Published:Updated:

ஆளும்கட்சிப் பிரமுகருக்காக அழிக்கப்படும் குறுங்காடு? - 65,000 மரக்கன்றுகளை அழித்து சாலை

புதிதாக அமைக்கப்படும் சாலை
புதிதாக அமைக்கப்படும் சாலை

`இந்த இடத்துக்கு அருகில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு பள்ளி கட்ட இருக்கிறார்'

செங்கல்பட்டு பகுதியில் உள்ள `மஹிந்திரா வேல்டு சிட்டி’ என்னும் தொழில் பூங்கா அஞ்சூர், தென்மேல்பாக்கம், குன்னவாக்கம், வீராபுரம் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு மஹிந்திரா, டி.வி.எஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் இன்ஃபோசிஸ், பி.எம்.டபில்யூ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில் பூங்கா தொடங்கப்பட்டபோது அஞ்சூர் ஊராட்சிக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில், கடந்த ஆண்டு 65,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. தனியார் நிலத்துக்குப் பாதை அமைப்பதாகச் சொல்லி அந்த இடத்தில் மரக்கன்றுகள் அகற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

அகற்றப்படும் குறுங்காடு மரக் கன்றுகள்
அகற்றப்படும் குறுங்காடு மரக் கன்றுகள்

இதுகுறித்து அஞ்சூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் என்பவரிடம் பேசினோம். ``மஹிந்திரா நிறுவனம் சார்பாக அஞ்சூர் கிராமத்துக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள 76 ஏக்கர் நிலத்தில் 51 ஏக்கர் நிலம் திறந்தவெளிப் பகுதியாக உள்ளது. மீதமுள்ள 25 ஏக்கர் சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு அருகில் ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவர் 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு பள்ளி கட்ட இருக்கிறார். அந்தப் பள்ளிக்குப் பின்புறத்தில் காலியாக உள்ள 5.19 ஏக்கரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கடந்த வருடம் மரங்களை நடச்சொல்லி, அவரே அந்தப் பணியைத் தொடங்கியும் வைத்தார். தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் 65,000 மரக்கன்றுகள் அங்கு நடப்பட்டுள்ளன.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 60 அடி ரோடு போடுவதற்கும் சமுதாயக் கூடம் கட்டுவதற்கும் அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். `இந்த இடத்துக்குச் சாலை வேண்டாம். ஏற்கெனவே 30 அடி அகலத்தில் தரமான சாலை மகேந்திரா நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், கிராமப் பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும்’ எனக் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தோம். புதிதாகப் பொறுப்பேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடமும் மனு கொடுத்தோம். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே அதிகாரிகள் சாலை அமைப்பதற்காக நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளைப் பிடுங்கி அப்புறப்படுத்தி சாலை அமைத்து வருகிறார்கள். உள்ளூர் இளைஞர்கள் எதிர்ப்பை காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்தினார்கள். நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்குச் சென்றோம். இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆனாலும், பணிகள் தொடர்கின்றன. அதுபோல் சாலை அமைக்கப்படும் பகுதியில் வீடுகளோ, மக்கள் பயன்பாடோ கிடையாது. காடுகளை அழித்து தனியாருக்கு ஆதரவாகச் சாலை அமைக்கிறார்கள்” என்கிறார்.

`திட்டமிட்ட புறக்கணிப்பு!' - சேலம் பெரியார் பல்கலையைச் சுற்றும் `மகளிர் தின சுற்றறிக்கை' சர்ச்சை

காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லீமாரோஸிடம் பேசினோம்.``இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பின்னர்தான் அதைப்பற்றிப் பேச முடியும்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு