Published:Updated:

`உடனே உற்பத்தியை நிறுத்துங்கள்!' -141 சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு செக் வைத்த கோவை கலெக்டர்

புறம்போக்கு நிலம், பட்டாநிலம், ஓடைப் புறம்போக்கு என்று பாரபட்சம் இல்லாமல் மண் எடுப்பதால், நீர்நிலைகளுக்கு தண்ணீரே வருவதில்லை என்ற புகாரும் நீண்டகாலமாக உள்ளது.

செங்கல் சூளைகளின் செம்மண் கொள்ளை
செங்கல் சூளைகளின் செம்மண் கொள்ளை

கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, ஆனைக்கட்டி போன்ற பகுதிகளில் 200-க்கும் அதிகமான செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் அனுமதி வாங்காமல் இயங்கிவரும் விஷயம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்தது.

செங்கல் சூளைகளின் செம்மண் கொள்ளை
செங்கல் சூளைகளின் செம்மண் கொள்ளை

அத்துமீறி, பல நூறு அடிகளுக்கு மண் எடுப்பது, நச்சுப் புகையை கக்குவது, யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது, நோய்த் தொற்று உருவாவது என செங்கல் சூளைகளால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

`எதிர்த்தால் கொன்றுவிடுவோம்..!'- சமூக ஆர்வலர்களை வீடுதேடி மிரட்டும் செங்கல் சூளை அதிபர்கள்?

புறம்போக்கு நிலம், பட்டாநிலம், ஓடைப் புறம்போக்கு என்று பாரபட்சம் இல்லாமல் மண் எடுப்பதால், நீர்நிலைகளுக்கு தண்ணீரே வருவதில்லை என்ற புகாரும் நீண்டகாலமாக உள்ளது. இதையடுத்து, `அந்த செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு இயங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் சூளைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்தன.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

செங்கல் சூளைகளின் அத்துமீறல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், `அனுமதி இல்லாமல் இயங்கிவரும் செங்கல் சூளைகள் உடனடியாக உற்பத்தியை நிறுத்த வேண்டும். மேலும், இத்தனை நாள்கள் அனுமதியின்றி இயங்கியது தொடர்பாக உரிய விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்க வேண்டும்.

செங்கல் சூளைகளின் செம்மண் கொள்ளை
செங்கல் சூளைகளின் செம்மண் கொள்ளை

இனிவரும் காலங்களில் தொடர்ந்து, அனுமதியின்றி செங்கல் உற்பத்தி செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று 141 செங்கல் சூளைகளின் நிர்வாகத்துக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.