Published:Updated:

கிரேடா தன்பெர்க்குக்கு எதிராக விமர்சனம் வைப்பவர்களே! ஒரு நிமிடம்.. இதைப் படியுங்கள்!  #GretaThunberg

தற்போது அதே மண்ணில் பிறந்த சிறுமி, 46 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தலைவர்களை உட்காரவைத்து, ``உலக சுற்றுச்சூழலைக் காக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று உணர்ச்சிமிக்கக் கேள்விகளை வீசுகிறார்.

Greta Thunberg
Greta Thunberg

ஸ்டாக்ஹோம், உலக சுற்றுச்சூழல் வரலாற்றில் இரண்டு முறை திருப்புமுனையை உண்டாக்கிய தலைநகரம் எனும் பெருமைக்குரியது. 1972-ம் ஆண்டு, வரலாற்றில் முதன்முதலாக ஐக்கிய நாடுகள் சபையின், முதல் மனித சுற்றுச்சூழல் மாநாட்டைத் தானாக முன்வந்து தனது தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடத்தியது சுவீடன். ஸ்டாக்ஹோம் பிரகடனங்கள் (Stockholm declarations) என்று அழைக்கப்படும் ஆவணம்தான் சர்வதேச சூழலியல் சட்டங்களுக்கான அடித்தளமாக இன்றும் திகழ்கின்றது.

தற்போது அதே மண்ணில் பிறந்த சிறுமி, 46 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தலைவர்களை நோக்கி , "உலக சுற்றுச்சூழலைக் காக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று உணர்ச்சிமிக்கக் கேள்விகளை வீசுகிறார்.

கிரேடா தன்பெர்க் (Greta Thunberg) 2018-ல், தனது 15-வது வயதில் சூழல் ஈடுபாட்டைத் தொடங்குகிறார். பூமியில் நடந்துகொண்டிருந்த சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த பேரழிவுகள் அந்தச் சிறுமியின் மனத்தில், தன் எதிர்காலம் குறித்த அச்சத்தைத் தோற்றுவித்தது. தம் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்து களமிறங்கினார் அந்தச் சிறுமி. கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த சுவீடன் அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே மூன்று வாரங்கள் பள்ளிக்குச் செல்லாமல் தன் போராட்டத்தை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் #FridaysForFuture என்ற பெயரில் பள்ளிக்குச் செல்லாமல் போராடினார். ஒற்றை ஆளாக இந்த #SchoolStrike-ஐத் தொடங்கிய கிரேடாவிற்குத் துணை நின்று டிசம்பர் 2018-க்குள், 270 நகரங்களில் 20,000 மாணவர்கள் காலநிலை அவசரத்தை அரசுகள் தீவிரப் பிரச்னையாக எடுக்க வேண்டுமென்று போராட்டங்களை மேற்கொண்டார்கள்.

அவரின் தனித்த போராட்டங்கள், நாள்கள் நகர நகர, மக்களையும் குறிப்பாக மாணவர்களையும் அவர் பக்கம் திரட்டியது. விரைவிலேயே ஐரோப்பாவில் மேடைப் பேச்சுகள் மற்றும் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறும் அளவுக்கு அவரது முன்னெடுப்பு தீவிரமடைந்தன. சமூக வலைதளங்களில் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை பெருகியது.

Climate Strike
Climate Strike

பிப்ரவரி 2019-ல், 224 உலகக் கல்வியாளர்கள், கிரேடா தன்பெர்க் மற்றும் இதர மாணவர்களால் தாங்கள் ஈர்க்கப்படுவதாக வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதினர். ஐநா சபையின் தலைவரும் தன்பெர்க்கின் செயல்பாடுகளை ஆதரித்தார். டைம் இதழ், உலகின் மிகச் செல்வாக்குள்ள 100 பேரில் ஒருவராக அவரை அங்கீகரித்தது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சுவீடனின் மிக முக்கியமான பெண் என்று பறைசாற்றப்பட்டார்.

இவை மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவருடைய பெயர் இரண்டு நாடுகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைபெறும் ஐநா சபையின் காலநிலை உச்சிமாநாட்டையொட்டி (Climate Summit) உலக வருங்காலத்தின் வாரம் அனுசரிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக, உலக அளவில் #ClimateStrike #YouthForClimate #YouthStrikeForClimate எனப்படும் போராட்டங்கள் பரவலாக நடந்தேறின. இந்தத் தொடர் போராட்டங்களுக்குச் சர்வதேச அளவில் கிரேடா தன்பெர்க் தலைமை தாங்கினார்.

Sweden Parliament
Sweden Parliament

எதிர்காலத்தின் முகமாக அறியப்படும் இவர், அஸ்பெஜர்ஸ் சிண்ட்ரோம் (Asperger syndrome), OCD, செலக்டிவ் ம்யூடிஸம் (Selective Mutism) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர். ஒற்றை ஆளாக நாடாளுமன்றத்திற்கு வெளியே பதாகையைத் தாங்கித் தனித்து நின்றவரைப் பின்பற்றி, இன்று உலகின் அனைத்து ஓரங்களிலும் இருந்து சக மாணவர்கள், லட்சக்கணக்கில் தெருவிற்கு வந்து காலநிலை மாற்றம் குறித்துப் பேசுகின்றனர்; அரசாங்கத்தையும் செயல்பட வைக்க முயல்கின்றனர்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டில் ஒரு புதுமையை வகுத்து, வருங்காலச் சந்ததியினரான மில்லியனல்ஸுக்கும் (Millennials), Generation X-க்கும், தற்காலத்தில் வாழ்பவர்களும் ஆள்பவர்களும் பதிலளிக்க வேண்டும் என்பதை தன்பெர்க் உரக்கக் கூறியிருக்கிறார்.

காலநிலை மாற்றம் உடனடியாகக் கவனிக்கும் அளவுக்கு அவ்வளவு முக்கியமானதல்ல. காலநிலை மாற்றம் அஞ்சத்தக்கப் பிரச்னையல்ல. காலநிலை மாற்றம் ஒரு வதந்தி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் மனதில், இது காலநிலை மாற்றமல்ல, காலநிலை அவசரம். நாம் பூமியைக் காப்பாற்றியே தீரவேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் என்று அடித்துச் சொல்கிறார் கிரேடா தன்பெர்க். சூழலியல் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். அது தன்பெர்க்கின் மனத்தில் எதிர்காலம் குறித்த அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அந்த அச்சம்தான் அவரைப் பேச வைக்கிறது; போராட வைக்கிறது.

Climate Emergency
Climate Emergency

பெரியவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். தம் எதிர்காலத்தைக் காக்க, தாம்தான் போராட வேண்டுமென்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார். அதுவே, பள்ளியைவிட்டு வெளியேறிப் போராட்டக்களத்தில் தன்பெர்க் குதித்ததன் காரணம். கிரேடா தன்பெர்க் எதையும் மிகைப்படுத்தவில்லை. அறிவியல் கூறும் உண்மைகளை உலகுக்கு, தன் எளிய மொழியில் எடுத்துரைக்கிறார். அந்த மொழி அச்சம் கலந்த அவரின் குழந்தைப் பருவத்தின் உணர்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. உணர்ச்சிகளுக்கு எப்போதுமே பலம் அதிகம். அதிலும் கேள்விக்குறியாக நிற்கும் தம் எதிர்காலத்தின்மீது அச்சம்கொண்ட குழந்தையின் உணர்ச்சிகளுக்குப் பலம் பன்மடங்கு அதிகம். எந்த அளவுக்கு என்றால், உலகையே தன்னோடு நிற்க வைக்கும் அளவுக்கு.

கிரேடாவின் போராட்டங்களையும் உரைகளையும் விமர்சிப்பவர்கள், முதலில் அங்கு நிற்பது உலகைத் தன் பக்கம் நிற்க வைத்த போராளி என்ற பார்வையை ஓரமாக வைத்துவிட்டு, "எனக்கு எதிர்காலம் இருக்குமா!" என்று மிரண்டு போயிருக்கும் ஒரு சிறுமிதான் கிரேடா என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.

நம் சந்ததிகளுக்கு நாம் என்ன செய்து வைத்துள்ளோம் என்பது அப்போது புரியும். கிரேடாவின் உணர்ச்சிமிக்க உரைகளின் பின்னுள்ள அவருடைய மனநிலையும் அப்போது புரியும்.

கிரேட்டா முதல் அமரியன்னா வரை... பாய்ஸை விட கேர்ள்ஸுக்கு அக்கறை அதிகமா?!