Published:Updated:

`இது அரசியலால் எரியும் தீ!' தப்பிப்பிழைக்குமா அமேசான்?

ம.காசி விஸ்வநாதன்

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளுக்குள் நடந்துகொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்துவிட முடியாது. இதற்குபின் இருக்கும் அரசியல் மிகப்பெரியது.

Amazon Fires
Amazon Fires ( AP )

கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமேசான் காட்டுத்தீ. எவ்வளவு பெரிய காட்டுத்தீயிலிருந்தும் மீண்டுவரும் அபார வலிமை படைத்தவை காடுகள். ஆனால் அரசியல் தீயிலும், தனிமனித பேராசை தீயிலும் எரிந்துகொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவருமா?

Amazon Fires
Amazon Fires
AP

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளுக்குள் நடந்துகொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்துவிட முடியாது. இதற்குபின் இருக்கும் அரசியல் மிகப்பெரியது. இந்தப் பாதிப்புகளுக்கு பெரும் காரணமாகக் கூறப்படுபவர் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ. இப்போது இந்த நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டாலும்கூட இவரது அரசியல் கொள்கைகள் நிச்சயம் அமேசான் காடுகளை ஒருவழி செய்துவிடும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

2018 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்திலிருந்தே, அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என்பது அவரது முக்கிய கோஷமாக இருந்தது. அப்போதுதான் பிரேசில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத்தொடங்கியிருந்தது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் முதல் எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரும் இந்தக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். பிரேசிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. பெருமளவில் இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்த்தல் நிலங்களாக அமேசான் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படியான ஆசைகளிலிருந்துதான் பிரச்னை தொடங்குகிறது.

Jair Bolsonaro
Jair Bolsonaro

பிரேசிலில் காடழிப்புக்கு எதிராக என்ன மாதிரியான சட்டங்கள் இருக்கின்றன என்பதை முதலில் பார்ப்போம். 1965-ல் கொண்டுவரப்பட்ட பிரேசிலின் காடுகள் கொள்கையின்படி (Brazil’s Forest Code of 1965) விவசாயிகள் அமேசான் காடுகளில் நிலங்களை வாங்கி சொந்தம் கொண்டாடமுடியும். ஆனால், அதில் 20% நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்யமுடியும். இதைக் கொண்டுவந்த ராணுவ சர்வாதிகார அரசு 1988-ல் முடிவுக்கு வந்த பிறகு அமலான புதிய அரசியலமைப்புச் சட்டம் அமேசானில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நிலத்தின் உரிமை திருப்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், அந்த இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் வருவதை விரும்பாவிட்டால் அதை மறுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு தரப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்திற்குள்ளே பாதிப்புகள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. பின்பு 2012-ல் மீட்டெடுக்கப்படவேண்டிய காடுகளின் அளவை குறைத்தும், காடழிப்புக் குற்றங்களுக்குத் தண்டனைகள் குறைக்கப்பட்டும் சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இதைப் பிரேசிலின் உச்சநீதிமன்றம் 2018-ல் உறுதிசெய்தது. இதற்குப்பின் 2019 ஜனவரியில் பதவியேற்கிறார் அதிபர் ஜெய்ர் பொல்சொனேரோ. வெற்றிக்குப் பிறகு ``இத்தனை இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு யாரோ சில பூர்வகுடி மக்கள் எதிர்ப்பதால் அவற்றை வீணாக்கிவிடக் கூடாது" (“Brazil should not sit on its natural reserves because a handful of Indians want to conserve it") என்றார் பொல்சொனேரோ. 20 வருடங்களாகப் பெருமளவில் இல்லாத அமேசான் காடுகளின் சுரண்டல் மீண்டும் தலைதூக்கத்தொடங்கியது.

முற்றிலும் வலதுசாரி சிந்தனைகள்கொண்ட பொல்சொனேரோ குறுகிய காலத்தில் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை மட்டுமே பார்க்கிறார், அவருக்கு சுற்றுசூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு மீது துளியும் அக்கறை இல்லை
பிரேசில் சூழலியலாளர்கள்

அமேசான் குறித்த இவரது திட்டங்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் கசிந்ததாக openDemocracy மற்றும் Independent ஆகிய இரண்டும் செய்தி வெளியிட்டன. அதில் அமேசான் காடுகளை அழிப்பதே பொல்சொனேரோவின் திட்டம் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Leaked Documents
Leaked Documents
democraciaAbierta

பிரேசிலின் ஒரு மாநிலமான பாராவின் தலைவர்களிடம் கலந்துபேசுவதற்காக உருவாக்கப்பட்ட Powerpoint slides-தான் கசிந்திருக்கின்றன. இந்த பாரா மாநிலத்தில்தான் அமேசோனியா தேசிய பூங்கா இருக்கிறது. இந்தப் பகுதிகளில் எந்த மாதிரியான திட்டங்களை பொல்சொனேரோ அரசு செயல்படுத்தப்படப்போகிறது என்பது அந்த ஸ்லைடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில், ``அமேசான் நதிப் படுகையில் வளர்ச்சித்திட்டங்கள் கொண்டுவரப்படவேண்டியது அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதியை எந்த ஒரு பிரச்னையும் இன்றி பிரேசில் தேசிய எல்லைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும். இல்லையேல் AAA திட்டத்திற்காக உலகநாடுகள் தரும் அழுத்தத்தை நம்மால் சமாளிக்கமுடியாது" என்கிறது ஒரு ஸ்லைடு. இதற்காக ஒரு நீர் மின்ஆலை, ஒரு பெரிய பாலம், BR-163 தேசிய நெடுஞ்சாலையின் நீட்டிப்பு போன்ற திட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

Andes-Amazon-Atlantic Corridor project
Andes-Amazon-Atlantic Corridor project

அது என்ன AAA திட்டம்? இது ஒரு இயற்கைப் பாதுகாப்பு திட்டம். அமேசான் காடுகள் தொடங்கி அண்டெஸ், அட்லாண்டிக் கடல் வரை 135 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை இந்தத் திட்டம் பாதுகாக்கும். இந்தத் திட்டத்தை Gaia Amazonas என்ற அமைப்புடன் பல NGO-க்கள், மற்றும் பிற நாட்டு அரசுகள் முன்னெடுத்துள்ளனர். இவர்களிடம் அமேசான் சென்றுவிடக் கூடாது என்பதில் நிலையாக நிற்கிறது பொல்சொனேரோ அரசு.

#PrayForAmazonas என ட்வீட் செய்வதன் மூலம் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இதற்கு யாரேனும் பொறுப்பேற்று தீர்வு காண வேண்டும். அதை பிரேசில் அரசு செய்வதாகத் தெரியவில்லை. இது இயற்கையாக நடந்ததுதான் என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இது மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும்விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் இந்த காட்டுத்தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதிசெய்கிறது. இந்தக் காட்டுத்தீ பாதிப்புகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 84% அதிகம் என்கிறது அந்த அமைப்பு. பொல்சொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக்காட்டியது. இதற்காக அவர்கள் அரசிடம் பெற்ற பரிசு என்ன தெரியுமா?

Spreading Deforestation
Spreading Deforestation

``இது சுத்தப் பொய்" என்று மறுத்ததுடன் இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணிநீக்கம் செய்தது பிரேசில் அரசு. இதைப்போன்ற தவறான தகவல்களால் உலக அரங்கில் பிரேசிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று இதற்கு விளக்கம் தெரிவித்தார் பொல்சொனேரோ.

முதலில் இந்தத் தீயை அணைக்க போதிய சக்தி எங்களிடம் இல்லை, அமேசான் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என கைவிரித்தார் பொல்சொனேரோ. மேலும், தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட NGO-க்களின் வேலைதான் இது என்றும் குற்றம்சாட்டினார். ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் பெரும்பாலும் பொல்சொனேரோ ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது என்கின்றன நேரடி அறிக்கைகள்.

ராணுவத்தின் உதவியுடன் அணைக்கப்படும் தீ
ராணுவத்தின் உதவியுடன் அணைக்கப்படும் தீ

முதலில் பிரேசில் விவகாரங்களில் யாரும் தலையிடவேண்டாம் என்று கூறிய பொல்சொனேரோ உலக அளவில் தரப்படும் பெரும் அழுத்தத்தால் இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டுவர இப்போது ராணுவப்படைகளை பணியமர்த்தியுள்ளார். இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானின் திடமான எதிர்ப்புதான். ``பிரேசிலில் பிரச்னை கையாளப்படும் விதத்தைப் பார்த்தால் கடந்த ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த G20 மாநாட்டில் என்னிடம் அவர் பொய் கூறியிருக்கிறார்" என பொல்சொனேரோவை கடுமையாக சாடியிருக்கிறார் மேக்ரான். மேலும், இந்த நிலை நீடித்தால், ஐரோப்பிய யூனியனுடன் பிரேசிலுக்கு இருக்கும் வர்த்தக தொடர்பை தூண்டிப்போம் என அதிரடியாக தெரிவித்துள்ளார் மேக்ரான். முக்கியமாக பிரேசிலிலிருந்து வரும் மாட்டிறைச்சி இறக்குமதியை தடுக்கத் திட்டம் போடப்பட்டது. இதற்கு அயர்லாந்து போன்ற நாடுகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. இதற்கு பணிந்துதான் பொல்சொனேரோ பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அமேசான் காட்டுத்தீ பெருமளவில் பரவத்தொடங்கியதும் ``நமது வீடு எரிகிறது, நாம் விரைந்து செயல்பட வேண்டும்" என ட்வீட் செய்திருந்தார் இம்மானுவல் மேக்ரான். அதற்கு பொல்சொனேரோ ``இது காலனித்துவ மனப்பான்மையின் எடுத்துக்காட்டு" எனப் பதிலளித்தார். உண்மையில் இதில் உலக நாடுகள் தலையிடவேண்டிய அவசியம் இருக்கிறதா?

Emmanuel Macron's tweet
Emmanuel Macron's tweet

கடந்த சில நாள்களில் ``அமேசான்தான் பூமியின் நுரையீரல்" என்ற வாக்கியத்தை நிச்சயம் கடந்துவந்திருப்பீர்கள். அறிவியல்ரீதியாக பார்த்தால் அது 100% உண்மைதான். ஆக்ஸிஜன் வெளியிடுவதுமட்டுமல்லாமல் நாம் வெளியிடும் கரிமவாயுக்களை உட்கொள்வதிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன அமேசான் காடுகள். மாறிவரும் உலகில் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் காடுகள்தான். அதில் அமேசான் மிகமுக்கியமானது. இப்படி நாட்டு மக்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும் ஒரு விஷயம் எங்கு நடந்தாலும் அதற்கு குரல் கொடுக்கவேண்டியது ஒரு நல்ல ஜனநாயக அரசின் கடமைதான்.

Emmanuel Macron and Jair Bolsonaro
Emmanuel Macron and Jair Bolsonaro

எனவே, இதில் பிரெஞ்சு அரசின் நிலைப்பாட்டில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் பொல்சொனேரோ குற்றம்சாட்டும்படி மறைமுக அரசியலுமே இருப்பதாகவும் தெரியவில்லை. தற்போது உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க ட்ரம்ப் அரசின் மீதே சந்தேகம் எழுகிறது. எல்லாம் சரி, BRICS அமைப்பில் உறுப்பினராகவும் பிரேசிலுடன் நல்ல நட்பு பாராட்டும் நாடாகவும் இந்தியா இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை.

பற்றியெரியும் உலகின் நுரையீரல்... அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி! #PrayforAmazonas

இந்த அமேசான் காட்டுத்தீயில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. உலகமெங்கும் முக்கிய நாடுகளில் இப்படியான அரசுகளே ஆட்சியில் இருக்கின்றன. மக்களாகிய நாம் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். காலநிலை மாற்றம் எல்லாம் சுத்த மடத்தனம் எனக் கூறும் தலைவர்கள் ஒருபுறம், இயற்கை வலியது என டிவி நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டே அதைச் சுரண்டும் தலைவர்கள் ஒருபுறம் என்றுதான் இன்றைய நிலை இருக்கிறது. இப்படியான அரசுகள் உடனடி பலன்களைத் தருவதாக பிம்பத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் ஆபத்தானவை. இதுதான் காட்டுத்தீயை விடவும் அச்சம் தருவதாக இருக்கிறது.

'குட்டிப் பையனாகக் குட்டி முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கேன்!' #ManvsWild-ல் மோடி #Highlights