Published:Updated:

காடுகளுக்கு ஆபத்து... கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொண்டாட்டம்!

வனம்
பிரீமியம் ஸ்டோரி
வனம்

மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்தம்

காடுகளுக்கு ஆபத்து... கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொண்டாட்டம்!

மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்தம்

Published:Updated:
வனம்
பிரீமியம் ஸ்டோரி
வனம்

‘படிக்கிறது ராமாயணம்... இடிக்கிறது பெருமாள் கோயில்’ என்றொரு சொலவடை, கிராமப்புறங்களில் இன்றளவும் உயிரோடு இருக்கிறது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு கையில் எடுத்திருக்கும் சில விஷயங்களைப் பார்க்கும்போது, இந்தச் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.

“உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு என்பது மிகமிக குறைவு. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் திட்டங்களானது, பல்லுயிர் அதிகரிப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. இதன்மூலம் காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றெல்லாம் கடந்த ஜூன் 5 உலகச்சுற்றுச்சூழல் தினத்தன்று டெல்லியில் முழங்கினார் மோடி. ஆனால், எனக்கு இன்னொரு முகமிருக்கு என்பதுபோல, வனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பங்குபோட்டுக் கொடுக்கும் வகையில், வனச்சட்டங்களில் சத்தமில்லாமல் திருத்தத்தை மேற்கொள்ளும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

பிஜாய்
பிஜாய்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பழங்குடியின மக்களின் வாழ்வியல் ஆய்வாளருமான பிஜாய், “வனப் பகுதிகளில் ஏதேனும் ஒரு வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல் கட்ட நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அனுமதி சான்றிதழ் கொடுத்தால் போதும்... வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை எனக் காடுகள் பாதுகாப்பு சட்ட விதி 2014-ல் குறிப்பிடப்பட்டிருந்தது. 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில், திட்டத்தின் ஆரம்ப நிலையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி சான்றிதழ் பெற தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வளத்துறை அமைச்சகம் தற்போது கொண்டு வந்துள்ள காடுகள் பாதுகாப்பு சட்ட திருத்த விதி 2022-ல், ‘எந்த நிலையிலும் ஆட்சியரின் அனுமதி பெற வேண்டாம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. இது மிகமிக ஆபத்தானது. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே, அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும்போதே, வனங்கள் கொள்ளைபோய்க் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், இப்படி அனுமதியே தேவையில்லை என்று சொன்னால், மொத்தமும் கொள்ளை போய்விடும். அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட வனம் அடங்கியிருக்கும் மாநில அரசிடமோ, பழங்குடி மக்களிடமோ கலந்தாலோசிக்காமலே வனப்பகுதிகளில் உள்ள நிலங்களைப் பெரும் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசின் வசம் கொண்டு செல்லும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரு நிறுவனங்கள் வனப்பகுதிகளில் தங்களின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். தேவையான நிலத்தை ஒப்படைக்கும் பணியை மட்டுமே மாநில அரசு செய்ய வேண்டும். அனுமதி கொடுத்த பிறகு, எதிர்ப்புகள் கிளம்பினால், மாநில அரசு சமாளித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

வனம்
வனம்

வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைச் செயல்படுத்த பெரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டால், பிறகு மாநில அரசால் எதுவுமே செய்ய முடியாது. காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின் மூலமாக, அமைப்பு ரீதியான சில மாற்றங்களையும் செய்துள்ளனர். மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின், வன ஆலோசனைக் குழுதான், இதுநாள் வரையிலும் அங்கு வரக்கூடிய கோரிக்கை கடிதங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கியது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, அது ஆலோசனைக் குழுவாக மட்டுமே செயல்படும். வனம் தொடர்பான நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ள அந்தந்த மண்டலத்துக்கு என ஓர் அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. தென்னிந்தியாவுக்கான மண்டல அலுவலகம் பெங்களூரில் இருந்தது. அதற்கு மாற்றாக, இனி அந்தப் பணியை, குறிப்பிட்ட சில அலுவலர்களைக் கொண்ட கமிட்டி கையாளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரையிலும் காடுகள் தொடர்பான பெரும்பாலான செயல்பாடுகளை மாநில அரசின் வனத்துறைதான் கண்காணித்து வந்தது. அந்த அதிகாரங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு, அந்தச் செயல்பாடுகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஒரு கமிட்டி உருவாக்கியுள்ளது.

வனப்பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களைத் தொடங்குவதற்கு விரைந்து அனுமதி கொடுப்பதற்காகவும், மேலும் அதற்கான அலுவல் ரீதியான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகவும் இந்தக் கமிட்டியை கொண்டு வருவதாக மத்திய ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக, இனி பொதுவான நடைமுறையில் இருந்து விலகி, குறிப்பிட்ட சிலர்தான் திட்டங்களை முடிவு செய்வார்கள். வன நிலத்தை பொறுத்தவரை, முன்பு பெரும்பாலும் விவசாயத்துக்காகத்தான் மாற்றம் செய்யப்பட்டது. இனி, கனிம வளங்களின் கொள்ளைக் காடாக சட்டப்பூர்வமாகவே மாற்றம் செய்யப்படக்கூடிய ஆபத்தை உருவாக்கியிருக்கிறது இந்தச் சட்டத் திருத்தங்கள்.

வனநிலம் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அதற்கு ஈடாக, வேறு நிலத்தில், வனத்துறை பரிந்துரை செய்யும் மரங்களை நட்டு அந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஏற்கெனவே இருந்து வரும் விதிமுறை. அதனை எளிமைப்படுத்தும் விதமாக, ஏற்கெனவே மரங்கள் இருக்கும் வேறு நிலத்தைக் கொடுத்தால் போதும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யக்கூடிய எந்தெந்த மரங்களெல்லாம் அவசியம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எதுவும் அதில் சொல்லப்படவில்லை.

பொதுவாக ஒரு மாவட்டத்தில் உள்ள வன நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றும்போது, அதற்குரிய இழப்பீட்டு நிலமும் அதே மாவட்டத்தில் வேறு பகுதியில் கொடுக்க வேண்டும். ஆனால், புதிய விதிகள்படி, வேறு எங்கு வேண்டுமானாலும் இழப்பீட்டு நிலம் கொடுக்கலாம். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டில் வனநிலம் பெறக்கூடிய ஒரு பெரு நிறுவனம், அதற்கு இழப்பீட்டு நிலமாக, வேறு ஒரு மாநிலத்தில் கூட நிலம் கொடுக்கலாம் என்கிற அளவுக்கு சட்டங்களைத் திருத்துகின்றனர்.

ஒட்டுமொத்தமாக வனச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்கள் அனைத்துமே பெரு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் கொண்டு வரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள், வன நிலத்தை அபகரிப்புச் செய்யவே இந்த விதிகள் துணைபோகும். ஏற்கெனவே பல இடங்களில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதிலேயே சிக்கல் நிலவுகிறது. புதிய விதிமுறைகளால் பழங்குடியின மக்களுக்கும் அரசுக்கும் இடையே பரவலாக மோதல் போக்கு அதிகரிக்கும். காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், வன உரிமைச் சட்டத்தின் நோக்கத்துக்கு நேர் எதிராக உள்ளது. வனம் அல்லாத நோக்கங்களுக்காக வன நிலம் மாற்றப்படும்போது, காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகி கொள்கிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு’’ என்று குற்றம் சாட்டினார் பிஜாய்.

வனம்
வனம்

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துச் சொல்லியிருக்கும் மத்திய அரசு, “வன உரிமைச் சட்டத்துக்கு எதிராக எதையும் மத்திய அரசு செய்யவில்லை. நாட்டிலேயே முதல்முறையாகப் பழங்குடிப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ளார். அந்த விவகாரத்தைத் திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பழங்குடி உரிமைகளைப் பாதுகாப்பதற்குத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்” என்று விளக்கமளித்திருக்கிறது. ஆனால், சட்டத்திருத்தங்கள் அனைத்துமே, பழங்குடிகள், காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு எதிரானதாக இருக்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது. என்றாலும், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு.

‘பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டோம்’ என்று ஒரு பக்கம் முழங்கிக்கொண்டே, பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை ஒட்டுமொத்தமாகவே அழித்தொழிக்கும் வேலையைச் செய்வது என்ன வகை அரசியலோ?!

2.53 லட்சம் ஹெக்டேர் காடுகள் காலி!

இந்தியாவில், காங்கிரஸ் ஆட்சி செய்த 2009-ம் ஆண்டில் இருந்து, பி.ஜே.பி ஆட்சி செய்த 2019-ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் 2.53 லட்சம் ஹெக்டேர் வன நிலங்கள், வனமல்லாத வேறு பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளன.