Published:Updated:

ஊழிக்காலம் - 22: நிலாவிலேயே கால்பதித்த மனித இனத்தால் காலநிலை மாற்றத்தைத் தடுக்க முடியாதா?

Chandrayaan 2 landing
News
Chandrayaan 2 landing

இப்போது தீர்வாகச் சொல்லப்படும் பல தொழில்நுட்பங்கள் பலவும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கின்றன. அவை முழுவதும் உருவாக்கப்படும்வரை காலநிலை மாற்றம் காத்திருக்காது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கேள்வி இது.

"காலநிலை மாற்றத்தைத் தொழில்நுட்பத்தால் தடுத்துவிட முடியுமா?"

நிச்சயம் முடியும் என்கிறார்கள் தொழில்நுட்பத்தின் பக்தர்கள். தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் உருவாக்கினாலேயே பல சமூகப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இவர்கள் Technocrats என்று அழைக்கப்படுகிறார்கள்.

"இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாத, எதிர்காலத்தில் உருவாக்கப்பட இருக்கிற தொழில்நுட்பத்தால் கரிம உமிழ்வுகளைப் பாதியாகக் குறைக்க முடியும்" என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். சூடேறிக்கொண்டிருக்கிற பூமியின் இறுதி நம்பிக்கையாக தொழில்நுட்பத்தை முன்னிறுத்துகிறார்கள்.

மூன்று படிநிலைகளில் தொழில்நுட்பம் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

முதலாவது, வளங்குன்றா ஆற்றல்களான சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றின் செலவைக் குறைத்து அனைவருக்கும் அதைக் கொண்டு செல்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு.

Ice Restoration
Ice Restoration

இரண்டாவது, வெளியிட்டப்பட்ட கரிமத்தை மீண்டும் உறிஞ்சும் தொழில்நுட்பங்கள், விவசாய முறைகளில் கரிம உமிழ்வுகளைக் குறைக்கும் தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, காலநிலை சீரமைப்பு (Climate repair), அணுக்கருப் பிணைவு (Nuclear fusion) மூலமாக ஆற்றலை உருவாக்குவது, பனிப்பாறைகளை மீட்டுருவாக்கம் செய்வது (Ice restoration) ஆகிய தொழில்நுட்பங்கள். இவை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் உருவாக்கப்படுகின்றன.

மூன்றாவது தொழில்நுட்பம் என்பது, புவியின் பல அடிப்படை விஷயங்களை மாற்றி அமைப்பது (Geoengineering). மேற்கண்ட இரண்டும் அவ்வளவாகப் பலன் தராத பட்சத்தில் மட்டுமே இது கையில் எடுக்கப்படும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் சொல்கிறார்கள். இதுவரை செய்யப்படாத ஒரு முயற்சி என்பதால் இதில் எப்படிப்பட்ட ஆபத்துகள் வரும் என்பது தெரியவில்லை. ஆகவே இது வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே செயல்படுத்தப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல சிறு பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பம் தீர்வு அளித்திருக்கிறது. ஆனால், காலநிலை மாற்றம் மாதிரியான ஒரு மிகப்பெரிய சிக்கலான பிரச்னைக்குத் தொழில்நுட்பம் மட்டுமே தீர்வாகிவிடாது. இந்தத் தீர்வுப்பட்டியலை உன்னிப்பாகக் கவனித்தால், அவை இப்போது இருக்கும் சமூகத்தை எந்த அளவிலும் மாற்றாமல், அதன் அமைப்புரீதியான சிக்கல்களைக் கேள்வி கேட்காமல், அதன்மீது தீர்வுகளை மட்டும் பரப்ப முயற்சி செய்கின்றன என்பது தெளிவாகத் தெரியும். அது அத்தனை சுலபமில்லை என்று மறுக்கிறார்கள் காலநிலை வல்லுநர்கள். சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தை மட்டும் முன்னிறுத்த முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொழில்நுட்பம் மட்டும் ஏன் தீர்வாகாது என்பதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

உலகளாவிய மனித இனத்தின் விழுமியங்கள், அரசியல், ஆற்றல் பயன்பாடு பற்றிய பார்வை, பொருளாதாரக் கட்டமைப்பு, தகவல் தொடர்பு, உளவியல், தொழில்நுட்பக் கூறுகள், நம்பிக்கைகள், மனிதன் இயற்கையோடு இயங்கும் விதம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சாத்தியப்படுத்தலாம். இவற்றை அப்படியே வைத்துக்கொண்டு நடுவிலிருக்கும் தொழில்நுட்பத்தை மட்டும் உருவி, தூசி தட்டிப் புதுப்பித்துவிட்டு, திரும்ப அதே இடத்தில்தானே வைக்கப்போகிறோம்?! அப்படியானால் அதே பழைய பிரச்னைகள் திரும்ப முளைக்கும்.

carbon emission
carbon emission
phys.org

இப்போது தீர்வாகச் சொல்லப்படும் பல தொழில்நுட்பங்கள் பலவும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கின்றன. அவை முழுவதும் உருவாக்கப்படும்வரை காலநிலை மாற்றம் காத்திருக்காது. "நாம் செயல்படுவதற்கு எந்த அளவுக்குத் தாமதிக்கிறோமோ, காலநிலை அந்த அளவுக்கு சிக்கலானதாக மாறும். அப்போது நாம் முன்வைக்கிற தீர்வுகளும் பயனற்றுப்போகும். 2075 வரை காத்திருந்துவிட்டு நாம் ஒரு சூப்பர் தீர்வை முன்வைத்தாலும் ஒரு பயனும் இருக்காது" என்கிறார் சூழல் எழுத்தாளர் மெக் கிப்பன். உதாரணமாக, 2000ம் ஆண்டில், நாம் வருடத்துக்கு 3% உமிழ்வுகளைக் குறைத்தாலே போதுமானதாக இருந்தது. இப்போதோ, வருடத்துக்கு 10% உமிழ்வுகளையாவது குறைத்தால்தான் காலநிலை கட்டுப்படும் என்ற நிலை வந்துவிட்டது. இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருந்தால், நாம் 30% உமிழ்வுகளைக் குறைக்கவேண்டியிருக்கும். ஆகவே, தொழில்நுட்ப முன்னேறத்தின் வேகம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் போதுமானதாக இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தொழில்நுட்பங்கள் இப்போதுதான் உருவாக்கப்படுகின்றன என்பதால், இவற்றைச் செயல்படுத்தினால் பூமியில் வேறு என்ன பக்கவிளைவுகள் புதிதாக முளைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பக்கவிளைவுகளால் பாதிப்புகள் கூடிவிட்டால் என்ன செய்வது?!

இதுவரை மனித இனம் கண்டிராத மிகப்பெரிய பிரச்னை காலநிலை மாற்றம். அதை எதிர்கொள்ள வேண்டுமானால், இதுவரை மனித இனம் உருவாக்கிய எல்லா தொழில்நுட்பங்களையும் விழுங்கக்கூடிய மெகா தொழில்நுட்பப் புரட்சி ஒன்று தேவைப்படும். அது நமக்கு சாத்தியப்படுமா?

இந்த நான்கு காரணங்களையும் தாண்டி, ஒரு நுணுக்கமான உளவியல் பார்வையும் இதில் இருக்கிறது. இப்போதும்கூட, பிரச்னைகளை எதிர்கொண்டு நம் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள நாம் தயாரில்லை. தொழில்நுட்பத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளப் பார்க்கிறோம். இதுவரை வந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்பட்டுள்ள எல்லா சூழல் பிரச்சனைகளையும் சுத்திகரித்து, அதே தொழில்நுட்பம் நமக்கு ஒரு பரிகாரமாகவும் மீட்பராகவும் விளங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த மனநிலையே ஆபத்தானது.

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

தொழில்நுட்பவியலாளர்கள் இன்னொரு கருத்தையும் சொல்கிறார்கள் - "தொழில்நுட்பத்தால் காலநிலை மாற்றத்தை மனிதன் எதிர்கொண்டுவிட்டால், அந்த எதிர்காலத்தில் இப்போது இருக்கிற மனித இனம் என்பது இருக்காது. தொழில்நுட்பத்தோடு தன் உடலையும் இணைத்துக்கொண்ட ஒரு மனித இனமே எதிர்காலத்துக்கான மனித இனம்" என்கிறார்கள். தொழில்நுட்பத்தோடு நம்மை இணைத்துக்கொள்வது என்றால்? "ரத்தத்தில் நீந்தும் நானோ ரோபாட்கள் எப்போதும் நம்மை உடல்நலத்தோடு வைத்திருக்கின்றன என்பதில் தொடங்கி, நம் மொத்த நினைவுகளையும் அறிவையும் ஒரு கம்ப்யூட்டர் சிப்பில் பதிந்து வைத்துவிட்டால் இறந்தபின்னும் நாம் வாழலாம் என்பது வரை இந்தப் பிணைப்பு எதுவாகவேண்டுமானால் இருக்கலாம்" என்கிறார் டேவிட் வாலஸ் வெல்ஸ். இது பரிச்சயமில்லாத, சங்கடமான கேள்விகள் நிறைந்த எதிர்காலமாக இருக்கிறது. அது எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை.

பொதுவாகவே தொழில்நுட்பவியலாளர்கள் சூழலியல் பிரச்னைகளைக் கண்டுகொள்வதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவர்களைப் பொறுத்தவரை, செயற்கை அறிவால் எதிர்காலத்தில் ரோபாட்கள் நம் வாழ்வை ஆளத்தொடங்குவதுதான் பெரிய ஆபத்தாக இருக்கிறது. பல உயிர்களை பலிகேட்கும் முக்கியமான பிரச்னையான காலநிலை மாற்றத்தை பற்றிப் பேசும்போதோ, "அதெல்லாம் புது டெக்னாலஜி வந்தா சரியாகிடும்" என்ற அளவிலேயே அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த கருத்தியல் சிக்கலும் குழப்பமான நிலையில் நின்றுகொண்டிருக்கிறது.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, "இந்தப் பூமி வாழுறதுக்குத் தகுதியில்லாத இடமா மாறும் முன்னாடி நாம எல்லாரும் செவ்வாய் கிரகத்துக்குக் குடி பெயர்ந்திடலாம்" என்று ஆழமாக நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். காலநிலை வல்லுநர்கள், "காலநிலை மாற்றம் மிகவும் மோசமான நிலையை எட்டினால்கூட, அந்த நிலையிலும் செவ்வாய் கிரகத்தை விட பூமியே நாம் வாழ சிறந்த இடமாக இருக்கும்" என்று வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதைக் காதில் போட்டுக்கொள்ளாத எதிர்கால செவ்வாய் கிரக வாசிகளோ, சிவப்பு கிரகத்துக்குக் குடிபோகும் நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

Ingenuity Mars helicopter
Ingenuity Mars helicopter

பலதரப்பட்ட தீர்வுகளோடு, தொழில்நுட்பம் தரும் தீர்வுகளும் கைகோக்கும்போது மட்டுமே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். விண்வெளிக்கே பயணித்த மனித இனம் என்றாலும் தொழில்நுட்பம் நம்மை முற்றிலுமாக மீட்டெடுக்கும் என்று நம்பிக் காத்துக்கொண்டிருக்க முடியாது.

காலநிலை மாற்றத்தின் அளவையும் நுணுக்கத்தையும் பார்க்கும்போது, தீர்வுகளும் பன்முகத்தன்மை கொண்டவையாக இருக்கும் என்பது புரிந்திருக்கும். தனிநபர்கள் முதல் அரசுகள் வரை என்னென்ன தீர்வுகளை செயல்படுத்த வேண்டும்?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...