Published:Updated:

மழை பெய்தாலே அஞ்ச வேண்டுமா... சென்னை மழை சொல்லும் செய்தி என்ன?

புழல் ஏரி
புழல் ஏரி

'மூன்று நாள்களுக்குத் தொடர்மழை' என்ற அறிவிப்பு வந்தாலே சென்னையில் வாழும் மக்கள் மனத்தில் ஒருவித பயம் தொற்றிக் கொள்கிறது.

தேவையான நேரத்தில், தேவையான அளவு மழை பொழிந்தால் விவசாயிகளுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால் சென்னைவாசிகளுக்கு, மழைக்காலம் வந்தாலே அச்ச உணர்வு வந்துவிடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பரில் பருவமழையை எதிர்நோக்கி மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். ஆனால், கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளம், 2016ல் உருவான வர்தா புயல் போன்றவற்றால் சென்னை மாநகரின் பல பகுதிகளில் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, மின்சாரமின்றி, உடைமைகளை இழந்து, உறவுகளைப் பிரிந்து, சென்னை மாநகரமே தத்தளித்தது. மறக்கமுடியாத அந்தப் பெருமழைக் காலம், மக்கள் மனத்தில் இன்னமும் நீங்காமலே இருக்கிறது.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்
Vikatan

அந்தக் காலகட்டத்தில் பெய்த பெருமழையால், சென்னை நகரமும் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து, அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகினர். வாழ்க்கையை, மனிதத்தை உணரவைத்த ஒரு நிகழ்வு அது.

அந்தச் சேதங்கள், அதன்பின் வருகின்ற ஒவ்வொரு மழையையும் ஒருவித பதட்டத்துடனேயே எதிர்கொள்ளும் நிலைக்கு மக்களை ஆளாக்கியுள்ளது. 'மூன்று நாள்களுக்குத் தொடர்மழை' என்ற அறிவிப்பு வந்தாலே, சென்னையில் வாழும் மக்கள் மனத்தில் ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.

சென்னையின் நிலப்பரப்பு தண்ணீர் தேங்குவதற்கு ஏற்றதாகும். திருவனந்தபுரத்தில் மழை பெய்தால், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தேங்காது. ஆனால், சென்னையின் நிலப்பரப்பு தண்ணீரை முழுமையாக உறிஞ்சிக் கொள்வதற்கு ஏற்றதாக இப்போது இல்லை. அதற்காக, அனைத்துப் பருவ மழையும் வெள்ளம் ஆகுமோ என்று பயப்படத் தேவையில்லை. 2015ல் வெள்ளம் ஏற்பட்டது பருவமழை அதிகரிப்பால்தான் என்றாலும், மழையின் அளவும் முக்கியமாகும். சென்னையில், நீரை உறிஞ்சிக்கொள்ளும் நிலப்பரப்பின் அளவு குறைந்துவிட்டதால், நீர் தேங்குவதற்கான இடமும் குறைந்துவிட்டதால், அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது கிடைக்கும் நீரைத் தேக்கி வைக்க முடிவதில்லை. அதற்காக, மழை பெய்தாலே வெள்ளம்தான் என்று அஞ்ச வேண்டியதில்லை. சென்னையில் இன்னமும், நீரைப் பிடித்து வைக்கக்கூடிய பகுதிகள் சில இருக்கின்றன. பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, செங்குன்றம் போன்ற பகுதிகள், குறிப்பிடத்தக்க நீரைத் தேக்கி வைக்கும் திறனோடு இருக்கின்றன.

மழை
மழை
Pixabay

தொடர் மழைக்குப் பயப்படும் சென்னைவாசிகளின் நிலை குறித்துப் பேசிய நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன், "சென்னை ஒரு கடலோர நகரம் என்பதால், பருவநிலை மாற்றம் ஏற்படும்போது நீர்நிலைகளில் தண்ணீர் உயரும். கடல் நீர் அளவும் உயரும். வெள்ளம் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் பாதிக்கப்படப்போவது தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள்தான். தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள்தான் வெள்ளத்தால் அதிகம் பாதிப்படைகின்றனர். சென்னைப் புறநகர் பகுதிகளில் அதிக நீர் நிலைகள் உள்ளதாலும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் அவை வெள்ளத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் நகர்ப்புறங்களில் மக்கள் தொகையின் அளவு கூடுகின்றது.

2005ல் வெள்ளம் வந்தபோது இருந்த பாதிப்பைவிட, 2015ல் மிக அதிகம். அடுத்து வெள்ளம் வந்தால், அதைவிடப் பாதிப்பு அதிகம்தான் இருக்கும். ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 பேர் இருந்தனர். தற்போது 31,000 பேர் உள்ளனர். இன்னும் 5 வருடங்களில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 40,000 மக்கள் வசிக்கும் நிலை நேரிடும். மக்கள்தொகை மேலும் அதிகமானால், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்கவே செய்யும். சென்னை மக்கள் வீடு வாங்கும்போது அந்த நிலத்தின் தன்மையை அறிவது மிக மிக அவசியம். இதில் அலட்சியம் வேண்டாம். நீர்நிலைகளைவிட தாழ்வான பகுதிகளில் இடம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மாநகராட்சி சாலை அமைக்கிறார்கள் என்றால், பழைய சாலையைச் சுரண்டிவிட்டுப் போடுகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேலேயே சாலை போட்டால், வீடு கீழே போய்விடும்" என்று கூறினார்.

சென்னையில் விட்டுவிட்டு மழை!
ஜனவரி 9-ம் தேதி வரை சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
மறந்துவிட்டதா... சென்னை பெரு வெள்ள சேதம்?

2012-ம் ஆண்டிற்குப் பிறகு, இந்த வருடம்தான் புத்தாண்டு அன்று சென்னையில் மழை பெய்துள்ளது. சென்ற வார இறுதிவரை பெய்த மழையின் காரணமாக, சென்னையில் உள்ள சோழவரம், பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான11,257 மில்லியன் கன அடியில், 4,091 மில்லியன் கன அடியை நீர் எட்டியுள்ளது.

சென்ற ஆண்டு கிடைத்த அளவைவிட, இந்த ஆண்டில் 2 மடங்கு தண்ணீர் கூடுதலாகக் கிடைத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில், இதுவரை 20% நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியின் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவில், 979 மில்லியன் கன அடியும் செங்குன்றம் நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில், பாதியளவான 1,600-ஐத் தொட்டுள்ளது. சோழவரம் ஏரி, தன் மொத்தக் கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில், 131 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி
Vikatan
வறட்சி, வெள்ளம், புயல்... பருவநிலை மாற்றம் மட்டும்தானா விவசாய வீழ்ச்சிக்குக் காரணம்?  ஓர் அலசல்!

ஜனவரி 9-ம் தேதி வரை சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது. இதுவரை பெய்துள்ள மழை, 2020-ம் ஆண்டில் சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பெய்துள்ள மழையிலிருந்து கிடைத்துள்ள நீரையும் இனி பெய்யப்போகும் மழையிலிருந்து சேமிக்கும் நீரையும் முறையாகப் பயன்படுத்தி, இந்த ஆண்டை தண்ணீர்ப் பிரச்னையின்றிக் கொண்டுசெல்ல தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு