Published:Updated:

சட்டவிரோத இறால் வளர்ப்பை அரசே ஆதரிக்கலாமா... எதிர்க்கும் மீனவர்கள்... என்ன பிரச்னை?

முற்றுகைப் போராட்டம்
முற்றுகைப் போராட்டம்

அமலுக்கு வராத புதிய விதிகளைப் பயன்படுத்தி அதிகாரிகளே சட்டவிரோதமாகச் செயல்படுபவர்களை, சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கி அங்கீகரிக்கும் நகைமுரண் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் இறைச்சி உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்காக, கடல் உணவைச் சார்ந்திருக்கின்றனர். இந்தியா உட்பட ஆசிய-பசிபிக் பகுதியில் மீன் உணவு உற்பத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இருந்தாலும்கூட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் சிறு குறு மீனவர்கள் இன்னமும் ஏழ்மையில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர். மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கடற்கரை நிலங்களை, வளங்களை, அந்த நிலத்திற்குத் தொடர்பே இல்லாதவர்களுடைய நலனுக்காகப் பயன்படுத்துவதும் மீனவ மக்கள் புறக்கணிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகின்றது.

கடற்கரையிலேயே அமைந்துள்ள இறால் பண்ணைகள்
கடற்கரையிலேயே அமைந்துள்ள இறால் பண்ணைகள்

அத்தகைய நடவடிக்கைகளில் செயற்கை மீன் வளர்ப்பு தொழில்களும் ஒன்று. மீனவ மக்களைப் போலவே, செயற்கை மீன் வளர்ப்பு தொழில்களும் கடலோரப் பகுதிகளில் நடைபெறுகின்றன. 2009-ம் ஆண்டு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, ``உலகளவில் மீன் வளம் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுகின்றது. பல பகுதிகளில் அவை தன் உற்பத்தி எல்லையை அடைந்துவிட்டன. இதைச் சரிசெய்வதில், செயற்கை மீன் வளர்ப்பு முறை முக்கியப் பங்கு வகிக்கும். மக்களுக்குத் தேவையான மீன் உணவை உற்பத்தி செய்வதற்கு இவை உதவும்" என்று கூறியது. மத்திய அரசாங்கமும், உள்நாட்டு மற்றும் கடல் மீன்களின் உற்பத்தியில், மீன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

உண்மை என்னவெனில், இதனால் மீனவச் சமூகங்களுக்கு எவ்வித நற்பயன்களும் இதுவரை கிடைக்கவில்லை. இதுபோன்ற மீன் வளர்ப்புப் பண்ணைகளை அமைக்க, அதிகளவில் முதலீடு தேவைப்படுகின்றது. அத்தகைய முதலீடு சராசரி மீனவர்களிடம் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்கள் வெளிநாட்டுச் சந்தைகளுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்ளூர் மக்களின் மீன் உணவில் அவர்களுடைய பங்கு அதிகமாக இருப்பதில்லை. இந்நிலையில், உள்ளூர் மக்களின் மீன் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மீன் வளர்ப்புப் பண்ணைகளுக்கும் பாரம்பர்ய மீனவர்களுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடற்கரையில் கழிவுநீரைத் திறந்துவிடும் இறால் பண்ணை
கடற்கரையில் கழிவுநீரைத் திறந்துவிடும் இறால் பண்ணை

இதில் மிக முக்கியமாக, இறால் பண்ணைகளும் இறால் குஞ்சு பொறிப்பகங்களும் கடலுக்கு மிக அருகிலேயே இருப்பது, மீனவச் சமூகங்களுக்குப் பல இடையூறுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது. கடலோரத்தின் சூழலியல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படும் பகுதிகளில் இவை அமைந்துள்ளதால், கடலோர மீன் வளம் பெரியளவில் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில், கடலுக்கு மிக நெருக்கமாகவே அமைந்திருக்கும் இறால் குஞ்சு பொறிப்பகங்களுக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், அந்த சட்டவிரோத பொறிப்பகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. உயர் அலைக்கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள், முகத்துவாரம், ஆறு, காயல் ஆகிய பகுதிகளுக்கு அருகில் மீன் பிடித்தலைத் தவிர வேறு எந்த வேலைகளுக்கு அனுமதி இல்லையென்று 2011-ம் ஆண்டு கடற்கரை ஒழுங்கு மண்டல விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால், ஆற்றின் முகத்துவாரங்களில் இருந்து வெறும் 100 மீட்டர்களிலேயே பல தனியார் இறால் குஞ்சு பொறிப்பகங்கள் செயல்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களுக்குத் தடை விதிக்குமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்தபோது, 2019-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள 2019 கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளின்படி அவர்கள் அங்கு செயல்படலாம் என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை, இன்னமும் மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள கடற்கரை மாநிலங்கள் இன்றளவும் 2019 கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளின்படி வரையறுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அங்கீகாரம் பெறவில்லை. அந்த அங்கீகாரத்தை இன்னும் பெறாததால், இந்தப் புதிய விதிமுறைகள் செயல்பாட்டில் இல்லை.

தமிழ்நாடு மீனவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினரின் முற்றுகைப் போராட்டம்
தமிழ்நாடு மீனவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினரின் முற்றுகைப் போராட்டம்

இப்படியிருக்க, அதிகாரிகள் இப்போது அமலில் இருக்கும், 2011 கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளின்படி செயல்படாமல், இன்னும் அங்கீகாரமே பெறாத புதிய விதிகளை இப்போதே கையில் எடுத்துக்கொண்டு, மீனவர்களுக்கு எதிராக நடந்துகொள்வதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள மீன், இறால் போன்ற நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும் பண்ணைகளில், அரசாங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக்கான நிறுவனங்கள் அல்லது அரசின் நிதியுதவியோடு வணிக நோக்கமற்று செயல்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள, கரையோர நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும் பண்ணைகளுக்கு மட்டுமே கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் அனுமதியளிக்க முடியும் என்று 2005-ம் ஆண்டின் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் கூறுகின்றது.

ஆனால், 2011-ம் ஆண்டு ஒழுங்குமுறை மண்டல விதிகளின்கீழ் அனுமதிக்கப்படாத இறால் பண்ணைகள் மற்றும் பொறிப்பகங்கள் உயரலைக்கோட்டிலிருந்து 200 மீட்டருக்கும் உள்ளாகவே அமைந்துள்ளன. இந்நிலையில், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், இந்த விதியைத் தளர்த்தி, இறால் பண்ணைகளுக்கு விலக்கு அளித்து தற்போது ஆணை வெளியிட்டுள்ளது. சட்டத்தை மீறிச் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகள் மற்றும் பொறிப்பகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவற்றைக் காப்பாற்ற சட்டத்திற்குப் புறம்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நேற்று (21-04-2021) கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

நேரடியாகக் கடலில் திறந்துவிடப்படும் இறால் பண்ணை கழிவுநீர்
நேரடியாகக் கடலில் திறந்துவிடப்படும் இறால் பண்ணை கழிவுநீர்

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு மீனவர் இயக்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கு.பாரதி, ``கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, இறால் பண்ணைகளோ பொறிப்பகங்களோ எதுவாக இருந்தாலும் கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இருக்கவேண்டும். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 65 இறால் பண்ணைகள் உயர்மட்ட அலையிலிருந்து 200 மீட்டருக்கு உள்ளேயே அனுமதியின்றிச் செயல்படுகின்றன. இப்படி அனுமதியின்றிச் செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கெனவே புகார் கொடுத்திருந்தோம். ஆனால், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

மேலும், இங்கு உற்பத்தியாகும் கழிவுகளை சுத்திகரித்துதான் வெளியேற்ற வேண்டுமென்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது. ஆனால், அதை இவர்கள் எந்தச் சுத்திகரிப்பும் செய்யாமல் நேரடியாக கடலில்தான் கலந்துவிடுகின்றனர். இது கடலோரத்தில் குஞ்சு பொறிக்க வரும் மீன்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இப்போது மீன்பிடித் தடைக்காலம். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, மீனவர்களே கடலுக்குச் செல்லாமல் இருக்கும்போது, இந்தக் கழிவுநீர் முட்டையிட வரும் மீன்களையும் புதிதாகப் பிறக்கும் மீன் குஞ்சுகளையும் பெருமளவு பாதிக்கின்றது.

ஒருபக்கம் நாங்கள் அவற்றின் நன்மைக்காக பார்க்கும்போது, மற்றொரு பக்கம் இந்த இறால் பண்ணைகளும் இறால் குஞ்சு பொறிப்பகங்களும் அவற்றுக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றன. இது பாரம்பர்ய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும். கடலோர சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளத்தையும் இந்தப் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாதிக்கும். இந்தப் புதிய ஆணையை நிராகரித்து, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் சட்டத்தை மீறிச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், நாங்கள் மிகப்பெரிய அளவில் போராடத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.

கடலுக்குள் திறந்துவிடப்படும் இறால் பண்ணை கழிவுநீர்
கடலுக்குள் திறந்துவிடப்படும் இறால் பண்ணை கழிவுநீர்

கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள் கொண்டுவரப்பட்டன. அதிலும் 2011-ம் ஆண்டு இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி 2019-ம் ஆண்டு புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2019-ம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை கடலோர மீனவச் சமுதாயங்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி அவர்களின் வாழ்விடங்களையே அபகரிக்கும் அளவுக்கு கட்டுமானங்களுக்கும் மற்ற தனியார் நிறுவனங்களுக்கும் கடற்கரையைத் திறந்துவிடுகின்றது. இந்த விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டாலும், இன்னமும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அதுவரை, 2011-ம் ஆண்டின் விதிமுறைகள் தான் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், அமலுக்கு வராத புதிய விதிகளைப் பயன்படுத்தி அதிகாரிகளே சட்டவிரோதமாகச் செயல்படுபவர்களை, சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கி அங்கீகரிக்கும் நகைமுரண் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, கடல் வளமும் மீனவர்களின் வாழ்வாதாரமும் சிக்கலில் இருக்கும்போது, அதை மேன்மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் வகையில் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என்று சூழலியல் மற்றும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தலையிட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு