Published:Updated:

10,000 ஒட்டகங்களைக் கொல்லப்போகும் ஆஸ்திரேலியா! காட்டுத்தீதான் காரணமா?

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு முன்னால், இது தெரிந்ததும் உங்களுக்கு எழுகின்ற ஒரு கேள்விக்கு விடையளித்தாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் ஒட்டகம் இருக்கிறதா?

ஒட்டகம், ஆஸ்திரேலியா
ஒட்டகம், ஆஸ்திரேலியா ( Pixabay )

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதி, மாதக்கணக்காக எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்கு இரையாகிக்கொண்டிருக்கின்றன. நெருப்பை அணைக்க ஆஸ்திரேலியாவின் தீயணைப்புப்படை மொத்தமும் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நெருப்பை அணைக்கத் தேவைப்படும் நீர் பற்றாக்குறையாகிக் கொண்டிருப்பதாகவும் அதற்குக் காரணம் தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டகங்கள்தான் என்றும் கூறி அரசு ஹெலிகாப்டர்களில் கைதேர்ந்த வேட்டைக்காரர்களை வைத்து 10,000 ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்லப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு முன்னால், இது தெரிந்ததும் உங்களுக்கு எழுகின்ற ஒரு கேள்விக்கு விடையளித்தாக வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் ஒட்டகம் இருக்கிறதா?

ஆஸ்திரேலிய காட்டுத்தீ
ஆஸ்திரேலிய காட்டுத்தீ

ஆம், இருக்கிறது. இயற்கையாக அல்ல, வலிய அறிமுகப்படுத்தப்பட்டவை. அரேபிய தீபகற்பம், இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. 1870 முதல் 1920 வரை சுமார் 20,000 ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. கூடவே அவற்றைப் பராமரிக்க 2,000 ஒட்டகக் காப்பாளர்களும் வர வைக்கப்பட்டனர். நிலத்துக்குத் துளிகூட சம்பந்தமில்லாத ஒட்டகம் இப்போது ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறி மற்ற உயிரினங்களுக்குப் பிரச்னைகளை விளைவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வேட்டையில் 5,000 முதல் 10,000 ஒட்டகங்கள் வரை குறி வைக்கப்பட்டுள்ளன.

நீர் கிடைக்கும்போது தேவைக்கும் அதிகமாகவே குடித்து சேமித்து வைத்துக்கொண்டு வாழும் ஒட்டகங்களால், ஆஸ்திரேலியாவின் தட்பவெப்பநிலைக்குத் தகுந்தவாறு தகவமைத்துக்கொள்ள முடிந்தது. அதனால், விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கின. 2010-ம் ஆண்டு, அந்நாட்டின் தேசிய ஒட்டக மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகத் தெரியவந்தது. இப்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 12 லட்சம் ஒட்டகங்கள் 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த வேட்டையில் 5,000 முதல் 10,000 ஒட்டகங்கள் வரை குறி வைக்கப்பட்டுள்ளன.

கங்காருகள், ஈமு கோழிகள் என்று ஆஸ்திரேலியாவின் இயல் உயிரினங்களுடைய வாழ்விடங்களுக்கு இவை இடைஞ்சல் ஏற்படுத்துவதாகவும் அவை பூர்வகுடி மக்கள் பயன்படுத்துகின்ற வறண்ட பிரதேசத்திலுள்ள சிறிய நீர்நிலைகளைக்கூட விட்டு வைப்பதில்லையென்றும் அங்குள்ள ஆய்வாளர்களும் பூர்வகுடியின மக்களும் கூறுகின்றனர்.

ஆய்வாளரும் எழுத்தாளருமான சைமன் ரீவ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பி.பி.சி-யிடம் பேசியபோது, ``ஒட்டகங்கள் ஒரே நேரத்தில் பல லிட்டர் நீரைக் குடித்துவிடுகின்றன. விவசாய நிலம், நீர்நிலைகள் என்று விவசாயிகள் நீரைச் சேமித்து வைக்க அமைத்திருக்கும் கட்டமைப்புகளிலும் வந்து அப்படிக் குடித்துவிட்டுச் சேதங்களை விளைவிக்கின்றன. பூர்வகுடிகளுடைய வறண்ட, சிறிய நீர்நிலைகளையும் அவை விட்டுவைப்பதில்லை. வேலிகள், நீர்த் தொட்டிகள், குழாய் அமைப்புகள் அனைத்தையுமே அவை சேதப்படுத்துகின்றன. மரபுரீதியிலான வாழ்வியலைக் கொண்ட உள்ளூர் இயல் உயிரினங்களின் வாழ்வுக்கு ஆபத்தாக இருக்கும் ஒட்டகங்களை நினைத்து சூழலியல் ஆய்வாளர்கள் மிகவும் வருந்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்களால் உள்ளே நுழைக்கப்பட்ட ஒட்டகங்கள், இன்று அங்கு அவர்களைப் போலவே ஆதிக்கம் செலுத்தி பூர்வ உயிரினங்களுக்குச் சிக்கலை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. அயல் உயிரினமான அவை, ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறிய சிக்கல் பல ஆண்டுகளாகவே நீடிக்கின்றது. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ பிரச்னையிலும் அவற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறி அவற்றைச் சுட்டுக்கொல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் ஒட்டகங்கள்
தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் ஒட்டகங்கள்
Mark Marathon

இன்று தொடங்கும் இந்த வேட்டை, அடுத்த ஐந்து நாள்களுக்கு நடக்குமென்று கூறப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்வகுடியின மக்களின் பிரதிநிதிகள், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நேரங்களில் ஒட்டகங்களால் அதிக பாதிப்புகளுக்கு ஆளாவதாகக் கூறுகிறார்கள். அனங்கு பிட்ஜன்ஜட்ஜரா யன்குன்யத்ஜட்ஜரா (Anangu Pitjantjatjara Yankunytjatjara, APY) என்ற பூர்வகுடியின நிலத்திலிருந்து இந்த வேட்டை தொடங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது நிலவுகின்ற வறண்ட காலநிலை மற்றும் ஒட்டகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தீவிரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த வேட்டை அவசியமாக இருப்பதாகவும் அந்தப் பிராந்தியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய காட்டுத்தீ... கோலா கரடிகளைக் காப்பாற்றப் போராடும் தம்பதி!

பூர்வகுடியின பிராந்தியத்தின் அதிகாரி, ``இந்த வேட்டையில் 5,000 முதல் 10,000 ஒட்டகங்கள் வரை குறி வைக்கப்பட்டுள்ளன. இயல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் மக்களின் வாழ்வியலைப் பாதுகாக்க இந்தத் திட்டம் தேவைப்படுகிறது. இந்த நிலப்பகுதியின் தாவர வளத்தை அழிக்கின்ற ஆபத்தைக் களைவதற்கான வேலையில் இது 1 சதவிகிதம் மட்டுமே" என்று கூறியுள்ளார்.

உள்ளூர்ச் சமூகங்களின் நீர் சேமிப்புத் தொட்டிகள், குழாய்கள் மற்றும் பல சிறு குறு நீர்நிலைகளை ஒட்டகங்களே அதிகமாகப் பயன்படுத்திவிடுவதாக அப்பகுதியின் நீர் மற்றும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

Anangu Pitjantjatjara Yankunytjatjara, APY
Anangu Pitjantjatjara Yankunytjatjara, APY
Tenniscourtisland

தேர்ந்த துப்பாக்கிச் சூடு நிபுணர்களை வைத்து ஹெலிகாப்டர்களில் இந்த வேட்டையை நடத்தப்போவதாக ஆஸ்திரேலியாவின் சூழலியல் ஆய்வாளர்கள் குழு கூறியுள்ளது. சுட்டுக்கொல்லப்படும் ஒட்டகங்கள் அப்படியே விடப்படும். நீர்நிலைகளுக்கு அருகிலும் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலும் அப்படிச் சுடப்படுபவை மட்டும், தொற்றுநோய் பரவுதல், நீர் நஞ்சாதல் போன்றவற்றைத் தடுக்க ஒன்று எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களில், நூற்றுக்கணக்கான கோலா கரடிகள், கங்காருகள் நீருக்காக மனிதக் குடியிருப்புகளை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. செப்டம்பர் மாதம் தொடங்கிய காட்டுத்தீ, லட்சக்கணக்கான காட்டுயிர்களுக்குப் பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் அளவுக்கு அதிகமான வெப்பத்தைக் கடந்த சில வாரங்களிலேயே எதிர்கொண்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் இதுவரை காணாத வெப்பநிலையை அந்த மக்கள் கண்டனர். காட்டுத்தீயினால், நாடு முழுவதுமே வெப்பநிலை சராசரியாக 105.6 டிகிரி ஃபேரன்ஹீட்டைத் தொட்டது.

மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கிக்கொண்டிருக்கும் காட்டுத்தீயைக் காரணம் காட்டி, இத்தனை நாள்களாகச் செய்ய நினைத்துக்கொண்டிருந்ததை, ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் சாதிக்க நினைக்கிறதோ என்ற சந்தேகமும் அந்நாட்டுக் காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், காட்டுயிர் பாதுகாப்பில் `கட்டுப்படுத்த வேட்டை' என்பது ஒருவகையான பாதுகாப்புச் செயல்முறையாகவே கருதப்படுகிறது.

காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க முயலும் கங்காரு
காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க முயலும் கங்காரு

எண்ணிக்கையில் மான்கள் அதிகரித்ததால் அவற்றை வேட்டையாட கனடா அரசு அனுமதியளித்தது, அதேபோல், எண்ணிக்கையில் அதிகரித்துவிட்ட ஒட்டகங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒரு குழு இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதேநேரம், ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேட்டை தீர்வாகாது என்று மற்றொரு குழு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதன் பின்னணி நோக்கம் என்ன, இதனால் ஏற்படும் விளைவுகள் நேர்மறையாக இருக்குமா அல்லது எதிர்மறையாக இருக்குமா என்று அந்நாட்டுச் சூழலியலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.