Published:Updated:

அமேசான் பழங்குடிகளுக்கு ஆபத்து... தொழில் நிறுவனங்களுக்கு வனத்தைத் திறந்துவிடும் பிரேசில்!

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள் ( AP Photo / Rodrigo Abd )

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜேர் பொல்சனாரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து பழங்குடியின நில உரிமைகள் தொடர்ந்து ஆபத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றன.

மொத்த பிரேஸில் மக்களின் கவனமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும், அதன் விளைவால் மரணித்தவர்கள் மீதும் இருக்க, அந்த போர்வைக்குப் பின்னால், பொல்சனாரோவின் தலைமையிலான அரசு, அந்நாட்டின் பழங்குடியின நிலங்களுக்கான கொள்கைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்தப் புதிய விதிமுறைகள், அரசு முறைப்படி பதிவு செய்யப்படாத, ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வனப் பொருள்கள் சேகரிப்பவர்களாக, கால்நடை மேய்ப்பவர்களாக வாழ்ந்த பழங்குடிகளின் நிலங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை வழங்குகிறது.

அமேசான் காட்டிலுள்ள பழங்குடிக் கிராமம்
அமேசான் காட்டிலுள்ள பழங்குடிக் கிராமம்
AP Photo / Rodrigo Abd

கிட்டத்தட்ட 97,979.3 சதுர கி.மீ பரப்பளவை, பழங்குடியினப் பயன்பாடுகளற்ற இதர பொருளாதார நடவடிக்கைகளுக்குத் திருப்பிவிட, பிரேஸில் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிலப்பகுதி, பிரேஸிலின் அரசியலமைப்புச் சட்டம் 1988-ன் படி, பழங்குடியின நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் அப்படி அங்கீகரிக்கப்படவில்லை. பிரேஸிலைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், இந்த முடிவு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்வைச் சிதைத்துவிடும் என்று அஞ்சுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த முடிவு அமேசான் வனப்பகுதியில் காடழிப்பைத் தீவிரப்படுத்தும் என்று சூழலியலாளர்கள் விமர்சிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜேர் பொல்சனாரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து பழங்குடியின நில உரிமைகள் தொடர்ந்து ஆபத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றன. அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே,``பொல்சனாரோ அதிபரானால், பழங்குடிகளிடமிருந்து நிலங்களைப் பிடுங்கிவிடுவார்" என்று எதிர் தரப்பினர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், ஃபென்டாஸ்டிகோ என்ற பிரேஸிலின் பிரபலமான டி.வி நிகழ்ச்சியொன்றில், ஐம்பாமா என்ற சுற்றுச்சூழல் அமைப்பு சட்டவிரோதமாக காடழிப்பு மேற்கொள்ளப் பயன்படுத்திய சாதனங்களை எரிக்கும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில், ஓர் ஆக்கிரமிப்பாளருடைய வாக்குமூலம் பதிவாகியுள்ளது. டிரின்செய்ரா-பகாஜா என்ற பழங்குடிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதில், அவர்கள் மட்டுமே 5 சதவிகித பூர்வகுடி நிலத்தைக் கையகப்படுத்த அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளதாகக் கூறுகிறார். மேற்கொண்டு அந்தக் காணொளியில் பேசியுள்ள அவர்,``சீக்கிரமே ஒருநாள், இங்கு நாங்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளை அரசு சட்டபூர்வமாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறார்.

நம் அதிகாரபூர்வ பதிவேடுகளில் அதைப் பதிவதற்கான வேலைகள் முடிந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பழங்குடிகளின் நிலம் என்பது பழங்குடிகளின் நிலம்தான்.
கார்லோஸ் மாரெஸ், பழங்குடிகளுக்கான வழக்கறிஞர்

அதாவது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த அந்த நிலத்தின் உரிமையாளர்களைத் துரத்திவிட்டு, தங்களுக்கு அந்த நிலத்தை அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் அந்த ஆக்கிரமிப்பாளர். பலரும் எதிர்பார்த்ததைவிட சற்று வேகமாகவே பொல்சனாரோ அரசு ஆக்கிரமிப்புகளைச் சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 22-ம் தேதி, ஓர் அறிவிப்பு பிரேஸிலில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு, `பழங்குடி கிராமப் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள நில ஆக்கிரமிப்பாளர்கள், பழங்குடிகளின் நிலத்தில் ஆக்கிரமிக்கவில்லை' என்று கூறுகிறது. இது, பிரேஸிலிய அமேசான் வனப்பகுதியிலும் அதைச் சுற்றியும் வாழ்கின்ற பழங்குடியின மக்களின் உரிமைக்கான கொள்கைகளைத் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது. முன்னர், அந்த நிலம் பழங்குடிகளுடையதாக இருந்தால், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க எத்தனை நீண்ட காலம் ஆனாலும் சரி, அதை வேறு யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பின்னர் நிலைமை அப்படியில்லை.

பிரேஸில் அரசின் பழங்குடியின அமைப்பின் தரவுகள்படி, 237 பழங்குடியினப் பகுதிகள் 97,979.3 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. அங்கு எல்லை வகுத்தல், நிலம் மற்றும் பழங்குடியின உரிமைதாரர்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்தல் போன்ற வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும், இப்போது மாற்றப்பட்டுள்ள கொள்கைகளால், இந்த நிலப்பகுதி மொத்தமும் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும் வெளியாள்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன்மூலம், சட்டபூர்வமாகவே அவர்கள் அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதோடு, அதைச் செய்ய மக்களிடம் எதிர்ப்பு வலுத்தால் அதைக் கையாள அந்நாட்டின் நிலப் பதிவேட்டுக்கான அரசு அமைப்பின் ஒத்துழைப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். இந்தப் புதிய கொள்கைகளின் வழியே அவர்கள் சட்டபூர்வமாகவே எளிய மக்களின் நிலங்களைப் பிடுங்கிக்கொள்ள முடியும். பழங்குடியின உரிமைகளுக்காகச் செயல்படும் வழக்கறிஞர்கள், இந்தப் புதிய கொள்கை பிரேஸிலின் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியுள்ளனர்.

அமேசான்
அமேசான்

``நம் அதிகாரபூர்வ பதிவேடுகளில் அதைப் பதிவதற்கான வேலைகள் முடிந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பழங்குடிகளின் நிலம் என்பது பழங்குடிகளின் நிலம்தான்" என்று கூறியுள்ளார் பழங்குடிகளுக்கான வழக்கறிஞர் கார்லோஸ் மாரெஸ்.

பிரேஸிலின் 23 மாகாணங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு, கடுமையான போராட்டத்தை இதற்கு எதிராக முன்னெடுத்துள்ளனர். அந்நாட்டின் வழக்கறிஞர்களுக்கான அமைப்பு, இந்தக் கொள்கை சட்டப் பிரிவு 230-க்கு விரோதமானது என்று கூறுகின்றனர். இந்த முடிவு, அதிபர் பொல்சனாரோ அரசாங்கத்தால் வேண்டுமென்றே எடுக்கப்பட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழங்குடி நிலங்களை அங்கீகரிப்பதில் அதிகாரத்துவம் செய்யும் தாமதம் அனைத்துமே, இந்தக் கொள்கைகளின் மூலம் அவர்களின் நில உரிமைகளை இல்லாமல் ஆக்குவதற்காகத்தான்.

பிரேஸிலின் அமேசான் வனப்பகுதிக்குள், வெளியுலகோடு தொடர்புகொள்ள விரும்பாமல் தனித்து வாழும் பழங்குடிக் குழுக்களுக்கு இது பெருஞ்சேதங்களை விளைவிக்கும். அவர்கள் வாழும் நிலம் குறித்த எந்த ஆவணமும் கிடையாது. அவர்களுடைய நில உரிமை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருப்பினும், இன்றைய முறைப்படி அவை பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை. இதனால், அவர்களுடைய நிலங்களை வெளியாட்கள் ஆக்கிரமிப்பது எளிதாகிவிடும் என்று சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

ஐமேசான் என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தில் ஆய்வாளராகச் செயல்படும் பிரெண்டா பிரிட்டோ, ``இந்தப் புதிய கொள்கை சட்டரீதியாக பாதுகாப்பற்ற உணர்வைப் பழங்குடியின மக்கள் மத்தியில் ஏற்படுகிறது. இது, பழங்குடியின நிலத்தையும் பழங்குடியல்லாதார் நிலத்தையும் வேறுபடுத்திக் காட்டும் அம்சத்தை அழிக்கிறது. இது, பழங்குடிகளின் நில உரிமைக்கு மிகவும் முரண்பாடான செயல்" என்று மங்காபே என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வமாகப் பதிவேடுகளில் பதியப்படாத பழங்குடியின நிலப்பகுதிகள்
அதிகாரபூர்வமாகப் பதிவேடுகளில் பதியப்படாத பழங்குடியின நிலப்பகுதிகள்
Mauricio Torres

மேற்கொண்டு அவர், ``ஒருவர் அங்கு நிலம் வாங்கும்போது, அது பூர்வகுடிகளின் எல்லைக்குட்பட்ட நிலமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம் நேர்மையாகச் செயல்பட நினைப்பவர்கள்கூட, பழங்குடி நிலத்தில் இடம் வாங்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்பதே அவருடைய கருத்து.

இந்தப் பிரச்னை இதோடு நிற்கவில்லை. இப்போது அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தக் கொள்கை மாற்றத்தால், பூர்வகுடி மக்கள் வெளியுலகத்தில் நுழைய வேண்டியிருக்கும். அடிப்படையில், பூர்வகுடிகளுக்கு வெளியுலகைச் சேர்ந்தவர்களைவிட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அவர்கள் வாழும் பகுதியில் இருக்கின்ற நோய்களுக்கு, தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே அவர்களுக்கு இருக்கும். ஆகவே, புதிய தொற்றுகளைத் தாங்கக்கூடிய ஆற்றல் பூர்வகுடிகளின் உடலுக்குக் குறைவாகவே இருக்கும். அதனால், புதுப்புது தொற்றுகளுக்கு அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்று, கடந்த மாதத்தில்தான் அமேசானியப் பூர்வகுடிகள் மத்தியில் பரவியது. பிரேஸிலில் மட்டுமே, சுமார் 105 பூர்வகுடிகளுக்கு கொரோனா இருப்பதும் அதில் 6 பேர் மரணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவையனைத்துமே அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அமேசானியப் பழங்குடிகளுடைய நிலம் பிடுங்கப்பட்டால், இத்தனை நாள்களாக வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்தவர்கள், இனி தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டி வரும். அது குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய அவர்களுக்கு கொரோனா போன்ற தொற்றுகள் ஏற்படும் ஆபத்தை மேலும் அதிகப்படுத்தும்.

நாங்கள் கடைசி வரைக்கும் எதிர்த்து நிற்போம்.
பிரேஸில் பூர்வகுடிகளின் உறுதிமொழி

``பூர்வகுடி மக்கள் கொரோனாவிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தீவிர பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களுடைய பாதுகாப்புக்கு எதிரானதாக இருக்கிறது. நில உரிமை தொடர்பாக மட்டுமின்றி, இன்றைய சூழலில் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக இது நிற்கிறது" என்கிறார் பிரேஸிலைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளரான டேனியெலா அலார்கோன். ஆம், நில உரிமை மட்டுமின்றி உயிர் வாழும் உரிமையும் இந்த இக்கட்டான காலத்தில் பழங்குடிகளிடமிருந்து பிடுங்கப்படுகிறது.

``நில ஆக்கிரமிப்புக்கும் காடழிப்புக்கும் பழங்குடிகளின் உடல் ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் வழி வகுப்பதோடு, வன்முறைச் சம்பவங்களையும் இது அதிகப்படுத்தும்" என்று புதிய கொள்கைகளைப் பழங்குடியின ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

அமேசான் பழங்குடிகள்
அமேசான் பழங்குடிகள்
AP Photo / Rodrigo Abd

பிரேஸிலில் 900,000 பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்கள், பொல்சனாரோ அரசாங்கத்தால் பல்வேறு ஆபத்துகளைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இணையவழியில் நடைபெற்ற பூர்வகுடிகளுக்கான அந்நாட்டின் தேசிய மாநாட்டை கவனித்தாக வேண்டும். அதில் பேசிய பூர்வகுடித் தலைவர்கள், 900,000 பூர்வகுடிகள் மீது தாக்குதல் தொடுக்கின்ற கொடிய வைரஸான பொல்சனாரோ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அந்த மாநாட்டை முடிக்கும்போது பூர்வகுடித் தலைவர்கள் ஓர் உறுதிமொழியையும் ஏற்றனர். அது,

``நாங்கள் கடைசி வரைக்கும் எதிர்த்து நிற்போம்.

எங்கள் மூதாதையர்கள் கொடுத்த அறிவொளியின் உதவியோடு,

நிகழ்கால, எதிர்காலத் தலைமுறைகளின் உரிமைகளுக்காக

நாங்கள் கடைசி வரைக்கும் எதிர்த்து நிற்போம்..."

அடுத்த கட்டுரைக்கு