Published:Updated:

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் வீழ்ந்த எரிசக்தித் துறை... மீண்டெழுமா? #ChangesInLockdown

எரிசக்தி
News
எரிசக்தி

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் எரிசக்தித் துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து எரிசக்தித் தொழில் மீண்டு வருவது என்பது இதற்கு முன்னர் இருந்ததைவிட வித்தியாசமாக இருக்கும்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால், சர்வதேச அளவில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரிப் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரம், காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மட்டும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றது. இதன்விளைவாக இந்த ஆண்டு உலகளாவிய கரிம வாயு வெளியேற்றத்தில் 8 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச எரிசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வீழ்ச்சி, மொத்த உலகத்திற்குமே ஒரு வரலாற்று அதிர்ச்சி.
பாத்திஹ் பீரோல் (Fatih Birol), சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்

பாரிஸ் நகரத்தை மையத் தளமாகக்கொண்ட ஒரு சர்வதேசத் தன்னாட்சி அமைப்புதான் இந்தச் சர்வதேச எரிசக்தி நிறுவனம். இது 1973-ம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடியை (1973 Oil treaty) அடுத்து, 1974-ம் ஆண்டில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினுடைய (OECD) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் 1973-ம் ஆண்டு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பதிலளித்த இந்த நிறுவனம், பின்னர் சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் பிற எரிசக்தித் துறைகள் பற்றிய புள்ளி விவரங்கள் குறித்த, தகவல் தெரிவிக்கும் அமைப்பாகச் செயல்படத் தொடங்கியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களுடைய எரிசக்திப் பயன்பாடு குறைந்துள்ளது என்று முன்னமே கூறினோம் அல்லவா! அதன்விளைவாக உலகம் முழுவதும் எரிசக்தித் துறை வீழ்ச்சியடைந்துள்ளது. 'இதற்கு முன்னர் இருந்த நெருக்கடிகளைப்போல் இது இல்லை. இந்த நெருக்கடியிலிருந்து எரிசக்தித் துறை மீண்டு வருவதென்பது முந்தைய காலகட்டங்களைவிட மாறுபட்டதாக இருக்கும். இந்த வீழ்ச்சி, உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகரும் நாடான இந்தியாவின் முழு எரிசக்தித் தேவையையும் இழப்பதற்கு நிகரானது' என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

"இந்த வீழ்ச்சி, மொத்த உலகத்திற்குமே ஒரு வரலாற்று அதிர்ச்சி. இன்றைய சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய எரிபொருள்களுக்கான தேவையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக நிலக்கரி மற்றும் எரிவாயு விற்பனையில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது" என்று சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாத்திஹ் பீரோல் (Fatih Birol) கூறினார்.

இந்தத் தொற்றுநோய் உலகளவில் 3 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது. லட்சக்கணக்கானவர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடையேயான தொடர்புகளைக் குறைப்பது மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் அத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவை ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய லாக்டௌன் காரணத்தால் இந்த மாதம், வருடாந்திர எரிசக்தி தேவை 1.5% குறைந்துள்ளதாகச் சர்வதேச எரிசக்தி அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எரிசக்திக் கொள்கை குறித்துப் பல்வேறு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் இந்த நிறுவனம் 2020-ம் ஆண்டின் இனிவரும் நாள்களில் எரிசக்தித் தேவை மேலும் 6 சதவிகிதம் குறையக்கூடும் என்று கூறுகிறது. இது 2008 நிதி நெருக்கடியினால் எரிசக்தித் தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சியைவிட ஏழு மடங்கு அதிகம்.

9 மில்லியன் பீப்பாய்கள்
மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி.

எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்தி போன்ற அனைத்து ஆற்றல் மூலங்கள் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்குப் பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பு இனிவரும் நாள்களில் கரிம வாயு வெளியாவதை மேலும் குறைக்கும். அரசாங்கக் கொள்கைகள் எதுவுமில்லாமலே புதுப்பிக்கும் ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பசுமை மீட்புத் திருத்தத்தை எதிர்பார்க்கலாம் என்று சர்வதேச எரிசக்தி அமைப்பு கணிக்கின்றது. அதன்மூலம் குறைகின்ற கரிம வெளியீடு, பூமியின் வெப்பநிலை உயரும் வேகத்தை மட்டுப்படுத்தும். உலக வெப்பமயமாதல் பிரச்னை அதன்மூலம் கட்டுக்குள் வரும் என்றும் கணிக்கப்படுகிறது. இன்றைய காலநிலை அவசரத்தில், புவி வெப்பமயமாவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. அதன்விளைவாகக் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை மனித இனம் சந்தித்துப் பல சேதங்களையும் அனுபவித்துவிட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டில்கூட, இந்தப் பிரச்னை தீவிரமடைந்து வருவதை முன்னிறுத்தி அரசுகளை எச்சரித்து உலகளவில் அனைத்து நாடுகளிலும் மக்கள் காலநிலைப் போராட்டத்தை (Climate Protest) நடத்தினர்.

அந்த அளவுக்குத் தீவிரமடைந்துகொண்டிருந்த பிரச்னைக்குரிய மிக முக்கியமான காரணங்களில் ஒன்றுதான் சர்வதேச அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கும் கரிம வெளியீடு. அந்தக் கரிம வெளியீட்டை அதிகப்படுத்தும் துறைதான் எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறை. தற்போது, அதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தினாலும், விரைவில் அதைச் சரிசெய்யக்கூடிய விதத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான, சூரிய மின்சக்தி, காற்றாலை போன்றவை வளர்ந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம், எரிவாயுவுக்கான தேவை குறைந்துள்ளதால் கரிம வாயு வெளியீடும் குறைந்துள்ளது, நிச்சயம் புவி வெப்பமயமாதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காலநிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

2020-ன் முதல் காலாண்டில் மட்டுமே, வருடாந்திர எரிசக்தித் தேவை 3.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. கச்சாவுக்கான உலகளாவிய தேவையில் சுமார் 60 சதவிகிதம் வாகனம் ஓட்டுவதிலிருந்தும் விமானங்களினாலும் உருவாகிறது. தற்போது பெரும்பான்மை வாகனங்களும் விமானங்களும் செயல்படுவதில்லை. இதனால் எண்ணெயின் தேவை குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில், உலகளாவிய எண்ணெய்த் தேவை நாளொன்றுக்கு 9 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இது இப்போதைய விகிதப்படி 9 சதவிகிதம்.

கரிம வெளியீடு
கரிம வெளியீடு

இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலகளாவிய நிலக்கரித் தேவை இந்த அளவுக்குப் பெரிய வீழ்ச்சியை இப்போதுதான் சந்திக்கின்றது. புதைப்படிவ எரிபொருளை எரிப்பதற்கான தேவை சுமார் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. மின்சார உற்பத்தியில் எரிபொருளின் பங்கு இந்தியா, சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நான்குமே பெரிய மற்றும் மாறுபட்ட மின்சாரச் சந்தைகளைக் கொண்டுள்ளவை. எரிசக்திக்கான தேவை குறையும்போது நிலக்கரி உபயோகப்படுவதில்லை.

பல ஐரோப்பிய நாடுகளில் நிலக்கரியை எரிப்பது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவே மாறிவிட்டது‌. மலிவான எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் மூலமே, பெருமளவு மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் பெரும்பான்மைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிலேயே இருக்கும் மக்களுக்கு மின்சாரத் தேவை எப்போது அதிகமாக ஏற்படும், எப்போதெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்து பெரிய சவால். ' லாக்டௌனின் போது மின்சாரம் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்படுகிறது என்பதை‌ப் பொறுத்து ஒவ்வொரு நாளுக்கான மின்சாரத் தேவையின் வடிவமும் மாறிக்கொண்டிருக்கிறது. வழக்கமாக, வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும். வார நாள்களில் வேலைக்குச் சென்றுவிடுவதால் அந்தத் தேவை இடைப்பட்ட நாள்களில் குறைவாக இருக்கும். ஆனால், ஊரடங்கில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் சராசரியாக ஞாயிற்றுக் கிழமைகளில் தேவைப்படும் மின்சார அளவே இப்போது எல்லா நாள்களிலும் தேவைப்படுகிறது. ஆயினும், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் முழுமையாக இயங்காததால் இந்த முழு ஆண்டிற்குமான, மின்சாரத் தேவை 5 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரைக்குமான எரிசக்தித் தேவையோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சரிவாக இருக்கும்.

துறைமுகம்
துறைமுகம்

அதேநேரம் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, எண்ணெய் தேவையில் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சியை விடக் குறைவாகவே உள்ளது. இது, போக்குவரத்து எரிபொருள்களுக்கான தேவையின் வீழ்ச்சியை விட இயற்கை எரிவாயுவின் வீழ்ச்சி குறைவு என்ற உண்மையைப் பிரதிபலிக்கின்றது. அதோடு, 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்குக் குறைந்த இயக்கச் செலவுகள் மற்றும் பல மின் அமைப்புகளுக்கான முன்னுரிமை அணுகல் காரணமாக இதன் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறித்த அறிக்கை கூறுகின்றது. மேலும், ' 2020-ம் ஆண்டில் சில புதிய திட்டங்கள் வருவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சி அதிகரிக்கப்படும்' என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி, இந்த முதல் காலாண்டில் 2 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு வருடம் முன்பு 26 சதவிகிதமாக இருந்த புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி, தற்போது கிட்டத்தட்ட 28 சதவிகிதமாக வளர்ச்சியடைந்தது. இன்னும் வருங்காலங்களில் இந்த மின்சார உற்பத்தி 5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மொத்த உலகளாவிய பயன்பாடு 1 சதவிகிதம் உயரும். கொரோனா வைரஸுக்கு முந்தைய கணிப்புகளைவிட இப்போதுள்ள சதவிகிதம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எரிசக்தி
எரிசக்தி

உலகளாவிய லாக்டௌனால் கரிம வாயு உமிழ்வுகள் மிகப் பெரியளவில் சரிந்துள்ளதைச் சூழலியல் ரீதியாக ஆரோக்கியமான முன்னேற்றமாகக் கருதலாம். 2020-ம் ஆண்டில் குறைந்துள்ள கரிம வெளியீட்டின் அளவு, இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து இப்போது வரை கரிம வெளியீட்டில் ஏற்பட்ட சரிவைவிடவும் இந்தச் சரிவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்கின்றன சர்வதே எரிசக்தி அமைப்பின் தரவுகள். இந்த ஆண்டில் இன்னும் மீதமுள்ள அடுத்த ஒன்பது மாதங்களில் சர்வதேச அளவில் கரிம வெளியீடு இன்னும் விரைவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020-ம் ஆண்டில் 30.6 ஜிகா டன்களை எட்டலாம்.

ஆம், அது மிகப்பெரிய அளவுதான். கரிம வெளியீட்டில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி புவி வெப்பமயமாதல் பிரச்னையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்த ஆய்வுகள் அடுத்து வரும் மாதங்களில் காலநிலை ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்படும். அதன்மூலம் இவை செய்துள்ள நன்மைகள் தெரியவரும். ஆனால் நம்முன் தற்போதுள்ள கேள்வி என்னவென்றால், இதே விகிதத்தில் கரிம வெளியீட்டைக் குறைத்து, அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம்மால் முடியுமா?

கொரோனா லாக்டௌன்
கொரோனா லாக்டௌன்

லாக்டௌன் முடிந்ததும் முழுவேகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தி, இதுவரை வெளியிடாமல் இருந்த மொத்தக் கரிமத்தையும் குறுகிய காலத்தில் வெளியிட்டுவிடுவோமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. அது நடக்காமலிருக்கவும் அந்தந்த நாடுகளின் காலநிலை மாற்ற அமைச்சகங்கள் திட்டமிட வேண்டும். இந்தியச் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் அதற்குரிய திட்டங்களை விரைவில் தீட்டவேண்டும்.