Published:Updated:

மூடப்படும் அபாயத்தில் சென்னை பாம்புப் பண்ணை; காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன?

American Iguana/ Chennai Snake Park ( Subagunam Kannan )

50 ஆண்டுக்காலமாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்து வந்த சென்னை பாம்புகள் பண்ணை மூடப்படும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. இனியாவது இந்தப் பிரச்னை அரசின் கவனத்துக்குச் செல்லுமா?

மூடப்படும் அபாயத்தில் சென்னை பாம்புப் பண்ணை; காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன?

50 ஆண்டுக்காலமாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்து வந்த சென்னை பாம்புகள் பண்ணை மூடப்படும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. இனியாவது இந்தப் பிரச்னை அரசின் கவனத்துக்குச் செல்லுமா?

Published:Updated:
American Iguana/ Chennai Snake Park ( Subagunam Kannan )

கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ளது, சென்னை பாம்புப் பண்ணை. கொரோனா பேரிடர் காரணமாகக் கடந்த ஓராண்டுக் காலமாக முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில், வருமானம் ஏதுமின்றி தற்போது மொத்தமாக மூடப்படும் அளவுக்கு மோசமான சூழலில் சிக்கியுள்ளது.

சென்னை பாம்புப் பண்ணை
சென்னை பாம்புப் பண்ணை
Subagunam Kannan

1972-ம் ஆண்டு ஊர்வன நிபுணர் ரோமுலஸ் விடேகர் தலைமையிலான இயற்கை ஆர்வலர் குழு இந்தப் பாம்புப் பண்ணையை உருவாக்கியது. இந்தியாவிலேயே ஊர்வனங்களுக்கு என முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரு பூங்காவாக இது தேசியளவில் புகழ் பெற்றது

இங்கு பராமரிக்கப்படும் பாம்புகள், பல்லி மற்றும் முதலை வகைகளைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் வருவது வழக்கம். மாணவர்களிடையே, குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே பாம்பு, பல்லி போன்ற ஊர்வனங்களின் மீதான ஈர்ப்பையும் புரிதலையும் உருவாக்குவதில் இந்தப் பண்ணையின் பங்கு முதன்மையாது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படியாக, நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தொகையையே பெருமளவில் நம்பிச் செயல்பட்டுக் கொண்டிருந்த பாம்புப் பண்ணை, கடந்த ஓராண்டுக் காலமாக மூடப்பட்டிருப்பதால், வருமானமின்றிச் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால், அங்கு பராமரிக்கப்படும் உயிரினங்களைப் பராமரிக்க, அவற்றுக்கு உணவளிக்கப் போதுமான நிதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நாகப் பாம்பு
நாகப் பாம்பு
Subagunam Kannan

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 80 லட்சம் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது சென்னை பாம்புப் பண்ணை. இதைச் சமாளிக்க, தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்களிடம் நிதி உதவி வேண்டியிருந்தது பூங்கா நிர்வாகம். அதைத் தொடர்ந்து ஹெச்.சி.எல், ராம்கோ, கவின் கேர் போன்ற தனியார் நிறுவனங்கள் நிதியுதவி செய்தன. மேலும், சென்னை சுற்றுச்சூழல் துறையின் நிதி, பொதுமக்களும் தன்னார்வலர்களும் அளித்த நிதியுதவிகள் மூலம் இதுவரை சமாளித்து வந்துள்ளனர்

அதைத் தொடர்ந்து கோவிட் தாக்கம் குறையத் தொடங்கியதால் மீண்டும் திறக்கப்பட்ட பூங்கா, இரண்டாம் அலை காரணமாக மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மீண்டும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிடைத்த நிதியுதவிகள் அனைத்தும் மே மாத இறுதியிலேயே காலியாகிவிட்டதால், இனிவரும் மாதங்களில் அங்கிருக்கும் உயிரினங்களைப் பராமரிக்க, உணவளிக்க, அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் போதிய நிதி இன்றி திணறி வருகிறது.

முதலைகல்/ சென்னை பாம்புப் பண்ணை
முதலைகல்/ சென்னை பாம்புப் பண்ணை
Subagunam Kannan

இந்நிலையில், நிதியுதவி வேண்டி தமிழ்நாடு ஆளுநரிடமும் முதலமைச்சரிடமும் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போதைய சூழலில், கையிருப்பிலிருக்கும் 6 லட்சம் ரூபாயை, ஆள் குறைப்பு செய்தும் பணியாளர்களின் சம்பளத்தைப் பாதியாக்கியும், உயிரினங்களுக்கான பராமரிப்பு மற்றும் உணவளித்தல் போன்ற தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகளை மேற்கொண்டு வருகிறது பாம்புப் பண்ணை நிர்வாகம்.

சென்னை பாம்புப் பண்ணையின் நிதி நெருக்கடி குறித்துப் பேசிய அதன் இயக்குநர் ராஜரத்தினம், ``50 ஆண்டு வரலாறு கொண்ட இந்தப் பூங்கா, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பல அரிய வகை உயிரினங்களை அடைப்பிட இனப்பெருக்கத்தில் ஈடுபட வைத்தும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் பணிகளையும் மேற்கொள்கிறது. இந்தப் பூங்காவின் நிதி முழுவதும் பார்வையாளர்களையே நம்பியிருந்தது. நுழைவுக் கட்டணத்தைச் சார்ந்தே இருந்த நிலையில், கொரோனா பேரிடர் மிகப்பெரிய இழப்பை உண்டாக்கியுள்ளது.

கரியால் முதலை குட்டிகள்/ சென்னை பாம்புப் பண்ணை
கரியால் முதலை குட்டிகள்/ சென்னை பாம்புப் பண்ணை
Subagunam Kannan

ஒரு மாதத்துக்கு, சம்பளம், உயிரின பராமரிப்பு, உணவு என்று சுமார் 7 லட்சம் வரை செலவாகும். எந்த வருமானமும் இல்லாததால், இப்போது அந்தத் தொகையை ஒவ்வொரு மாதத்துக்கும் திரட்டுவது மிகச் சிரமம். இயன்றவரை சிக்கனப்படுத்திச் செலவழித்திருந்தாலும்கூட, இதுவரை எங்கள் சேமிப்பிலிருந்த பணம் அனைத்தும் தற்போது செலவாகிவிட்டது.

இனிவரும் நாள்களில் இந்தப் பூங்காவை மேலும் நிர்வகித்துச் செல்வதற்கு, உயிரினங்களைப் பராமரிப்பதற்கு, அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உதவ வேண்டும்" என்று கூறினார்.

கரியால் முதலை/ சென்னை பாம்புப் பண்ணை
கரியால் முதலை/ சென்னை பாம்புப் பண்ணை

இதுகுறித்து பாம்புப் பண்ணை நிர்வாகம், ``அப்படியொரு நிலை கிண்டியிலிருக்கும் பாம்புப் பண்ணைக்கு ஏற்பட்டால், அதன் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டிய நிலை வரும். ஏற்கெனவே வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் உயிரியல் பூங்கா, போன்றவையும் மூடப்பட்டிருப்பதால் அங்கும் வருமானம் ஏதுமில்லை. இதனால் அவையும் பெரும் நிதிப் பற்றாக்குறையில் தவிக்கின்றன. இந்நிலையில், பாம்புப் பண்ணையும் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் சூழலை அரசு தவிர்க்கவே முயலும். அதன் விளைவாக அரசு பாம்புப் பண்ணையின் தற்காலிக நிதி பற்றாக்குறையை, போதுமான நிதி உதவி வழங்குவதன் மூலம் சுமுகமாகத் தீர்க்க அரசு முடிவெடுக்கலாம்" என்று குறிப்பிடுகிறது.

மேலும், ``கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் விளைவாக உயிரியல் பூங்காக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிச் சுமையைப் பற்றி மத்திய காட்டுயிர் ஆணையத்துக்குத் தெரியாமல் இல்லை. இருந்தாலும், காட்டுயிர் பூங்கா நிர்வாகத்துக்குப் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் கொண்ட இந்த மத்திய அரசு நிறுவனம், பூங்காக்கள் நிதித் தட்டுப்பாட்டில் தவிக்கும் நிலையில், எந்தவோர் உதவியையும் செய்ய முன்வராமல், பாரா நிலையில் இருப்பது வேதனைக்குரியது. அனைத்து காட்டுயிர் பூங்காக்களும், பெரும்பாலும் தங்கள் நுழைவுக் கட்டண வருவாயில்தான் நிதி நிலையைச் சமாளித்து வந்தன என்ற விவரம் அதற்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும், அதிகாரம் செலுத்தும் ஆணையம் ஆதரவு அளிக்க மறுத்தது ஏனோ!" என்றும் பாம்புப் பண்ணை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நட்சத்திர ஆமை/ சென்னை பாம்புப் பண்ணை
நட்சத்திர ஆமை/ சென்னை பாம்புப் பண்ணை
Subagunam Kannan

ஏற்கெனவே, கொரோனா பெருதொற்றுப் பேரிடர் தொடங்கியது முதல் அரசாங்கம் காட்டுயிர் பாதுகாப்பின் மீது குறைந்தபட்ச கவனத்தைக்கூட செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது 50 ஆண்டுக்காலமாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்து வந்த சென்னை பாம்புகள் பண்ணை மூடப்படும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. இனியாவது இந்தப் பிரச்னை அரசின் கவனத்துக்குச் செல்லுமா?

இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை அமைச்சரிடம் பேச முயன்றோம். அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் இருப்பதால் பேச முடியவில்லை. மேற்கொண்டு அவர் இதுகுறித்து தெரிவித்தால், அதுவும் பதிவு செய்யப்படும்.

சென்னை பாம்புகள் பண்ணைக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்கில் இருக்கும் கணக்குக்கு அனுப்பலாம்.

https://chennaisnakepark.org/donate