படுகின்ற, மின் வேலிகள் அமைப்பது, அகழி வெட்டுவது, யானைகளைப் பட்டாசு வைத்து விரட்டுவது போன்ற நடவடிக்கைகள் நிரந்தரத் தீர்வாக இருக்காது என்பதைக் காட்டுயிர் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவையெல்லாம் தற்காலிகப் பலன்களைக் கொடுத்தாலும், நீண்டகாலத் தீர்வுகளை வழங்கக்கூடிய திட்டங்களைத் தீட்டுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முதல்கட்டத் திட்டமிடுதல் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கான வழிகாட்டிதான் இந்த ஆய்வு. இதைக் கேரள அரசாங்கம் மட்டுமின்றி, அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களும் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முயல வேண்டும்.

நீர்நிலைகள்
நீர்நிலைகள்
Dilantha Perera/ Wikimedia Commons

ஒரு யானை பயிரை மேயும்போது, ஒரு விவசாயி அதை எதிரியாகத்தான் பார்ப்பார். ஏனென்றால், அவருடைய வாழ்வாதாரம் அங்கு பாதிக்கப்படுகின்றது. அதேநேரம், காடுகளின் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வரும்போது, வேறு வழியின்றிக் காடுகளை விட்டு வெளியே உணவுதேடி வரும் யானைகளுக்கும் பயிர்களைப் பார்க்கையில், அது உணவாகத்தான் தெரியுமே தவிர, ஒரு விவசாயினுடைய வாழ்வாதாரமாகத் தெரியாது. இப்படிப்பட்ட முரண்பாடுகளுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலுக்குக் காரணம், காடுகளின் பரப்பளவைக் குறைக்கக்கூடிய ஆக்கிரமிப்புத் திட்டங்களும் அதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையும்தான்.

இவை எங்கெல்லாம் அதிகமாக இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, எங்கெல்லாம் யானைகள் அதிகமாக வெளியே வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த ஆய்வு வழி காட்டுகிறது.

அடுத்த கட்டுரைக்கு