Published:Updated:

`சென்னை காற்றின் தரம் நான்காவது ஆண்டாக மோசம்!' - தலைநகரைக் காப்பாற்றுமா அரசு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காற்று மாசுபாடு (கோப்பு படம்)
காற்று மாசுபாடு (கோப்பு படம்)

கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி காற்று மாசுபாட்டில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய தொற்றுநோய் பேரிடர் சூழலில் இது மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் மிகவும் மாசடைந்த காற்றை சுவாசிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னையை எப்போதாவது பார்க்கலாம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சென்னை இந்தப் பட்டியலில் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது. சென்னை பெருநகரத்தின் காற்று தரம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 2021-லும் மிக மோசமாகவே இருப்பதாக சமீபத்தில் வெளியான ஹெல்த்தி எனெர்ஜி இனிஷியேட்டிவ் (Healthy Energy Initiative) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

சென்னையின் 20 இடங்களில் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காற்று தர அளவீடான PM 2.5 என்ற நுண்துகள்களின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட (60 µg/m3) அளவைவிட 3.8 மடங்கு வரை அதிகமாக இருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் காற்றிலுள்ள கன உலோகங்கள் மற்றும் பி.எம் 2.5 நுண்துகள்கள் ஆகியவை, எந்தளவில் கலந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என்று அனைத்துவிதமான பகுதிகளிலும் காற்றுத் தர கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்திய ஆய்வுக்குழு அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.

Air Pollution (Representational Image)
Air Pollution (Representational Image)

சென்னை விமான நிலையம், பாரீஸ் கார்னர், வியாசர்பாடி, திருவொற்றியூர், காசிமேடு, துரைப்பாக்கம், குருவிமேடு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர், மீஞ்சூர், ஊர்ணமேடு, சேப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தி.நகர், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம், அம்பத்தூர், காட்டுப்பள்ளி குப்பம் ஆகிய பகுதிகளில் காற்றுத் தர கண்காணிப்பு கருவிகளைப் பொருத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சென்னை விமானநிலையம், பாரீஸ் கார்னர், வியாசர்பாடி மீன்பிடித் துறைமுகம் அருகே சேகரிப்பட்ட தரவுகளின்படி, பி.எம் 2.5 அளவு 176 முதல் 228 வரை இருப்பதாகப் பதிவாகியுள்ளது. காற்றிலுள்ள நுண் துகள்கள் இவ்வளவு அதிகமாக இருந்தால், மக்களிடையே இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குழந்தைகள் வெளிப்புறங்களில் விளையாடுவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.

காட்டுப்பள்ளி குப்பம் மற்றும் மேற்கண்ட மூன்று பகுதிகள் தவிர்த்து, திருவொற்றியூர், காசிமேடு, துரைப்பாக, குருவிமேடு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி உட்பட 16 பகுதிகளில் காற்றிலுள்ள நுண்துகள்களின் அளவு 59 முதல் 128 வரை பதிவாகியுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளோடு இருப்பவர்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருடைய ஆரோக்கியத்தை இது பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. இவைபோக, பதிவான தரவுகளிலேயே காட்டுப்பள்ளி குப்பத்தில் மட்டும்தான், நுண்துகள்களின் அளவு 53 என்ற அளவில், அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவில் பதிவாகியுள்ளது.

ஹெல்த்தி எனெர்ஜி இனிஷியேட்டிவ் அமைப்பைச் சேர்ந்த காற்று மாசு ஆய்வாளரான விஸ்வஜா சம்பத், இந்த ஆய்வு குறித்துப் பேசியபோது, ``2016 முதலே ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆய்வை மேற்கொள்கிறோம். முதல் முறை ஏழு இடங்களில் ஆய்வு செய்தோம். ஆனால், இந்த முறை, சென்னை முழுவதற்குமான தரவுகளைச் சேகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, கிட்டத்தட்ட சென்னை அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 20 பகுதிகளில் காற்றின் தரத்தைப் பரிசோதித்தோம்.

எண்ணூர் அனல்மின் நிலையம்
எண்ணூர் அனல்மின் நிலையம்

அந்த 20 பகுதிகளிலும் இந்தக் காற்று தர கண்காணிப்பு கருவிகளை வைத்தோம். அந்தக் கருவியில், டெஃப்லான் என்ற பொருளில் தயாரிக்கப்பட்ட வடிகட்டும் காகிதம் பொருத்தப் பட்டிருக்கும். 24 மணிநேரத்துக்கு இது முழுவதுமாக இயங்கும்போது, மனிதர்கள் எந்த வேகத்தில் காற்றை சுவாசிக்கிறார்களோ அதேபோல், காற்றை உள்ளிழுக்கும். 24 மணிநேரத்துக்குத் தொடர்ந்து இந்த இயந்திரம் இயங்கும்போது உள்ளிழுக்கப்படும் காற்றில் இருக்கும் கன உலோகங்கள், நுண் துகள்கள் ஆகியவை மட்டும் டெஃப்லானில் தயாரிக்கப்பட்ட வடிகட்டும் காகிதத்தில் படிந்துவிடும். அந்த டெஃப்லான் காகிதத்தை எடுத்து, பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து பார்த்து, என்னென்ன கன உலோகங்கள் மற்றும் எவ்வளவு நுண்துகள்கள் அந்தக் காற்றில் கலந்துள்ளன என்பதைக் கண்டறியலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆய்வில், வட சென்னையிலிருக்கும் அனல் மின் நிலையங்கள், நிலக்கரி சாம்பல் கொட்டுமிடங்கள், துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள், பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது தெரியவந்தது. அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளில் காணப்படும் சிலிகா (Silica) அங்குப் பதிவான காற்று மாதிரிகளில் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் பெரியளவில் மோசமடைந்துள்ளது.

வட சென்னை
வட சென்னை

நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில், காற்று மாசு நுரையீரலை மட்டுமே பாதிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்பது தெளிவாகிறது. காற்றிலுள்ள நுண்துகள்களால், எளிதாக நம் நுரையீரலின் உள்ளார்ந்த உறுப்புகளுக்கு உள்ளேயும் போகமுடியும். அதுபோக, ரத்த ஓட்டப் பாதையிலும் அவை கலந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், இதய பாதிப்புகள் கூட ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன

நாம் வழக்கம்போல் வெளியே சென்று திரும்பும்போது, கண் எரிச்சல், விழிகள் வறண்டு போகுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கொரோனா பேரிடர் சூழல்களில், நுரையீரலையே அதிகம் பாதிக்கும் நோய்த்தொற்று பரவும் நேரத்தில், காற்று மாசுபாடு அதன் தீவிரத்தை மேன்மேலும் அதிகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. இத்தாலி எந்தளவுக்கு கொரோனா பேரிடரில் பாதிக்கப்பட்டது என்று நம் அனைவருக்குமே தெரியும். அங்குமே குறிப்பாக, காற்று மாசு அதிகமிருந்த நகரங்களில்தான் அதிக அளவிலான பாதிப்புகள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன" என்று கூறினார்.

Air Pollution (Representational Image)
Air Pollution (Representational Image)
Pixabay
கருச்சிதைவு, குறைப்பிரசவம்... காற்று மாசுபாடு நிகழ்த்திக் கொண்டிருக்கும் பயங்கரங்கள்!

இவ்வளவு ஆபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடிய காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கேட்டபோது, ``கோவிட் பேரிடர் என்ற ஒரேயொரு தொற்றுநோய்ப் பேரிடரோடு பிரச்னை முடிந்துவிடப் போவதில்லை. காற்று மாசுபாடு என்பதையும் பேரிடராகவே கருதி அதைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

ஏற்கெனவே இருக்கும் தொழிற்சாலைகள் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றனவா இல்லையா என்பது பற்றி எவ்வித கண்காணிப்பும் முழுமையாகச் செய்யப்படுவதில்லை. சட்ட திட்டங்கள் இருந்தும்கூட, அது முறையாகப் பின்பற்றப்படாமல் இருக்கும் சூழலில், நமக்குப் புதிய தொழிற்சாலைகள் தேவையா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

காற்று மாசுபாடு ஏற்படுவதற்கான காரணிகளையும் அதற்கு யார் பொறுப்பு, எப்படிக் கட்டுப்படுத்துவது என்பன போன்ற விவரங்களையும் மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள், அரசு நடவடிக்கை எடுக்கும். இவைபோக, வாகனங்களின் கரிம உமிழ்வு அளவுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி முற்றிலுமாக முறைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு இன்றைய சூழலில் தீவிரமான பிரச்னையாக உருவெடுத்து உள்ளதாகவும் டெல்லியின் கோவிட் பரவல் விகிதத்தை அதிகரிப்பதில் 13 சதவிகித காற்று மாசுபாடு பங்கு வகிப்பதாகவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை காற்று மாசுபாடு
சென்னை காற்று மாசுபாடு
Vikatan

கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி காற்று மாசுபாட்டில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய தொற்றுநோய் பேரிடர் சூழலில் இது மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆகவே, அவசரக்கால அடிப்படையில் உடனடியாக இதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு