Published:Updated:

பெசன்ட் நகர் - மெரினா இணைப்புச் சாலை... மீனவர்களின் வாழ்தாரத்திற்கு ஆபத்தா? - ஓர் அலசல்

உடைந்த பாலம்
News
உடைந்த பாலம்

"போக்குவரத்து நெரிசலைத் திசை திருப்புவதற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க வேண்டுமா?" என்று சென்னையின் சூழலியல் ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

ப்போது, பட்டினம்பாக்கத்தோடு முடிந்துவிடுகின்ற மெரினா லூப் ரோடு, 1970-ம் ஆண்டுக்கு முன்னர் பெசன்ட் நகர் வரைக்கும் நீண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்துவிட்டதால், பின்னர் அந்தச் சாலை பயன்படுத்தப்படவே இல்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம், அந்தச் சாலையை மீண்டும் அமைக்கத் திட்டமிட வேண்டுமென்று, அரசாங்கத்தையும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளது.

'இந்தப் பகுதி, கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்குள் வருகிறது. ஆகையால் இங்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று சாக்குப்போக்கு சொல்லாமல், அதைக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் வினீத் கோத்தாரி எழுத்து மூலமாகவே உத்தரவிட்டுள்ளனர்.

எங்களுடைய தொழில் சார்ந்த இடத்தைப் பறிகொடுத்துவிட்டால், வேறு எங்கு செல்வது?
சுந்தரமூர்த்தி, ஊரூர் ஆல்காட் குப்பம் பஞ்சாயத்துத் தலைவர்

கடலோர பாதுகாப்பு மண்டலம் என்ற சட்ட விதிமுறைகளின்படி, பெசன்ட் நகர்- மெரினா இணைப்புச் சாலை வரவுள்ள இடம் பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டலம் 1-ன் கீழ் வருகிறது. அங்கு, 14 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. மீனவர்களின் மீன்பிடிப் பகுதிகள், அடையாறு கழிமுகப் பகுதி, அலையாத்திக் காடு ஆகியவை அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கான பறவைகள் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவையனைத்தையும் இந்த இணைப்புச் சாலை இல்லாமலாக்கிவிடும் அபாயம் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிரீன்வேஸ் சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை ஆகியவற்றில் அமைந்திருக்கும் நீதிபதிகள், அமைச்சர்களின் குடியிருப்புகளால் அவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. அதைக் குறைக்கத்தான், இந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என உயர்நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது. அதை அடிப்படையாக வைத்துதான் இப்போது இந்தத் திட்டத்திற்கான முன்மொழிதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டம், நிலவுகின்ற போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அங்குள்ள நெரிசலைப் பெசன்ட் நகர் சாலைக்குத் திசை திருப்பி விடும். போக்குவரத்து நெரிசலைத் திசை திருப்புவதற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க வேண்டுமா என்று சென்னையின் சூழலியல் ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

அடையாறு கழிமுகம்
அடையாறு கழிமுகம்

கூவம் நதியின் கழிமுகப்பகுதிக்கு அருகே தொடங்குகிறது மெரினா கடற்கரை. அது, பொழுதுபோக்கிற்கான, சுற்றுலாப் பகுதியாக மட்டுமே இருக்கவில்லை. பல்வேறு மீனவ சமூகங்கள் அங்கு வாழ்கின்றன. அவர்களுடைய வாழ்வாதாரமே அந்த மெரினாதான். பங்குனியில் ஆமைகள் வந்து முட்டையிடக்கூடிய கடற்கரைகளில் முக்கியமான ஒன்று மெரினா. சென்னையின் பூர்வீகக் குடிகளான மீனவர்கள், இந்நகரத்தின் கடற்கரை ஓரங்களில் பல நூற்றாண்டுகளாக வாழ்கின்றனர். பெசன்ட் நகரிலுள்ள ஊரூர் ஆல்காட் குப்பம், நொச்சிக்குப்பம், முள்ளிக்குப்பம், டுமீங்குப்பம் ஆகிய மீனவ கிராமங்கள், கி.பி முதலாம் நூற்றாண்டுக்கும் முந்தையவையாக அறியப்படுகின்றன. மெரினாவிலுள்ள லைட் ஹவுஸ் முதல் கொட்டிவாக்கம் வரையில் மேம்பால விரைவுச் சாலையை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் அடித்தளமிட்டுள்ளது. இது, சென்னைக் கடலோரத்திலுள்ள மீனவர்கள், சூழலியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சாலை, ஊரூர் ஆல்காட் குப்பம் வழியாகப் புகுந்து, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூரிலுள்ள மீனவ கிராமங்களுக்குள் புகுந்து, கிழக்குக் கடற்கரைச் சாலையோடு இணையும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, 10 ஆண்டுகளுக்கு முன், இதே திட்டத்தை வேறு வடிவில் கொண்டு வர முயன்றனர். அப்போதே இந்தத் திட்டத்தை அமல்படுத்தச் சுமார் ஒரு லட்சம் பேரைக் காலி செய்ய வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட வலிமையான எதிர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டது. இப்போது, மீண்டும் அதே திட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகையும் பெருமளவு உயர்ந்துவிட்டது.

இணைப்புச் சாலை ஆக்கிரமிக்கவுள்ள அடையாறு பகுதி
இணைப்புச் சாலை ஆக்கிரமிக்கவுள்ள அடையாறு பகுதி

ஆடி, ஆவணி மாதங்களில் கைவலை பயன்படுத்தும் மீனவர்களால் மத்தி மீன்கள் டன் கணக்கில் கடலோரங்களிலும் கழிமுகப்பகுதியிலும் பிடிக்கப்படுகின்றன. அதைச் சந்தைகளுக்குக் கொண்டுசெல்வதற்கு முன், பரந்து விரிந்திருக்கும் கடற்கரை மணலில் காய வைப்பார்கள். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, சுமார் 500 மீட்டர் வரை நீளமுள்ள, சுமார் 30 மீனவர்கள் கையாளக்கூடிய பெரிய வலைகளை அவர்கள் பயன்படுத்துவர். அவற்றைப் பழுதுபார்க்கவும் காய வைக்கவும் மிக நீண்ட இந்தக் கடற்கரைப் பரப்பு மிக அவசியம். இந்த விரைவுச் சாலை வந்துவிட்டால், அவர்களுடைய இந்தத் தொழில்கள் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பங்குவகிக்கும் இந்தப் பகுதியை சுற்றுலாத்தலமாகவும் மேட்டுக்குடிகளின் வாகனப் போக்குவரத்தை எளிமையாக்கவும் பயன்படுத்துவது மிகவும் அநியாயம் என்று மீனவர்கள் கொதிக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய ஊரூர் ஆல்காட் குப்பம் பஞ்சாயத்துத் தலைவர் சுந்தரமூர்த்தி, "எங்களுடைய ஒரு ஃபர்லாங் வரை நீளமாகவுள்ள பெரிய வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கின்ற இடம் இது. மீன்பிடிக் காலங்களில் நெத்திலி, மத்தி போன்ற மீன்களை இங்குதான் பிடிக்கிறோம். கட்டுமரங்களை உலர்த்த, படகுகளைப் பழுதுபார்க்க, வலைகளையும் கருவாட்டுக்கான மீன்களையும் காயவைக்க இந்த இடங்களைப் பயன்படுத்துகிறோம். எங்களுடைய தொழில் சார்ந்த இடத்தைப் பறிகொடுத்துவிட்டால், வேறு எங்கு செல்வது?

எங்கள் மக்களுக்கு உறுதியான வாழ்வாதாரத்தையே ஏற்படுத்தாத இந்த அரசாங்கம், ஒரு சில வி.ஐ.பி-களுக்காக எங்களைக் காலிசெய்ய நினைக்கிறது. அவர்களால்தானே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்களை அங்கிருந்து இடம் மாற்றி, வேறு பகுதியில் இருக்க வையுங்கள். கடலும் கடல் சார்ந்த இடமும் மீனவ மக்களின் அடிப்படை உரிமை. எங்கள் வாழ்வாதாரத்திற்கே இடமில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்கிறோம். இந்தப் பணிகள் துவங்கினால், இதனால் பாதிக்கப்படப்போகும் 14 கிராமங்களும் ஒன்றிணைந்து போராடவும் தயங்க மாட்டோம்" என்று கூறினார்.

கடல்மட்ட உயர்வால் தமிழகம் 144 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இழக்கப்போவதாக எச்சரிக்கிறது. அது நடந்தால், 10 லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

"இந்தத் திட்டத்தால், போக்குவரத்து நெருக்கடி குறையும் என்பது தவறான கருத்து. அது குறையாது, இடம் மாறும் அவ்வளவுதான். இந்தப் பகுதியில் கடலின் சீற்றம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்குச் சாட்சியாகத்தான் உடைந்த பாலம் இருக்கின்றது. ஏற்கெனவே இதேபோன்ற கட்டுமானம் அமைத்து, அது இயற்கைச் செயற்பாடுகளால் உடைந்துவிட்டது. கடலின் சீற்றம் முன்பைவிட இப்போது இன்னும் அதிகமாகியுள்ளது. இந்த இடம், கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளின்படி, எளிதில் பாதிக்கக்கூடிய சூழலியல் பகுதியாக அறியப்படுகின்றது. இந்நிலையில், அதேபோன்ற கட்டுமானத்தை மீண்டும் கொண்டுவந்தால், அதுவும் இதேபோலத்தான் பாதிக்கப்படும்.

நித்தியானந்த் ஜெயராமன்
நித்தியானந்த் ஜெயராமன்

அதுமட்டுமில்லை, இதனால் ஏற்படுகின்ற ஒளி, ஒலி இரண்டுமே, இரவு நேரங்களில் பூச்சிகள், தவளைகள், ஆமைகளுக்குப் பெரிய இடையூறாக இருக்கும். அவை, இயற்கையாகக் கிடைக்கும் ஒளியைவைத்தே எப்போது செயல்பட வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. ஆனால், இந்தச் சாலை வந்தால், 24 மணி நேரமும் இங்கு ஒலியும் ஒளியும் இருந்துகொண்டேயிருக்கும். அது, இங்குள்ள பல்லுயிரிய வளத்திற்குப் பெரும் இடையூறாக இருக்கும்" என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.

அடையாறு கழிமுகப்பகுதியில் சுனாமி போன்ற பேரலைகளின்போது, புயல், சூறாவளி போன்ற அபாயங்களின்போதும் கடற்கரைப் பகுதிகளுக்கு அரணாக விளங்குவது அலையாத்திக் காடுகள்தான். வங்கக் கடல், புயல் மற்றும் சூறாவளி அதிகமாக ஏற்படும் பகுதி. வங்கக் கடலின் அமைப்பும் அதன் வீரியமும்தான் ஏற்கெனவே இருந்த சாலை சேதமடையக் காரணமாக இருந்தது. 1970-களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களில், இப்போது அடையாறு கழிமுகப் பகுதிக்கு அருகேயுள்ள உடைந்த பாலமும் ஒன்று. அதேபகுதியில்தான் மீண்டும் இந்த மேம்பால விரைவுச் சாலை வரவுள்ளது. மீண்டும் வெள்ளம், சூறாவளி போன்றவை ஏற்பட்டால், அதேபோன்றுதான் சேதம் ஏற்படும் என்று சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடையாறு
அடையாறு

புவி வெப்பமயமாதல், அந்தப் பாதிப்புகளை இன்னும் விரைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. கடலோர நகரங்களைக் கடல்மட்ட உயர்வு அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 1 மீட்டர் வரை உயருமென்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு நிலப் பயன்பாடு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு, கடல்மட்ட உயர்வால் தமிழகம் 144 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இழக்கப் போவதாக எச்சரிக்கின்றது. அது நடந்தால், 10 லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும். பொருளாதார ரீதியாக 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்கிறது அந்த ஆய்வு.

ebird என்ற மக்கள் அறிவியல் இணையதளத்தில், அடையாறு கழிமுகப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், சுமார் 191 பறவை இனங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில், அழிவின் விளிம்பிலுள்ள வெண்வயிற்றுக் கடல் கழுகும் அடக்கம்.

"இது ஓர் அலை இடைப் பகுதி. 6 வகையான நண்டுகள் இங்கு காணப்படுகின்றன. மத்தி போன்ற மீன் வகைகள் இந்த அலை இடைப் பகுதியில் மட்டுமே வாழக்கூடியன. இவற்றைச் சார்ந்து நிறைய உயிரினங்களும் பறவைகளும் இருக்கின்றன. அதில் கிழிஞ்சல் பிடிப்பான், ஆலா போன்ற பறவை இனங்கள் மற்ற கண்டங்களிலிருந்து பல ஆயிரம் மைல்களைக் கடந்து இங்கு வருகின்றன. இந்தத் திட்டம் இங்கு வந்தால், இவை அனைத்தையுமே பாதிக்கும். அது, இங்குள்ள நீர், காற்று அனைத்தையும் மாசுபடுத்தும்" என்கிறார் இயற்கையியலாளர் யுவன்.

மெரினா
மெரினா
வறீதையா கான்ஸ்டன்டைன்

14 மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரமாக, வாழ்விடமாகத் திகழும் கடற்கரையை இடம் மாற்றித்தான் இந்தத் திட்டம் வர வேண்டுமென்றால், அப்படியொரு திட்டமே வேண்டாமென்று 2010-ம் ஆண்டில் இதுகுறித்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சென்னையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களும் மீனவர்களும் திரண்டெழுந்தனர். அதன்பின்னர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்தத் திட்டத்தை ரத்து செய்தார். இப்போதே அவருடைய வழியில் ஆட்சி செய்வதாகக் கூறும் அதே ஆளும் கட்சிதான், அந்தத் திட்டத்தைப் புதுப்பித்துக் கொண்டுவர முயல்கிறது.

இது, பல நூற்றாண்டுகளாக இங்கு வாழும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. மீனவர்கள்தான் சென்னையின் பூர்வீகக் குடிமக்கள். இதில், அவர்களுடைய உரிமைகளுக்குத்தான் முதலுரிமை வழங்கப்பட வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு இந்தத் திட்டத்தைத் தொடக்கத்திலேயே ரத்து செய்ய வேண்டும் என்று மீனவ மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.