EIA 2020 வரைவு மொழிபெயர்ப்பு விவகாரம்... மத்திய அரசு மறு சீராய்வு மனுத்தாக்கல்

மத்திய அரசு நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்து, 22 மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்ட முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020-ஐ கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியிட்டது. இதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை 22 மொழிகளில் வெளியிட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினர்.
தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மனுவை ஏற்காத உச்ச நீதிமன்றம் முதலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யும்படி கூறியது. அதன்படி மத்திய அரசு நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்து, 22 மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்ட முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிபதிகள் டி.என்.பட்டேல், பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வரும் 23-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.