Published:Updated:

80 கோடி உயிரினங்களை அழித்த ஆஸ்திரேலியக் காட்டுத் தீ... உலகுக்கு உணர்த்துவது என்ன?

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டது ஆஸ்திரேலியா. ஆனால், ஒட்டு மொத்த தேசத்திலும் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

ஆஸ்திரேலியா என்றவுடன் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது கங்காரு; தரமான சில கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்; சுத்தமான கடற்கரை; சிட்னி, மெல்போர்ன் போன்ற அழகிய நகரங்கள்தான். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக ஆஸ்திரேலியா குறித்து உலகம் முழுதும் பேசப்படுவதற்குக் காரணம் அங்கு தொடர்ந்து எரியும் காட்டுத் தீ.

இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டது ஆஸ்திரேலியா. ஆனால், ஒட்டுமொத்த தேசத்திலும் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். ஆம், சுமாராகத் தமிழகத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி எனக் கொள்ளலாம். இதில் ஏறத்தாழ 89% மக்கள் நகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் 62% மக்கள் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், பெர்த், அடிலெய்டு என்கிற 5 நகரங்களில் வாழ்கின்றனர். தனி நபர் ஆண்டு வருமானத்தில் உலகின் பணக்கார நாடுகளில் தொடர்ந்து முன் வரிசையில் இடம் பிடிக்கும் நாடு. இரும்பு, தங்கம், நிலக்கரி எனப் பல கனிம வளங்களைத் தன்னகத்தே கொண்ட நாடு.

கங்காரு
கங்காரு

உண்மையான, ஆஸ்திரேலியா என்பது அபாரிஜின்கள் எனப்படும் பூர்வகுடி மக்களின் தேசமாகும். இங்கு 18-ம் நூற்றாண்டு முதல் குடியேறிய ஐரோப்பிய குடியேற்றவாசிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பூர்வகுடியினரை அழித்து, கிட்டத்தட்ட ஒரு புதிய தேசத்தை நிர்மாணித்தனர். ஒரு காலத்தில், ஆஸ்திரேலியா முழுக்க வாழ்ந்த பூர்வகுடிகளின் மக்கள்தொகை, இன்றைய மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. வரலாற்றின் ஒரு மாபெரும் சோகத்தின் மீது ஏறித்தான் பயணிக்கிறோம் என்கிற எண்ணம் இன்றைய ஆஸ்திரேலியர்களின் மனதை ஆட்கொண்டிருப்பதால்தான், பல ஆஸ்திரேலியர்கள் சற்றுக் கூடுதல் கனிவுடன் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் 18% நிலப்பகுதி அடர்ந்த பாலைவனமாக உள்ளது. மேலும் இன்னும் ஒரு 35% பகுதி மழை மிகச் சொற்ப அளவே பொழியும் பாதி-பாலைவனப் பகுதியாகும் (Semi arid desert).

இவ்வளவு சிறப்புகள், சவால்கள், வளங்கள் இருந்தாலும், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாத நிலையை ஆஸ்திரேலியா இந்த ஆண்டு சந்தித்து வருகிறது.

சிட்னி பல்கலைக்கழகத்தின் சூழலியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சமீபத்திய காட்டுத்தீயில் 80 கோடிக்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்கிற தகவல் அனைவரையும் வெகுவாகப் பாதித்து இருக்கிறது. இவ்வளவு விலங்குகள் இந்தத் தீயில் அழிந்துள்ளனவா எனப் பலரும் ஆச்சர்யப்பட்டனர். இந்தத் தகவலை வெளியிட்டது சிட்னி பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை. அந்தத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் டிக்மேன், இந்த எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அது பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ
ஆஸ்திரேலியக் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2007-ம் ஆண்டு உலகக் காட்டுயிர் மற்றும் இயற்கை நிதியம் (world wide fund for nature) அமைப்பு, பிற ஆய்வாளர்களுடன் சேர்ந்து 'நியூ சவுத் வேல்ஸ்ஸில் அழிக்கப்படும் காடுகளும் காட்டுயிர்கள் மீது அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கை தயாரித்தது. அந்த ஆய்வறிக்கையில் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் (2.47 ஏக்கர்) சராசரியாக 17.5% பாலூட்டிகள், 20.7% பறவைகள், 129.5% ஊர்வன ஆகியவை வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள எண்ணிக்கையைத் தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பரப்பளவுக்குக் கணக்கிட்ட போதுதான் 80 கோடி என்ற எண்ணிக்கை வந்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. மேலும், இந்த எண்ணிக்கையில் பூச்சிகள், வவ்வால், தவளை அடங்காது எனவும் கூறும் கிறிஸ், "உயிரிழந்த உண்மையான விலங்குகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்" என்கிறார். பேராசிரியர் கிறிஸ், 30 வருடங்களுக்கும் மேலாக சூழலியல், ஆஸ்திரேலியப் பாலூட்டிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுச் சங்கிலியில் உள்ள பல உயிரினங்கள் அழிந்து இருப்பதால், உயிர் பிழைத்த மற்ற விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் அதுவும் உயிரிழக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே, மேலே குறிப்பிட்ட 80 கோடி எண்ணிக்கை நூறு கோடிக்கும் மேலே செல்லவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று கூறுகிறது சிட்னி பல்கலைக்கழகம்.

மக்கள் இவ்வாறு அவதியுற்றுக்கொண்டிருக்க, ஹவாய் தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்த பிரதமர் ஸ்காட் மாரிசன் அந்நாட்டு ஊடகங்களால் வெளுத்து வாங்கப்பட்டார்.
6 மில்லியன் ஹெக்டேர் காட்டை எரித்த ஆஸ்திரேலிய காட்டுத் தீ! 

11 ஜனவரி 2020 தேதியிட்ட அரசு ஊடகம் ABC news, இதுவரை ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏறத்தாழ 11 மில்லியன் ஹெக்டேர் காடுகள், நூறு கோடி விலங்குகள், 23 மனிதர்கள், 2000 வீடுகள் அழிந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது. 11 மில்லியன் ஹெக்டேர் என்பது பல நாடுகளின் ஒட்டு மொத்தப் பரப்பளவை விடப் பெரியது. இங்கு எரியும் காட்டுத்தீ அனைத்தும் இயற்கையாய் நிகழ்வதல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். காட்டில் மக்களின் பொறுப்பற்ற செயல்களான வேண்டுமென்றே தீ வைத்தல், எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுதல் எனப் பல காரணிகள் உள்ளன. எத்தனை சதவிகிதம் இயற்கையாகத் தீ பிடிக்கிறது, செயற்கையாக மனிதர்களால் கொளுத்திவிடப்படுகிறது என்பவை ஒரு விவாதப் பொருளாகவே தொடர்கிறது.

வறண்டகாலச் சூழ்நிலையில் ஏற்படும் மின்னல் அங்குள்ள எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமுள்ள தைல (Eucalyptus) மரங்களை எளிதில் தீப்பிடிக்க வைத்துவிடும். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருப்பதால் அதுவே தீப்பிடித்து எரிந்து தானாக அணைந்து விடும். சில நெருப்புகள் வாரக் கணக்கில் கட்டுக்குள் அடங்காமல் எரிந்துகொண்டேயிருக்கும். மனித முயற்சியில் தீயை அணைக்க ஓரளவுக்கே முடிகிறது.

மனிதச் செயல்களினாலும் பெட்ரோல், டீசல், நிலக்கரி மின்சாரப் பயன்பாடுகள் மூலமும் அதிக கார்பன் வெளியிடப்படுகிறது. இந்த கார்பன் பூமியில் அளவுக்கு அதிகமாக வெப்பத்தை அதிகரிக்கிறது என்பதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். பல நாடுகளும் பல தலைவர்களும் இதை ஏற்றுக்கொண்டாலும் சில நாட்டின் தலைவர்கள் இதை நம்பாமல் இருக்கின்றனர். மேலும், நிலக்கரி மின்சாரம், பெட்ரோல் பயன்பாடு போன்றவற்றை குறைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது மக்களிடையே மிகப்பெரும் கோபத்தை வரவழைக்கிறது. இது போன்ற ஆபத்து காலங்களில், மக்களின் கோபம் அதிகம் வெளிப்படுகிறது.

இயற்கைப் பேரிடர்
இயற்கைப் பேரிடர்

மக்கள் இவ்வாறு அவதியுற்றுக்கொண்டிருக்க, ஹவாய் தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்த பிரதமர் ஸ்காட் மாரிசன் அந்நாட்டு ஊடகங்களால் வெளுத்து வாங்கப்பட்டார். நாடு திரும்பியவுடன், ஒரு தீயணைப்பு முகாமுக்குச் சென்ற அவரிடம், கை கொடுக்காமல் மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இன்னொரு தீயணைப்பு வீரர், பிரதமர் தன் முன்னால் வந்து நின்றாலும் முகத்தை நேரே நோக்காமல், எழுந்து கூட நிற்காமல் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். பின்னர், அவர் வந்த வண்டி கிளம்பியவுடன் அனைவரும் ஓலமிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சபையில் உபயோகிக்க முடியாத சில வார்த்தைகளையும் மக்கள் அவர் மீது நேரடியாகவே உபயோகித்தனர். சூழலியல் ஆய்வாளர்கள், பொது மக்கள், சூழலியல் போராட்டக்காரர்கள் போன்றவர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் பிரதமர் மீதான எதிர்ப்பு மேலோங்கியுள்ளது. எதிர்ப்பு அதிகம் வலுத்துள்ள நிலையில், இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய அரசு முறைப் பயணத்தையும் இப்போது அவர் ரத்து செய்துள்ளார்.

இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், குறைந்த மக்கள்தொகை கொண்ட, வளர்ந்த பணக்கார நாடான ஆஸ்திரேலியாவாலேயே இதுபோன்ற பருவ நிலையினால் வரும் இயற்கைப் பேரிடர்களைக் கையாள முடியவில்லை. பருவ நிலை மாற்றத்தின் காரணமாக உலகெங்கும் வெப்பநிலை கூடிக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக வரும் கடும் மழை, கடும் வெப்பம், காட்டுத்தீ போன்ற அபாயங்களை எவ்வளவு சக்தி வாய்ந்த அரசு இயந்திரமாக இருந்தாலும், அதைச் சந்திக்கக் கடும் இன்னல் படுகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கே இந்த கதி என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கதி என்ன?

காட்டுத் தீ
காட்டுத் தீ
கருகிய கங்காருகள், தீயணைக்க பறக்கும் ஹெலிகாப்டர்கள்; நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ! #PhotoAlbum

அரசுகளைக் குறை கூறுவதன் மூலம் மட்டும் நாம் இதிலிருந்து விடுபட்டுவிட முடியாது. நாம் பயன்படுத்துகின்ற பெரும்பான்மையான பொருள்கள் மின்சக்தியைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மின்சக்தி, நிலக்கரி போன்ற கரிமத்தை வெளியேற்றும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் போது, இந்தப் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு, நாமும் ஒரு காரணம் ஆகிறோம் என்பதை மறக்கக் கூடாது.

நம் அடிப்படைத் தேவை போக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் இந்தப் பூமியின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் உணர வேண்டும். அது நமக்குத் தேவைதானா என்கிற சுய பரிசோதனையை நாம் செய்ய வேண்டும். இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில், நம்முடைய நுகர்தலுக்காக நாம் கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு துணியும் பொருளும் நம் மீதும் நம் தலைமுறை மீதும் நாமே வைக்கும் கொல்லி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆஸ்திரேலிய கங்காரு
ஆஸ்திரேலிய கங்காரு

உலகில் வாழ்வதற்கு மிகச் சிறந்த நகரங்கள் என்ற பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடங்களில் இருந்த சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகர மக்கள் இன்று காட்டுத்தீயினால் உண்டான மாசுபடுத்தப்பட்ட காற்றை சுவாசித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டும் தஞ்சமடைய இடம் இல்லாமல் கடலோரங்களில் பல நாள்களாகக் கொட்டகை கட்டிக்கொண்டும் பொழுதைக் கழிக்கின்றனர்.

இவையனைத்தும் நமக்கு எடுத்துச் சொல்லும் கருத்து ஒன்று தான். அது இயற்கையை ஒரு போதும் அடக்கி ஆள முடியாது, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மாற்றம் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும். நம்முடைய நுகர்தலை நாம் முதலில் குறைக்க வேண்டும்.

- பொன்ராஜ் தங்கமணி, மின்னியல் பொறியாளர், ஆஸ்திரேலியா

அடுத்த கட்டுரைக்கு