Published:Updated:

கடற்கரையில் விழாக்கோலம்... அந்த கால மீன் பிடிப்பும், மக்களின் மகிழ்ச்சியும்! ~ திரைகடலோடியும் - 3

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்

40 வருடங்களுக்கு முன்னால் ரூபாய்க்குப் பத்து நண்டு வாங்கலாம். இன்று 500 ரூபாய் கொடுத்தால் 10 நண்டு. ஏற்றுமதி வணிகம், விலைவாசி உயர்வோடு சேர்ந்து, உள்ளூர் மக்களின் மீனுணவுப் பழக்கத்தைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது.

கடற்கரையில் விழாக்கோலம்... அந்த கால மீன் பிடிப்பும், மக்களின் மகிழ்ச்சியும்! ~ திரைகடலோடியும் - 3

40 வருடங்களுக்கு முன்னால் ரூபாய்க்குப் பத்து நண்டு வாங்கலாம். இன்று 500 ரூபாய் கொடுத்தால் 10 நண்டு. ஏற்றுமதி வணிகம், விலைவாசி உயர்வோடு சேர்ந்து, உள்ளூர் மக்களின் மீனுணவுப் பழக்கத்தைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது.

Published:Updated:
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்

14.01.1974 -ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை, தமிழ்நாட்டின் குறுநில அரசுகளில் ஒன்றாக இருந்தது. இம்மாவட்டம் பழமையான பாரம்பரியம் கொண்டது. கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள், (சித்தன்னவாசல்) குகை ஓவியங்கள், குடைவரை ஓவியங்களும் இன்னும் பல வரலாற்றுச் சின்னங்களும் நிறைந்தது. இங்குள்ள பல ஊர்கள் சங்க இலக்கியம் உள்ளிட்ட பழமையான பதிவுகளில் குறிப்பிடப்படுபவை.

இராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு நடுவில் பாக் வளைகுடாவைத் தொட்டுக் கிடக்கும் புதுக்கோட்டை மாவட்டக் கடற்கரையானது 47.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இங்கு அதிகபட்ச எண்ணிக்கையில் மீனவர்கள் வாழுகிற கடற்கரைகள் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், புதுக்குடி ஆகியவை. 1975க்கும் 1979க்கும் இடைப்பட்ட காலத்தில் புதுக்கோட்டைக் கடற்கரைகளில் ஒரு பெரும் மோதல் நிகழ்ந்திருக்கிறது. ஜெகதாப்பட்டினத்தில் 300க்கு மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டன. விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் எதிரெதிர் அணியில் நின்று போராடினர். இந்தப் போரட்டம், தமிழக அரசு மீன்பிடி முறைகளில் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை அறிமுகம் செய்ய ஏதுவானது.

மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்
மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீனவர் மோதலுக்கு ஒரே காரணம், புதிய தொழில்நுட்பங்களின் வருகைதான். 1960களில் முதன்முதலாக விசைப்படகுகள் குளச்சலில் அறிமுகமானபோதும் பாரம்பரிய- விசைப்படகு தரப்புகளுக்கிடையே பெரும் போராட்டம் வெடித்தது. விசைப்படகு மீனவர்கள் நிறைய அறுவடைகளுடன் கரை திரும்பினார்கள். புதுக்கோட்டைக் கடற்கரைப் பிரச்சினையைப் பொறுத்தவரை, கரையில் மடியிழுக்கும் விசைப்படகுகளில் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சிக்கிப் பழுதுபட்டன. மேலிடத்திலிருந்து அதிகாரிகளை வரவழைத்து எல்லாக் கிராமங்களும் கூடிப்பேசி முடிவெடுத்து, விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் முறை வைத்துக் கடலுக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதில் பொதுவுடமைக் கட்சிக்காரர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்ததாய்க் குறிப்பிடுகிறார் மணமேல்குடியைச் சார்ந்த இந்தியன் கணேசன். அவரது இந்தியன் சலூன் நூலகம் குறித்து அடுத்த வாரம் பகிர்கிறேன்.

விசைப்படகுகள் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைக்களிலும் வாரத்தின் மற்ற நாட்களில் நாட்டுப் படகுகளும் கடலுக்குப் போகத் தொடங்கின. ஜெகதாப்பட்டினத்தில் அப்போது இன்றுபோல் ஜெட்டி வசதி எதுவும் இல்லை. அங்கு தங்கி மீன் பிடிப்பவர்களில் பெரும்பான்மையினர் வெளியிலிருந்து வந்தவர்களே. வியாபாரம் செய்பவர்களும் வெளியூர்க்காரர்களே, கோட்டைப்பட்டினமும் ஜெகதாப்பட்டினம் போலத்தான். இசுலாமிய மீனவர்கள் அங்கே கொஞ்சம் அதிகமாக இருக்கின்றனர். சுனாமி போன்ற பேரிடர்கள் வரும்போது இம்மாவட்ட மீனவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவதாய்ச் சொல்கிறார் கணேசன். புயலினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக 1980களில் அரசாங்கம் இங்குள்ள மீனவர்களுக்குக் காங்கிரீட் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தது. இந்தப் பகுதிகளில் 90% வீடுகள் அரசு கட்டிக் கொடுத்தது. பொருளாதார வசதிகள் வந்த பிறகு மீனவர்கள் அந்த வீடுகளைத் தேவைக்கு ஏற்றபடி விரிவுபடுத்திக் கொண்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘தஞ்சை, நாகை கடற்கரைகளில் இருப்பது போல புதுக்கோட்டைக் கடற்கரைகளின் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்று இறால் பண்ணைகள்’ என்கிறார் புதுக்கோட்டை ஊடகர் ஜெயப்ரகாஷ். இங்கும் இரண்டு வகையான இறால் பண்ணைகள் வைத்திருக்கிறார்கள். மிமிசல், ஜெகதாப்பட்டினம் போகும் வழியில் கிழக்கு கடற்கரைச் சாலை நெடுக ஏராளம் உவர்நீர் இறால் பண்ணைகளைப் பார்த்தேன். நன்னீர்ப் பண்ணைகளைவிட உவர்நீர்ப் பண்ணைகளால் நிலத்தடி நீரின் தரம் துரிதமாய்க் கெட்டுப்போனது. வயல்வெளிகளெல்லாம் பாதிப்புக்கு உள்ளாயின. இறால் பண்ணைகளுக்கு எதிராகவும் நிறையப் போரட்டங்கள் நடந்திருக்கின்றன. சில பண்ணைகள் அரசு அனுமதியுடன் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நன்னீர் இறால் வளர்ப்பினாலும் பாதிப்புகள் வராமலில்லை. இறால்களுக்கு இடப்படும் உணவு இரசாயனங்கள் கசிந்து நிலத்தடி நீரைக் கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் புகார்கள் உள்ளன.

தமிழ்நாட்டின் முதன்மை மீன்வள மண்டலங்களில் ஒன்றான பாக் கடற்பகுதியில் தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடையே அமைந்திருக்கிறது புதுக்கோட்டைக் கடற்கரை. வெள்ளாறு, பாம்பாறு ஆகிய ஆறுகள் கடலில் கலந்து வளம் சேர்ப்பது இப்பகுதியில்தான். வடக்கு அம்மாப்பட்டினம் பகுதியில் ஆங்காங்கே அலையாத்திக் காடுகளும் அமைந்துள்ளன. எனினும், அண்மைக் காலங்களில் இக்கடலில் மீன்வளம் வற்றி வருவதாக தஞ்சை, புதுக்கோட்டை மீனவர்கள் சொல்கிறார்கள். புதுக்கோட்டைக் கடற்பகுதியில் மீன்வளம் குறைந்து போனதற்கு என்ன காரணம்? நன்னீர் கடலில் வந்து சேரவில்லையா, அல்லது, இறால் பண்ணைகளால் கடல் மாசுபடுகிறதா, விசைப்படகுக்காரர்களால் மீன்வளம் அழிக்கப்படுகிறதா? கணேசன் சொல்கிறார்:

“இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலைக் கெடுக்கின்றன என்பதைவிட, இரட்டை மடி போட்டு இழுப்பது முக்கியமான பிரச்சினை; மழைவளம் குறைந்திருப்பதும் ஒரு காரணம்.”

அடிப்படையில், உள்ளூரளவிலும் உலக அளவிலும் மீனுக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அறுவடை சரிந்து கொண்டிருக்கிறது. ‘50 வருடங்களுக்கு முன்னால் கடற்கரைகளில் இருந்ததைவிட மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது, ஆனால் அறுவடை அதே அளவில்தான் இருக்கிறது’ என்கிறார் கணேசன். இந்த உண்மையை நாம் பொருட்படுத்துவதில்லை.

மீன்கள்
மீன்கள்

“முன்பெல்லாம் மீனுக்கு உள்ளூர்த் தேவை மட்டும்தான் இருந்தது; இப்போது நிறைய மீன் ஏற்றுமதியாகிறது. அதனால் மீன் விலையும் உயர்ந்து விட்டது. ஒரு கிலோ 300, 400க்கு கிழேயுள்ள மீனைத்தான் இங்கே விற்கிறார்கள். ஏற்றுமதியானது போக மிச்சம்தான் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும். அதிலும் நிறைய வெளியூர்ச் சந்தைகளுக்குப் போகிறது. கிலோ 1000, 1500க்கு போகிற சிங்கி இறால் எதுவும் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்காது. 40 வருடங்களுக்கு முன்னால் ருபாய்க்குப் பத்து நண்டு வாங்கலாம். இன்று 500 ரூபாய் கொடுத்தால் 10 நண்டு. ஏற்றுமதி வணிகம், விலைவாசி உயர்வோடு சேர்ந்து, உள்ளூர் மக்களின் மீனுணவுப் பழக்கத்தைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது.”

பழைய நாட்களை நினைவு கூர்ந்தார் கணேசன்:

“அந்தக் காலத்தில் புதுக்குடி, அம்மாப்பட்டினம் போன்ற கிராமங்களில் அதிகபட்சம் 50, 100 நாட்டுப் படகுகள் இருந்தன. கடலுக்கு போகும் ஒவ்வொரு படகும் நிறைய மீன் கொண்டு வரும். தங்கு கடலுக்கு மூன்று முதல் ஏழு நாள் வரைப் போய்த் தங்கி மீன் பிடித்து, உப்பில் பாகம் பண்ணி, வத்தை நிறையக் கொண்டு வருவார்கள். பாய்மரப் படகுகள் அதற்கான எல்லாத் தளவாடங்களோடும் கடலுக்குப் போகும். அறுவடைகள் தேவைகளுக்குச் சரியாய் இருந்தன. அப்போதெல்லாம் மீனுக்கு விலை கிடையாது. இன்று மீனின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. படகுகளில் மீனவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, அவரவருக்குக் கிடைக்கும் அறுவடைப் பங்கும் இயல்பாகக் குறையத்தானே செய்யும்.”

‘தங்குகடல் தொழில் அனுபவத்தை என்னால் விவரிக்கவே முடியாது, அவ்வளவு அருமையான அனுபவம்’ என்கிறார் கணேசன்.

“வத்தை கடலுக்குள் புறப்பட்டுப் போய்விட்டது என்றால் கடற்கரையில் பெண்கள் எல்லோரும் காத்திருப்பார்கள். கடற்கரையே விழாக்கோலம் பூண்டது போலிருக்கும். வீடு திரும்புதலின் கொண்டாட்ட நேரம் அது.

கரைசேரும் படகுகளை வரவேற்பதும், மீன்களைச் சுமை சுமையாகக் கரையிறக்குவதுமாகக் கடற்கரை களைகட்டியிருக்கும். பொதுவாக நள்ளிரவில்தான் தங்குகடல் தொழிலுக்குப் புறப்படுவது வழக்கம்; காண்டா விளக்கு முதல் (தகர டப்பாவில் மண்ணணெய் ஊற்றிக் கட்டைவிரல் அளவில் திரியேற்றி வைக்கும் விளக்கு) உணவு வரை எல்லாத் தளவாடங்களும் எடுத்துப் போவார்கள். பிற்காலத்தில் காண்டா விளக்குக்குப் பதிலாக டார்ச் லைட் வந்தது; உப்புக்கு பதிலாக ஐஸ் வந்தது அண்மைக் காலத்தில்தான்.

வத்தையிலேயே சமைத்துச் சாப்பிடுவார்கள். கரைக்கடலில் 2, 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தூண்டிலில் உடனே உடனே பிடிக்கும் சின்னச் சின்ன மீன்களுக்குச் சுவை அதிகம். மடிவலையில் கிடைக்கும் சிறு மீன்களை இரையாய்க் கோர்த்துத் தூண்டிலில் மீன் பிடிப்பார்கள். நெடுந்தூண்டிலில் இரை கோர்ப்பது தனித் திறமை. 500 தூண்டில் முதல் 1500 வரை குடும்பத்தோடு உட்கார்ந்து (இரை) கோர்ப்பார்கள். பெரிய வத்தைகளில் ஏழு பேர் வரை போவார்கள். இரவில் ஒன்று ஒன்றரை மணிக்குப் போய்த் தூண்டில் விட்டால் காலை ஏழு, எட்டு மணிக்கெல்லாம் கரைக்கு வந்துவிடுவார்கள். அந்தப் படகுகள் இரண்டுபேர் போகும் சின்னப் படகுகள். அந்த இரண்டு பேருக்கும் குடும்பத்தின் உழைப்புக்கும் சரியான வருமானம் அதில் கிடைக்கும். இதில் முரல் தூண்டில் என்கிற முரல் தும்பு தனிவகை: பனைமட்டை நாரை அடித்து, அதிலேயே பின்னுகிற, தண்ணீரில் மிதந்து கிடக்கும் தூண்டில் வகை. மற்றொரு வகைத் தூண்டில் அமிழ்ந்து போகிற வகை; செங்கணி போன்ற மீன்கள் அதில் கிடைக்கும். மிதக்கும் தூண்டிலில் முரல் மட்டும்தான் கிடைக்கும், வத்தை இல்லாதவர்கள் சின்னக் கட்டுமரங்களில் போவார்கள்.”

மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்

1990 -களில் மீன் ஏற்றுமதி வணிகம் வளரத் தொடங்கியபோது ஏராளமான ஆண்கள் அந்தத் தொழிலில் இறங்கினார்கள்; இறால், நண்டு, மீன் கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களும் உண்டு. புதுக்கோட்டைக் கடற்கரையைப் பொறுத்தவரை கருவாடு வணிகமும் முக்கியமானது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏராளமான கருவாடு அனுப்பி வைக்கப்படுகிறது. கெட்டுப் போகாத வரை பச்சை மீனைச் சமைத்து உண்பார்கள்; பதம் கெட்டுப் போனால் அதைக் கருவாடாக்கி விடுவார்கள். ‘உப்புப் போடாமல் உலர்த்திய கருவாட்டைப் பெரிய அளவில் வணிகம் செய்கிறார்கள். உப்புக் கருவாட்டை இங்குள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள், உள்ளுர்ச் சந்தைகளில் அதற்கு நிறைய தேவை இருக்கிறது. ‘உப்பில்லாக் கருவாடுகளில் நெத்திலி முக்கியமானது. ஆனால் வஞ்சிரம் விலை உயர்வானது’ என்கிறார் கணேசன். வஞ்சிரம் மீனை விட அதன் கருவாட்டுக்கு விலை அதிகம். இப்படி மீனை மதிப்புக்கூட்டிய பண்டமாக்கிச் சந்தைப்படுத்துவதில் உழைப்பும் செலவும் அதிகம். சங்காயப் பொடிமீன்கள் டன் கணக்கில் போகும், ஆனால் விலை மிகக் குறைவு. உரம், கோழித் தீவனம் போன்றவை தயாரிப்பதற்குத்தான் அதை எடுத்துப் போகிறார்கள்.