Election bannerElection banner
Published:Updated:

`ஏரியில் கட்டிய காவல் நிலையத்தை இடிக்க வேண்டியிருக்கலாம்!' - உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஓர் அரசாங்கம், இயற்கை வளங்களின் பாதுகாவலனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, உரிமையாளரைப் போல் நடந்து கொள்ளக்கூடாது.

சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரிக்குச் சொந்தமான நிலத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் 2019-ம் ஆண்டு தொடங்கின. சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள முக்கிய நீராதாரமான தாமரைக்கேணி ஏரிக்குச் சொந்தமான நிலத்தில் காவல்துறை ஆக்கிரமித்து இந்தக் கட்டடத்தைக் கட்டியுள்ளதாக அறப்போர் இயக்கம் தரப்பிலிருந்து அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

ஏரியில் மேற்கொள்ளப்பட்ட காவல் நிலைய கட்டுமானம்
ஏரியில் மேற்கொள்ளப்பட்ட காவல் நிலைய கட்டுமானம்

2019-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரி நிலங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஸ் சுல்தான் உள்ளிட்ட குழுவினர் மீது, செம்மஞ்சேரி காவல் நிலையம் கிரிமினல் வழக்கு போட்டது. கடந்த மாதம் 29-ம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதுதானே தவிர, வேறு ஒன்றுமில்லை என்று கூறி வழக்கை நிராகரித்தார்.

மேலும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மெட்ரோ வளர்ச்சித் துறையிடம் ஏரியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் செம்மஞ்சேரி காவல் நிலைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் நிலைய கட்டுமானத்துக்கு எதிராக அறப்போர் இயக்கம் வழக்கு தாக்கல் செய்தது. அதன் முதல் விசாரணையிலேயே இது நீர்நிலை போலத்தானே இருக்கின்றது, நீர்நிலையில் எப்படி கட்டடம் கட்டினீர்கள் என்பன போன்ற கேள்விகளை நீதிமன்றம் கேட்டது.

காவல் நிலையம் கட்டுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது...
காவல் நிலையம் கட்டுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது...

அதோடு, சென்னை மெட்ரோ வளர்ச்சித் துறையில் இதற்கான அனுமதி நிலுவையில் இருக்கும்போதே கட்டுமான வேலைகளும் தொடங்கியிருந்தன. ஆகவே, அதைப் பற்றி ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

நேற்று நடந்த விசாரணையின்போது, இந்தக் கட்டுமானம் நீர்நிலையின் மீதுதான் இருக்கிறது என்பதற்கான வாதங்களை அறப்போர் இயக்கம் தரப்பு முன்வைத்தது. 2012-ம் ஆண்டு வருவாய்த் துறை இந்த ஏரி நிலத்தை `மேய்க்கால் தாங்கல் ரோடு' என்று வகைப்படுத்தியுள்ளது. மேய்க்கால் என்றால், மேய்ச்சலுக்குப் பயன்படும் நிலம் என்று அர்த்தம். தாங்கல் என்றால் நீர்நிலை என்று அர்த்தம். சோழிங்கநல்லூர் ஏரி நிலத்தை மேய்ச்சல் நிலமாகவும் நீர்நிலையாகவும் சாலையாகவும் வருவாய்த்துறை வகைப்படுத்தியிருந்தது.

மழைக்காலத்தின்போது ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாகவும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மணல் பாதையாகவும் அந்த நிலம் செயல்படுகிறது. அதனால் இந்த வகைப்பாடு வழங்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பு இதையே சுட்டிக்காட்டி சாலை என்று வகைப்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறியது.

அதற்கு, அறப்போர் இயக்கம் தரப்பிலிருந்து தாங்கல் என்பது நீர்நிலைதான் என்பதை மேற்கோள் காட்டியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நீர்ப்பிடிப்புப் பகுதியாக ஒரு நிலம் இருக்கும்போது அதை மாற்றுவதற்கான அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்று குறிப்பிட்டார்.

ஏரியில் கட்டப்பட்டிருக்கும் கட்டடம் சிவப்பு வட்டத்துக்குள் காட்டப்பட்டுள்ளது
ஏரியில் கட்டப்பட்டிருக்கும் கட்டடம் சிவப்பு வட்டத்துக்குள் காட்டப்பட்டுள்ளது

மேலும், சென்னை மெட்ரோ வளர்ச்சித் துறையின் இரண்டாவது பெருந்திட்டத்திலும் (Second Master Plan), இந்த நிலம் நீர்நிலைப் பகுதியென்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சுமார் அரை ஏக்கர் நிலத்தை 2017-ம் ஆண்டு நிறுவனப் பயன்பாட்டுப் பகுதியாக மாற்றுவதற்கு அரசுத் தரப்பு கேட்கிறது. அதற்கு 2019 மார்ச் மாதம் அனுமதி கிடைக்கிறது.

ஏற்கெனவே, 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்த டி.கே.சண்முகம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான வழக்கில், ``அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நீர்நிலைகளையோ, நீரோட்டத்துக்காக இயற்கையாக உருவான பாதையையோ மனிதப் பயன்பாடுகளுக்காக அழிக்கக் கூடாது. நீர்நிலைகளின் நிலத்தை மற்ற பயன்பாடுகளுக்காக மாற்றி வகைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை" என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இருந்தும், இந்த நில வகைபாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்தபோது இது ஏரி நிலம் போலத்தான் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டதோடு பின்வரும் உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

1. நீதிமன்ற உத்தரவு வரும் வரை காவல்நிலையத்தைப் பயன்பாட்டுக்குத் திறக்கக் கூடாது.

2. காவல் நிலைய கட்டுமானப் பணிக்கு என்று இனி பணம் செலவு செய்யக் கூடாது.

3. தாமரைக்கேணி ஏரியின் நிலத்தில் இந்தக் காவல் நிலையம் கட்டப்பட்டிருப்பது உறுதியானால், அந்தக் கட்டடம் இடிக்கப்பட வேண்டும்.

4. காவல் நிலைய கட்டடம் நீர்நிலையில்தான் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய சென்னை ஐ.ஐ.டி குழு ஒன்றை அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையில் இது உறுதியானால், செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்காகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, மீண்டும் அந்த நீர்நிலையை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசியபோது, ``செம்மஞ்சேரி காவல் நிலைய கட்டடம் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் இந்த உத்தரவுகளை வழங்கியுள்ளது. நீதிமன்றம் விரைவில் ஏரி நிலத்தை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

 ‘அறப்போர்’ ஜெயராம்
‘அறப்போர்’ ஜெயராம்

மேலும், இந்தக் கட்டுமானத்தை அகற்றிய பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் ஏரி நிலமாக மாற்றியமைப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று கேட்டபோது, ``கட்டடம் அமைப்பதற்காக அந்த நிலத்தில் மண் கொட்டி நிரப்பினார்கள். நீதிமன்ற உத்தரவு வந்தபிறகு, இந்தக் கட்டடத்தை இடித்துக் காலி செய்துவிட்டு, அங்குக் கொட்டப்பட்டிருக்கும் மண் முழுவதையும் அகற்றிவிட்டாலே, அப்பகுதியை மீண்டும் ஏரி நிலமாக எளிதில் மீட்டெடுத்துவிட முடியும். இழந்த நிலத்தை மீண்டும் ஏரிக்குரிய நீர்பிடிப்புப் பகுதியாக மாற்றியமைப்பது கடினமான வேலையாக இருக்க வாய்ப்பில்லை. அதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டால், ஏரி நிலத்தை மீட்டெடுக்கும் வேலைகளை மேற்கொள்ளலாம்" என்றார்.

பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் நீர்நிலைகளுக்குச் சொந்தமான நிலங்களை மற்ற பயன்பாட்டுக்குத் திசை திருப்பக் கூடாது என்று உத்தரவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும், அரசாங்கம் மீண்டும் மீண்டும் அதே வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறது.

சென்னை மெட்ரோ வளர்ச்சித்துறை, நகரத் திட்டமிடுதலில் நீர்நிலைகளைப் புறக்கணிப்பதால் பாதிக்கப்படப்போவது மக்கள்தாம். கோடைக்காலத்தில் கடுமையான வறட்சியையும் நீர்ப் பற்றாக்குறையையும் மழைக்காலத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை இழந்து நிற்பதால் வெள்ளச் சேதங்களும் ஏற்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து இந்தச் சேதங்களைச் சந்தித்துக்கொண்டேயிருந்தாலும்கூட, இத்தகைய நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

சோழிங்கநல்லூர் பகுதியின் நிலத்தடி நீர் மீள்நிரப்பு செயல்பாடுகளிலும் நீராதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் தாமரைக்கேணி ஏரி நிலத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டும்.

சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரி
சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரி
ஏரியில் கட்டப்பட்ட காவல் நிலையம்; எதிர்த்துக் கேட்டதற்கே பாய்ந்த வழக்கு... என்ன செய்கிறது அரசு?

இதுமட்டுமன்றி, சென்னைக்குள் இருக்கும் அத்தனை நீர்நிலைகளையும் தணிக்கை செய்து, அவற்றின் எல்லைகளை மறுவரையறை செய்து அவை இழந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மீட்டெடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்மூலம், சென்னையின் நீராதாரங்களைப் பாதுகாப்பதோடு, மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களையும் கட்டுப்படுத்த முடியும். இது நடந்தால்தான், வருடா வருடம் சென்னை சந்திக்கும் நீர் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு தேடும் முயற்சியில் நமக்கான முதல் வெற்றியே கிடைக்கும்.

ஓர் அரசாங்கம், இயற்கை வளங்களின் பாதுகாவலனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, உரிமையாளரைப் போல் நடந்து கொள்ளக்கூடாது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு