Published:Updated:

"அரசே சதுப்பு நிலங்களை அழிக்கலாமா?" - முதல்வரிடம் கேள்வி எழுப்பும் மாணவர்கள்

எதிர்காலச் சந்ததிகள், 'சென்னையின் சூழலியல் அடையாளமான சதுப்பு நிலங்களைக் காப்பாற்றுங்கள்' என்று முதல்வருக்குக் கடிதம் கொடுத்துள்ளார்கள். 'எங்கள் எதிர்காலத்தை மூழ்கடித்துவிடாதீர்கள்' என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Climate Emergency
Climate Emergency

காலநிலை அவசரம் உலகம் முழுவதும் தீவிரமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேடா துன்பெர்க் என்ற 15 வயதுச் சிறுமி தொடங்கி வைத்த காலநிலைப் போராட்டம், உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளின் சிந்தனைக் காடுகளில் தீப்பொறிகளைச் சிதறடித்துக்கொண்டிருக்கிறது. பல நகரங்களில் அந்தத் தீப்பொறி பரவிக் காட்டுத்தீயாக உருவெடுத்தும்விட்டது. இன்று (20.09.2019), உலகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் என்று அனைவரும் தங்கள் வகுப்பறைகளையும் பணியிடங்களையும் விட்டு வெளியேறிக் "காலநிலை அவசரத்தைக் கவனியுங்கள் அரசுகளே!" என்று முழக்கமிட்டுள்ளார்கள்.

கிரேடா துன்பெர்க் தெறிக்கவிட்ட தீப்பொறி, சென்னையிலும் தீயைப் பற்ற வைத்துள்ளது. அதன் விளைவாக, எதிர்காலச் சந்ததிகளின் முழக்கங்கள் சென்னை அண்ணா சாலையில் எதிரொலித்தன.

தங்கள் வகுப்பறைகளிலிருந்து வெளியேறி வெளியுலகத்தின் சூழலை அவர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஏட்டுக் கல்வியையும் தாண்டி அவர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்தப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக, எதிர்காலச் சந்ததிகள், 'சென்னையின் சூழலியல் அடையாளமான சதுப்பு நிலங்களைக் காப்பாற்றுங்கள்' என்று முதல்வருக்குக் கடிதம் கொடுத்துள்ளார்கள். 'எங்கள் எதிர்காலத்தை மூழ்கடித்துவிடாதீர்கள்' என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். நம் குழந்தைகளின் மனதில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும். மாறாக, அப்படியொன்று இருக்குமா என்ற அச்சத்தை நம் அரசுகள் விதைத்துவிட்டதன் விளைவுதான் இந்தக் கடிதம். அந்த இளம் சூழலியலாளர்கள் எழுதிய அந்தக் கடிதத்தின் சாராம்சம் இதோ உங்களுக்காக.

சென்னையின் எதிர்காலச் சந்ததிகளுடைய கடிதம்:

"நம் அரசுகளும் அரசு அதிகாரிகளும் காலநிலை மாற்றம் என்பது ஏதோ தவிர்க்க வேண்டிய மூடநம்பிக்கை என்பதைப்போல் அலட்சியமாக இருக்கிறார்கள். காலநிலை மாற்றம் உண்மைதான். தவறான செயல்பட்டது, சரியாகச் செயல்படாதது, பல்லாண்டு காலமாகச் சூழலியல் பாதுகாப்புக்குத் தவணை விதித்துக் கொண்டிருந்தது என்று நீங்கள் செய்த அத்தனையும் பூமியின் உயிர் வாழத் தகுந்த சூழலைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது.

Climate Strike
Climate Strike
Mongabay

குழந்தைகள் மற்றும் இளைஞர்களாகிய நாங்கள், இன்று வகுப்பறைகளையும் பணியிடங்களையும் விட்டு வெளியேறியுள்ளோம். அதற்குக் காரணம், காலநிலை அவசரத்தின் அபாயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்பதுதான். உங்கள் முன் நிற்கும் நாங்கள் இந்நாட்டின் மற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குப் பிரதிநியாகக் கேட்கிறோம். எங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்.

ஒரு குழந்தையாக இன்று சென்னையில் வளர்வதென்பது சாதாரண விஷயமல்ல. இந்தச் சின்ன வயதிலேயே வெள்ளம், வறட்சி, புயல் என்று பல பேரழிவுகளைச் சந்தித்துவிட்டோம். இந்தப் பேரழிவுகளுக்கான காரணங்களும் எங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிகின்றன. சுற்றுச்சூழலைத் தவறான முறையில் அணுகுவது, நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையும் அழிப்பது, அதீத இயற்கைவளச் சுரண்டல் என்று அத்தனையும்தான் இதற்கான காரணங்கள். அனைவரும் இதைப் பற்றிப் பேசுவதை நாங்கள் பார்க்கிறோம். நீதிமன்றங்களும் அடுத்தடுத்து பல உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. அரசும் எதிர்மறையாகச் செயல்படுவதைப் போலத்தான் தெரிகின்றது.

எங்கள் எதிர்காலத்தை மூழ்கடிக்க ஏதோ கூட்டுச்சதி நடப்பது போலவே நாங்கள் உணர்கிறோம். சென்னையில் வளரும் குழந்தைகளாக நாங்கள் பார்த்துத் தெரிந்துகொண்ட ஒன்று உண்டு. அது,

மூத்தவர்களாகிய நீங்கள் அனைவரும் சதுப்பு நிலங்களை அழித்து பயங்கரமான தவறைச் செய்துவிட்டீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இன்னமும் அதைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலங்கள் வெள்ளம், புயல் போன்ற ஆபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மத்திய அரசும், சமீபத்தில் பழவேற்காட்டைப் பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்பு நிலங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. எண்ணூர் சதுப்பு நிலங்களை மீட்டெடுக்கத் தமிழக அரசு முனைந்திருப்பதாகப் படித்துத் தெரிந்துகொண்டோம். அதேசமயம் காமராஜர் துறைமுகம், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் போன்ற நிறுவனங்கள் 3,000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அரசு அமைதியாகத்தானே நிற்கின்றது. இருக்கும் அனல் மின் நிலையங்களே சதுப்பு நிலங்களின் மீதுதான் இருக்கின்றன. அவையே சாம்பல் கழிவுகளை கொற்றலை ஆற்றில்தானே கொட்டுகின்றன. இதைப் பார்க்கும்போது, காலநிலை அவசரத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் கரிமவாயு வெளியேற்றத்தில் நிலக்கரிகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறதென விஞ்ஞானிகள் சொல்வதை அரசுகள் நம்பவில்லையோ என்றுதான் எங்களுக்குத் தோன்றுகிறது.

சுற்றுச்சூழலுக்கு எதிரான, எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலான இந்தச் செயல்கள் அனைத்தும் சில பணக்காரர்களின் நலன்களுக்காகவும் பேராசைமிக்கப் பெருநிறுவனங்களின் லாபத்துக்காகவும்தான் செய்யப்படுகின்றன. இதற்கிடையில், நிலப் பயன்பாட்டை மாற்றியதால் மீனவர்கள், விவசாயிகள், பூர்வகுடிகள், அடித்தட்டு உழைப்பாளிகளின் வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. அவர்களைக் காலநிலை அவசரம் உண்டாக்கும் பேரழிவுகளுக்குப் பலியாக்குகின்றது. காலநிலை மாற்றத்தில் இவர்களின் பங்கு என்னவோ மிக மிகக் குறைவுதான். ஆனால், அதன் விளைவுகளில் ஏற்படும் சேதாரங்களை அனுபவிப்பவர்களின் பங்கு இவர்கள் பக்கம்தான் அதிகமாக உள்ளது.

Greta Thunberg
Greta Thunberg
Stephane_p on Visual Hunt

குழந்தைகள்தான் எதிர்காலம் என்று சொல்வதைக் கேட்க நன்றாகத்தானிருக்கிறது. ஆனால், அப்படிச் சொல்லும் பெரியவர்களே எங்கள் எதிர்காலத்தைத் திருடிக் கொண்டிருக்கிறார்களே. மரம் நடுவது, கடற்கரைகளைச் சுத்தம் செய்வது, நெகிழிகளுக்குத் தடை விதிப்பது போன்ற மேலோட்டமான செயற்பாடுகள் மட்டுமே காலநிலை அவசரத்தைத் தவிர்க்கப்போதாது. இப்போது இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலை வைத்துக்கொண்டு இந்தப் பேரழிவைத் தடுக்க முடியாது. ஏனென்றால், அதுதான் எங்கள் எதிர்காலத்தைத் திருடியது, திருடிக்கொண்டிருக்கிறது.

இப்போதிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் எங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றால், மனித இனத்தைக் காப்பாற்றப் புதிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

பெரியவர்களான நீங்கள் உணர்ச்சிகளின்றி அக்கறையின்றி எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கையில், நாங்கள் அதைப் பொறுமையாகச் சொல்லிச் சொல்லிச் சோர்வடைந்துவிட்டோம்.

அதனால்தான், இன்று காலநிலை அவசரப் பிரச்னைக்கு நீதி கேட்டு (Climate Justice) உலகம் முழுவதுமுள்ள எங்களைப் போன்ற குழந்தைகளும் இளைஞர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளை விட்டு வெளியேறியுள்ளோம்.

இன்று சென்னையின் வாரிசுகளாக நாங்கள் தமிழக அரசிடம் வைக்கும் இந்தக் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்,

  • எண்ணூர் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்கும் வேலைகளை நிறுத்த வேண்டும். அது அந்தந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். காலநிலை அவசரத்தின் வீரியத்தை இன்னும் அதிகமாக்கும்.

  • இனி சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்பதோ, அவற்றின் பயன்பாட்டைத் திசைதிருப்புவதோ நடக்கவே நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும்.

  • அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்கள், தொழிற்சாலைகள் என்று நீர்நிலைகள் மற்றும் சதுப்புநிலங்களின் மீது அமைக்கவிருக்கும் கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

  • நீர்நிலைகளை மீட்டெடுப்பதில், பள்ளிக்கரணை மற்றும் எண்ணூர் சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதில் உள்ளூர் மக்களோடு இணைந்து அரசு செயல்படும் என்று அறிவிக்க வேண்டும்.

  • முறையான குப்பை மேலாண்மையைக் கொண்டு வந்து நெகிழிக் குப்பைகளின் அச்சுறுத்தலைத் தடுக்க வேண்டும். இவை அனைத்தையும் தாமதமின்றி உடனடியாகச் செய்ய வேண்டும்.

Climate Emergency
Climate Emergency
Pixabay

நாம் வாழும் இந்தப் பூமி நம் சொத்தல்ல. நம் எதிர்காலச் சந்ததிகளிடமிருந்து வாங்கிய கடன். நாம் வாங்கியுள்ள கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பித் தருமாறு எதிர்காலம் கேட்கின்றது.

எப்போது கொடுக்கப் போகிறோம்? கொடுக்கப் போகிறோமா அல்லது அவர்கள் அஞ்சுவதுபோல் அவர்களை மூழ்கடிக்கப் போகிறோமா! அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.