Published:Updated:

`மக்கள் முக்கியமா, அனல்மின் நிலையங்கள் முக்கியமா?' - புதிய வழியைக் காட்டும் ஆய்வறிக்கை

``சென்னையிலுள்ள காற்று மாசுபாடு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது." - முனைவர் ரேச்சல் ஹக்ஸ்லி

காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, அதற்கான நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளைக் குறைக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க என்று பல வழிகளில் நிலக்கரி அனல்மின் நிலையங்களை மூடுவது பலனளிக்கும் என்று C40 என்ற அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஆய்வு கூறுகிறது. பொதுவாக, ஒரு துறையை மூடினால், அதன்மூலம் பெரிய அளவிலான இழப்புகள்தானே ஏற்படும். இங்கு என்ன தலைகீழாகச் சொல்கிறார்கள்?

எனக்கும் அதே சந்தேகம்தான். இதுபற்றி அவர்களுடைய ஆய்வறிக்கையில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Coal power plant
Coal power plant
AP Photo/Martin Meissner, File

அனல்மின் நிலையங்களால் ஏற்படுகின்ற காற்று மாசுபாடு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுடைய உடல்நலத்தில் பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்குவதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. தற்போது இந்தியா முழுக்க அனல் மின் நிலையங்களின் உற்பத்தித் திறனை 64 ஜிகாவாட்டாக அதிகப்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள் குறித்து, ``அனல்மின் நிலைய உற்பத்தியால் உண்டாகும் காற்று மாசுபாட்டின் விளைவாக ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் மட்டுமே ஏற்படும் மரணங்களின் எண்ணிக் கையை 64 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் இரண்டு மடங்காக அதிகப்படுத்தும். மேலும், இதனால் அடுத்த 10 ஆண்டுகளில், சராசரி ஆயுட்காலத்தைவிடக் குறைவான வயதிலேயே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இப்போதிருப்பதைவிட 60 சதவிகிதம் அதிகரிக்கும்" என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், ``பெருநகரங்களும் அரசுகளும் அனல்மின் நிலையங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் முதலீடு செய்வது வர்த்தக ரீதியிலும் சரி, தொழிலாளர்களின் உடல்நலம் சார்ந்தும் சரி, நன்மை விளைவிக்கக்கூடியதாக இருக்கும். ஒருவேளை புதிதாக அனல்மின் திட்டங்களைச் செயல்படுத்தினால் உடல்நலக் குறைபாடுகளால் மக்கள் எடுக்கும் விடுப்பு நாள்களின் அளவு 2030-ம் ஆண்டில் சென்னை நகரத்துக்குள் மட்டுமே 22 லட்சம் நாள்களாக இருக்கும். இது நகரத்தின் உற்பத்தித் திறனில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது தலைநகரில் மின்சாரத்தைக் குறைந்த விலையிலேயே விநியோகம் செய்ய வழி ஏற்படுத்துவதோடு, 2020-30 காலகட்டத்தில் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு போன்ற துறைகளின் மூலம் உருவாக்க முடியும்" என்றும் சொல்லப்படுகிறது.

அனல்மின் நிலையங்கள்
அனல்மின் நிலையங்கள்
Chennai Climate Action Group
`இந்திய அனல்மின் நிலையங்கள் இந்த விதிகளை பொருட்டாகவே மதிப்பதில்லை!' - அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

இந்த அறிக்கையின்படி, C40 ஆய்வு மேற்கொள்ளும் மற்ற 96 நகரங்களைவிடவும் சென்னை பெருநகரத்தில் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளார்கள். இந்தியாவில் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தியில் 11 சதவிகிதம், நகரங்களிலிருந்து 500 கி.மீ சுற்றளவுக்குள்ளாக உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரியை எரித்து மேற்கொள்ளப்படும் இந்த உற்பத்தி முறையிலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு, காற்றிலேயே நீண்ட தூரத்துக்குப் பயணிக்கக்கூடியது மற்றும் அப்படிக் கலக்கும் மாசுபாடுகளால் ஏற்படும் தாக்கமும் அதிகம். குறிப்பாக, விளிம்புநிலையில் வசிக்கும் இளைஞர்கள், முதியோர், கருவுற்ற பெண்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

C40 அமைப்பின் அறிவுசார் மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவரான முனைவர் ரேச்சல் ஹக்ஸ்லி இந்த ஆய்வு குறித்துப் பேசியபோது, ``சென்னையிலுள்ள காற்று மாசுபாடு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. தேசிய அளவிலான இப்போதைய திட்டங்களின்படி, 2020-30 ஆண்டுக்குள் இங்கு செயல்படும் அனல்மின் நிலையங்கள் 20 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக, இந்தியா தன்னுடைய காலநிலை, காற்றுத்தர இலக்குகளைப் புறந்தள்ளிவிட்டு, 28 சதவிகிதம் அதிகப்படுத்துவதோடு, சென்னை நகர்ப்புற மக்களுடைய உடல்நலன் பாதிக்க, வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படக் காரணமாக இருக்கிறது" என்று கூறினார்.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களைச் சுற்றி ஏற்படவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் தங்கள் சராசரி ஆயுட்காலத்துக்கும் முன்பே இறக்க நேரிடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. அதிலும், டெல்லி, மும்பை, பெங்களூரைவிட சென்னையில்தான் உயிரிழப்புகள் இரண்டு மடங்காகும் என்றும் கூறுகிறது. அதுபோக, 31,700 குறைப் பிரசவங்களும் பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமா நோய்ப் பாதிப்பும் ஏற்படும் என்ற கடுமையான எச்சரிக்கையை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

அனல்மின் நிலையம்
அனல்மின் நிலையம்
மேற்கூரை சூரிய மின் உற்பத்தி: இலக்கு 40GW, அடைந்தது வெறும் 4.4GW; ஏன் திணறுகிறது இந்தியா?

இதுபோன்ற உடல்நலக் கோளாறுகள் அதிகமாகும்போது, தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் அதிகமாகும், அது உற்பத்தித் திறனைக் குறைக்கும். உற்பத்தித் திறன் குறையும்போது அது, நகரின் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு, இவற்றால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பொருளாதார இழப்புகளுக்கு ஏழை மக்களிடையே வழிவகுக்கும். 2020 - 30 வரையிலான காலகட்டத்தில் இந்தக் காரணங்களால், மக்களுடைய உடல்நலன் சார்ந்த செலவுகள் 5.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவித்தால், இதைவிட இரண்டு அதிக வேலைவாய்ப்புகளை அங்கு வழங்க முடியும் என்று நீண்டகாலமாகவே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கைப்படி, அப்படி ஈடுபட்டால், புதிதாக 1,40,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இந்த அறிக்கை குறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ``காற்று மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுக்கொன்று பெரிய அளவில் தொடர்புடையவையாக அணுகப்பட வேண்டிய பிரச்னைகள். குறிப்பாக, அதிக அளவிலான கரிம உமிழ்வுகள் நிகழும் முக்கியக் காரணிகள் ஒன்றாக இருப்பது நிலக்கரி சார்ந்த துறைகள்தான். இப்போது நாம் எதிர்கொண்டுவரும் ஒரு டிகிரி செல்ஷியஸ் புவி வெப்பநிலை உயர்வில் 0.3 டிகிரி அதிகரிப்பதில் நிலக்கரி சார்ந்த துறைகள்தான் பங்கு வகித்துள்ளன. ஆனால், அரசு கொள்கைகளை வகுக்கும்போது காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் தனித்தனியே கையாளப்படுகின்றன. இந்த நிலை மாறப்வேண்டும். இரண்டையும் ஒருசேரக் கட்டுப்படுத்த அனல்மின் நிலையங்கள் படிப்படியாக மூடப்படுவது குறித்த கொள்கை நிலைப்பாட்டை அரசு எடுக்கப்வேண்டும்" என்று கூறினார்.

அறிக்கைப்படி, ஓராண்டில் இந்தியா 274 மில்லியன் டன் பசுமை இல்ல வாயுவை வெளியிடுகிறது. அனல்மின் நிலையங்களை மூடுவதன் மூலம், இதில் 11 சதவிகித உமிழ்வைக் குறைக்க முடியும். இது 60 மில்லியன் வாகனங்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கரிமத்துக்கு நிகர்.

Power Plant (Representational Image)
Power Plant (Representational Image)
Pixabay
`கடல் மட்டம் உயர்வது உறுதி; அழிவு பின்னர் அறிவிக்கப்படும்!' - அச்சத்தை உறுதிசெய்த பெருங்கடல் ஆய்வு

மேலும், 2021 - 30 ஆண்டுக்குள் இந்தியாவில் நிலக்கரிப் பயன்பாடு 20 சதவிகிதம் குறையும். சென்னையைச் சுற்றியிருக்கும் 33 பழைய மற்றும் அதிக அளவு மாசுபாட்டை விளைவிக்கும் அனல்மின் நிலையங்களின் காலக்கெடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிகிறது. அதைத் தொடர்ந்து 2030-ல் 40 அனல்மின் நிலையங்களின் காலக்கெடுவும் முடிவடைகிறது. அதோடு, 2045-ம் ஆண்டில் அனைத்து அனல்மின் நிலையங்களின் காலக்கெடுவுமே முடிவடைகிறது. ஆகையால், ``அவற்றைக் காலக்கெடு முடிவதற்கும் முன்பாகவே மூடுவது குறித்தும் மாசுபாடற்ற உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்தும் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். இவற்றோடு, புதிய அனல்மின் நிலையங்களைக் கட்டக் கூடாது. காற்றின் தரம் மற்றும் காலநிலை கொள்கைகளை உறுதிப்படுத்த வேண்டும். இதை இந்த அறிக்கையின் பின்னணியிலிருந்து பார்க்கையில், சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் விரைவிலேயே அனல்மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து வெளியேற வேண்டியதன் அவசியம் தெளிவாகப் புரியும்" என்று இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு