Published:Updated:

ஊழிக்காலம் - 5 | 2050-ல் இட்லி தோசைக்கு ஆபத்து மக்களே... காரணம் என்ன?!

காலநிலை மாற்றத்தால் பயிர்கள் மிக எளிதில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் அவற்றின் விளைச்சல் எதிர்காலத்தில் குறையும். தவிர, காலநிலை மாறும்போது, புதிய பூச்சிகளும் புழுக்களும் பயிர்களைத் தாக்கலாம் என்பதால் அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அனைவருமாக சேர்ந்து காலப்பயணம் செய்யப்போகிறோம்.

ஒரு கற்பனைக்காக, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எந்த முயற்சியுமே எடுக்கவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். அதனால் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் வந்துவிட்டன.

அப்படிப்பட்ட ஓர் எதிர்காலத்துக்கு, அதாவது 2050க்குப் பயணிக்கப்போகிறோம்.

2050-ம் ஆண்டுக்குப் போய் இறங்கியதும் நல்ல பசி, பயணம் செய்த அலுப்பு.

காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபி, காலை உணவாக இட்லி/தோசை/பொங்கல் வடை, சாம்பார்/சட்னி என்று நமக்குப் பரிச்சயமான எல்லா உணவுகளுக்கும் தட்டுப்பாடு என்று தெரிவிக்கிறார்கள் எதிர்காலத்தைச் சேர்ந்த நண்பர்கள்! கிடைக்கும் சொற்ப உணவுகளும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிக அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன! விலைப்பட்டியலைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

தோசை
தோசை

2050-ல் காபி கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டது, பணம் படைத்தவர்கள் மட்டுமே வாரத்துக்கொருமுறை குடிக்கும் பானமாகிவிட்டது. அழுகிற குழந்தைக்குக் கொடுப்பதற்குச் சாக்லேட்கூட கிடைக்கவில்லை. தேடித் தேடிப் பார்த்ததில் 'Mock Chocolate' என்ற பெயரில் செயற்கை சாக்லேட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொள்ளை விலை.

சாம்பாரில் பருப்பைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு காய்கறிகள் மட்டுமே எளிதில் கிடைக்கின்றன எனவும், அவற்றையே சாப்பிட்டு அலுத்துவிட்டதாகவும் எதிர்காலத்தைச் சேர்ந்தவர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள். பழங்களின் நிலையும் அதேதானாம். தண்ணீராக ஓடும் சாம்பாரைக் கரண்டியால் அளைந்துகொண்டிருக்கும்போதே தொலைக்காட்சியில் ஓடும் செய்தி நம் கவனத்தை ஈர்க்கிறது: "அதிகரித்துவரும் பசி, பட்டினி பஞ்சத்தை எதிர்கொள்ள உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது" என்று அறிவிக்கிறார்கள்.

ஒரு டிஸ்டோப்பியன் நாவலின் கதைக்களம்போல இருக்கிறதா? காலநிலை மாற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

தமிழ்க்குடும்பங்களின் சராசரி காலை உணவையே எடுத்துக்கொள்ளலாம். இட்லி/தோசை/பொங்கல், சாம்பாருக்குத் தேவையான எல்லாப் பொருள்களின் விவசாயமும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள்.

இவற்றுள் முக்கியப் பேசுபொருளாக இருப்பது அரிசி. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2017-ல் நடத்திய ஓர் ஆய்வில், காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அது நெற்பயிரின் குணங்களை, விளைச்சலை பாதிக்கும் என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. வேளாண் பல்கலைக்கழகத்தின் மற்றொரு ஆய்வில், 2050-ம் ஆண்டுக்குப் பிறகு, தென்மேற்குப் பருவமழைக் காலத்தின்போது, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலுமே நெல் விளைச்சல் தீவிரமாகக் குறையும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நெல்
நெல்

பொதுவாக, காற்றில் கரியமிலவாயு அதிகரிக்கும்போது, குறிப்பிட்ட சில பயிர்கள் நன்றாக ஒளிச்சேர்க்கை செய்யும், நன்றாக வளரும். ஆனால் காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளும் வருவதால், கரியமில வாயுவால் ஏற்படும் குறைந்தபட்ச நன்மையும் அடிபட்டுப்போகிறது.

இட்லி/தோசையின் மற்றொரு இடுபொருள் உளுந்து. காலநிலை மாற்றத்தால், உளுந்துப் பயிர்களில் புதியவகைப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது விளைச்சலும் குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாம்பாருக்கு வரலாம். சராசரி வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போது, துவரம்பருப்பு விளைச்சல் 16% வரை குறையும் என்கிறது அறிவியல் தரவு. மழை குறையும்போது, இதில் கூடுதலாக 4% சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகமொத்தம், 2050க்குள் துவரம்பருப்பின் விளைச்சல் 20% வரை குறையக்கூடும்.

பொதுவாகவே காய்கறிகள்/பழங்களின் விளைச்சல் காலநிலையைப் பொறுத்து மிக எளிதில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் அவற்றின் விளைச்சலும் எதிர்காலத்தில் குறையும். தவிர, காலநிலை மாறும்போது, புதிய பூச்சிகளும் புழுக்களும் பயிர்களைத் தாக்கலாம் என்பதால் அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றையும் தாக்குப் பிடிக்கக்கூடிய சில காய்கறி/பழ வகைகள் மட்டுமே எளிதில் கிடைக்கும். மற்றவை விலை அதிகமாக இருக்கலாம், அல்லது கிடைக்காமலே போகலாம்.

காபி
காபி
Photo: Vikatan / Gunaseelan.K

2050க்குள் உலகின் மொத்த காபித் தோட்டங்களில் 50% பரப்பளவு, காபிச் செடி வளர்வதற்குத் தகுதியில்லாததாக மாறிவிடும் என்கிறது ஓர் ஆய்வு! தவிர, செடியின் தண்டுப்பகுதியை பாதிக்கும் ஒருவகைப் பூச்சியின் தாக்குதல் மிகத் தீவரமாக மாறலாம் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. பல தென்னமெரிக்க நாடுகளில் உள்ள சிறு காபித் தோட்டங்களின் முதலாளிகள், காலநிலை மாற்றத்தால் வரும் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் இப்பொதே தொழிலிலிருந்து விலகிவிட்டனர்.

சாக்லேட்டின் ஆதாரப் பொருளான கோகோவுக்கும் இதே நிலைதான். 2050க்குள் கோகோ செடிகள் முற்றிலும் அழியலாம் என்றே சொல்லப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால், தேயிலைச் செடியில் பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது செடிகள் எளிதில் அழியும். இதைத் தவிர, ஒரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. தேநீரின் மகத்துவத்துக்குக் காரணமே அதில் உள்ள பல நுண் வேதிப்பொருள்கள்தான். காலநிலை மாற்றத்தால் அவை சிதைய வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒருவேளை 2050-ல் தேநீர் தாராளமாகக் கிடைத்தாலும் அதிலிருந்து இயல்பான மருத்துவ குணங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

காலநிலை மாற்றத்தால் சில பயிர்கள், சில இடங்களில் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஏன் செழித்து வளரவும்கூட வாய்ப்புண்டு. 2050-ம் ஆண்டில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலைப் பயிர்கள் நன்கு வளரும் எனவும், ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஆப்பிள் மரங்கள் பாதிக்கப்படாது எனவும் இந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tea
Tea

இது ஒரு நல்ல விஷயம்போலத் தெரியலாம். ஆனால், தொலை தூரத்தில் விளைந்த பொருள்களை இங்கு கொண்டுவரவேண்டும் எனும்போது, அந்தப் பொருளின் விலைக்குள் போக்குவரத்துச் செலவும் புகுந்துகொள்கிறது. அதை எல்லாராலும் செலவு செய்து வாங்க முடியுமா என்பது ஒரு முக்கியக் கேள்வி. தவிர, எல்லா மாநிலங்களின் தேவைக்கும் சில மாநிலங்களிலிருந்து மட்டும் தொடர்ந்து பொருள்கள் விளைவிக்கப்படும்போது, அந்த நிலங்களின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது, அது காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெப்பநிலை அதிகரிக்கும்போது, முன்பு பயிரிடுவதற்கு ஏதுவாக இல்லாத இடங்களும் விளைச்சலுக்குத் தகுந்தவையாக மாறுகின்றன. உதாரணமாக, உலகின் இயல்பான கோதுமை விளைச்சல் பகுதி (Natural Wheat belt) ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் 160 மைல்கள் வடக்கே உயர்ந்து, துருவப் பகுதியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. புதிய விளைநிலங்கள் கிடைக்கின்றன என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் காலநிலை சாதகமாக இருக்கிறது என்பதால் மட்டுமே அங்கு விவசாயம் செய்துவிட முடியுமா? அங்கு இருக்கும் மண்ணின் தன்மை அதற்கு ஒத்துழைக்குமா? விளைச்சலுக்கான நிலப்பரப்புகள் எளிதில் கிடைக்குமா, அல்லது காடுகளை அழித்து/வசித்துக்கொண்டிருப்பவர்களை வெளியேற்றி நிலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமா? - போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

ஆகவே, காலநிலை மாற்றத்தால் விவசாயத்தில் சில நன்மைகள் வரலாம் என்றாலும், பிற பாதிப்புகளும் நடைமுறைச் சிக்கல்களும் அந்த நன்மைகளை ஓரங்கட்டிவிடுகின்றன.

பஞ்சாப் கோதுமை அறுவடை
பஞ்சாப் கோதுமை அறுவடை
2000-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, உலக அளவில், 2050-ம் ஆண்டில் நெல் விளைச்சல் 11%, மக்காச்சோள விளைச்சல் 24%, கோதுமை விளைச்சல் 3%, உருளைக்கிழங்கு விளைச்சல் 9% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை உலகளாவிய சராசரி அளவுகள் மட்டுமே, நாட்டுக்கு நாடு இந்த அளவு மாறுபடும்.

வெப்பநிலை ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போதும், பயிர் விளைச்சல் 5 முதல் 15% வரை குறையும். தவிர, தீவிர பருவகால நிகழ்வுகள், பருவமழை பொய்த்தல், புயல்கள், வெப்பநிலை அதிகரிப்பதால் வரும் பூச்சிகள், குறைந்துகொண்டே வரும் நீர்வளம் ஆகியவையும் விவசாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போகின்றன. கடல்மட்டம் உயர்வதாலும் கடல்நீர் உட்புகுவதாலும் விவசாயத்துக்குத் தகுதியானதாக இருக்கும் நிலத்தின் பரப்பளவே குறையப்போகிறது. வளமான மண் உருவாகப் பல நூற்றாண்டுகள் ஆகும், ஏற்கெனவே மண்ணில் ஏற்பட்டுவரும் மாற்றங்களோடு காலநிலை மாற்றமும் சேர்ந்துகொள்ளும்போது, மண்ணின் சத்துக்களையும் வேதித்தன்மையையும் அது மாற்றியமைக்கும்.

உணவுப் பாதுகாப்பு விவாதத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் - உணவு விநியோகம், அதில் இருக்கிற ஏற்றத்தாழ்வு. ஒருவேளை காலநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடிக்கக்கூடிய பயிர்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றின் விலை அதிகரிக்கும்பட்சத்தில், எல்லாராலும் அந்த உணவுப் பொருள்களை வாங்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் வறுமைக்கும் இடையேயான அழுத்தமான தொடர்பு பல முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று. வருங்காலங்களில் விவசாயத்துக்கே ஆபத்து வரலாம் எனும்போது, ஊட்டச்சத்துக் குறைபாடும் பட்டினியும் அதிகரிக்கும்.

2050 ஆண்டில் சராசரியாக நூறு கோடி உலக மக்கள் உணவு மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது ஓர் ஆய்வு. காலநிலை மாற்றம் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஊழிக்காலம்
ஊழிக்காலம்

மனிதர்கள் பயிர்களைச் சாப்பிடுவதில்லை. பயிர்களிலிருந்து கிடைக்கும் உணவைத்தான் சாப்பிடுகிறார்கள். அதிலிருந்து கிடைக்கவிருக்கும் ஊட்டசத்துக்கும் ஊறு விளைவிக்கிறது காலநிலை மாற்றம். பல நூற்றாண்டுகளாகவே ஒரு நெல்மணியில், ஒரு கோதுமை மணியில், ஒரு வாழைப்பழத்தில், ஒரு கட்டுக் கீரையில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவருகின்றன. 1950-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2004க்குள் நெல், கோதுமை ஆகியவற்றில் இருக்கிற பல நிகர ஊட்டச்சத்துக்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டன. காற்றின் கரியமில வாயு அதிகரிக்கும்போது, ஊட்டச்சத்துக்கள் மேலும் குறையும்.

ஆக, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பல வகையான உணவுப் பொருள்கள் என்றில்லாமல் சில வகை உணவுகள் மட்டுமே கிடைக்கப்போகின்றன. கிடைக்கும் சில உணவுப்பொருள்களுக்கும் விலை அதிகம், அதிக விலை கொடுத்து வாங்கினாலும் நமக்குக் கிடைக்கும் நிகர ஊட்டச்சத்து குறைவு. எப்படிப் பார்த்தாலும் இழப்புதான்.

விவசாயத்துக்கு மட்டும்தான் பாதிப்பா? கால்நடைகள், கோழிகள், மீன்கள் ஆகியவற்றுக்கு பாதிப்பு இருக்காதா?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு