Published:Updated:

மறைமுகமாக அரங்கேறுகிறதா நியூட்ரினோ திட்டம்... மதிகெட்டான் சோலை விவகாரத்தில் என்ன நடக்கிறது?

நியூட்ரினோ
நியூட்ரினோ

நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தால், எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

`நியூட்ரினோ திட்டம்'... பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் உச்சரிக்கப்படும் ஒரு விஷயம். 2010-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் எழுந்த சர்ச்சைகளாலும், சூழலியல் சிக்கல்களாலும் உயர் நீதிமன்றம் திட்டத்துக்குத் தடை விதித்தது. அப்போது முதல் இப்போது வரைக்கும் நியூட்ரினோ திட்டம் குறித்த வழக்கோ, அறிவிப்போ எழும்போதெல்லாம், சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் தேனி அருகே நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ள தமிழகப் பகுதி `பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல' என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நியூட்ரினோ
நியூட்ரினோ

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள உடும்பஞ்சோலை வனப்பகுதியில் 1,286 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என 1987-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மதிகெட்டான் சோலை வனப்பகுதியானது கேரள அரசால் தேசிய பூங்காவாக 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லையானது தமிழக கேரள எல்லையாகவும் உள்ளது. தற்போது இந்தப் பூங்காவை மேலும் பாதுகாக்கும் நோக்கத்தில் பூங்காவைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக்கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் துறையானது, பூங்காவின் கிழக்கு எல்லையைத் (தமிழக எல்லை) தவிர்த்து ஏனைய பகுதிகள் அனைத்திலும் 1 கி.மீ தொலைவுக்கான பகுதிகளைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக எல்லையில் இருக்கும் இந்த வனப்பகுதியானது பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து 4.9 கிலோ மீட்டர் தூரப் பகுதியில்தான், நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் இத்திட்டத்தைத் தேசிய வனவிலங்கு வாரிய அனுமதி இல்லாமல் தொடங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதால், அதன் எல்லைகள் தெரியாமல் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவிலிருந்து 4.9 கி.மீ தொலைவில் வரவுள்ள நியூட்ரினோ திட்டம்குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனக் கேரள அரசு கூறியிருந்தது. தற்போது, மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா இருக்கும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், விரைவில் தேசிய வன உயிர் வாரியம் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூட்ரினோ
நியூட்ரினோ

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

``இந்த முடிவு மறைமுகமாகத் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தின் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான முயற்சியாக அமைந்துள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை வெறும் கட்டுமானத்துக்கான அனுமதி பெறும் B வகைப்பிரிவில் பெற்றதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 2017-ம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவிலிருந்து நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள இடம் 4.9 கி.மீ தொலைவில் இருப்பதால், இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை A பிரிவில்தான் தர வேண்டும் என்று கூறி சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்திருந்தது. அதன் பின்னரும் கூட, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகக் கருதி இத்திட்டத்தை மாநில சுற்றுச்சூழல் வல்லுநர் குழு பரிசீலனைக்கு வைக்காமல் மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனையில் வைத்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தொடரப்பட்ட வழக்கில் இத்திட்டத்துக்குத் தேசிய வன உயிர் வாரிய அனுமதி அவசியம் என 2018-ம் ஆண்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்ட மதிகெட்டான் சோலைக்கு 4.9 கி.மீ தொலைவில் வரும் இத்திட்டத்துக்குத் தேசிய வன உயிர் வாரிய அனுமதி அவசியம் இல்லை என்று டாட்டா அறிவியல் ஆராய்ச்சி மையம் இந்த அனுமதியைப் பெறாமலேயே திட்டத்தைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. இது முற்றிலும் தவறான விஷயமாகும்.

கேரளா அரசாங்கம் தனது மாநில எல்லையில் இருக்கும் ஒரு தேசிய பூங்காவை அதன் சுற்றுச்சூழல் நலன் கருதிப் பாதுகாக்க முயற்சி செய்கையில் அந்தத் தேசிய பூங்காவின் அனைத்து எல்லைகளைப் பாதுகாப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும். மத்திய சுற்றுச்சூழல் துறை ஒரு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை Eco-Sensitive Zone-ஆக அறிவிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட பகுதியை சரணாலயமாகவும், தேசிய பூங்காவில் இருக்கும் ஒரு பகுதியை அதன் எல்லையிலிருந்து 10 கி.மீ வரைக்கும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசாங்கம் தனது மாநிலப் பகுதிகளில் 1 கி.மீ தூரத்துக்கும் தமிழ்நாடு அமைந்திருக்கும் கிழக்கு திசையில் 0 கி.மீ வரைக்கும் மட்டுமே சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக நிச்சயமாக மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவைப் பாதுகாக்க முடியாது.

பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தும்போது கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்படும் சுரங்கம் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் வெடி பொருள்களால் நிச்சயமாக மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா பாதிப்படைய வாய்ப்புள்ளது. தனது மாநில கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதற்காக நாங்கள் மதிகெட்டான் சோலைக்கு அருகேயுள்ள வனப்பரப்பை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க முடியாது என்கிற தமிழக அரசின் வாதமும் தவறானது. மாநில எல்லைகளில் அமைந்திருக்கும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவிப்பதில் இரண்டு மாநிலங்களுக்குமே பொறுப்புள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அறிவியல் ஆராய்ச்சி மையம் இந்த நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்வதற்குக் கட்டட அனுமதி (Building clearance) மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி ஆகியவற்றைப் பெற்றால் மட்டுமே போதுமானது. இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இது மறைமுகமாக நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துகிறது" என்றார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம், நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்வதற்குக் கட்டுமான அனுமதி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி ஆகியவற்றைப் பெற்றால் மட்டுமே போதுமானது என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்க முடியாதது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் கருதியும், தமிழ்நாடு போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணையின் மீதான உரிமை கருதியும் தமிழக அரசு இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மாதிரி வரைபடம்
மாதிரி வரைபடம்

இத்தனை வழக்குகளையும், பல சர்ச்சைகளையும் இன்னமும் சந்தித்துக்கொண்டிருக்கிறது, நியூட்ரினோ திட்டம். நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தால், எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு