Published:Updated:

COP27 எகிப்து காலநிலை மாற்ற மாநாடு: ஏழை நாடுகளை, பணக்கார நாடுகள் வஞ்சிப்பது தொடர்கிறதா?!

COP27 எகிப்து காலநிலை மாற்ற மாநாடு

நவம்பர் 6-ம் தேதி எகிப்து நாட்டிலுள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில் 27-வது காலநிலை மாற்ற (COP27- Conference of the Parties) மாநாடு தொடங்கியிருக்கிறது. நவம்பர் 18-ம் தேதி வரை இரண்டு வாரம் தொடர்ந்து நடைபெறும் இந்த மாநாட்டில் 100-கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

COP27 எகிப்து காலநிலை மாற்ற மாநாடு: ஏழை நாடுகளை, பணக்கார நாடுகள் வஞ்சிப்பது தொடர்கிறதா?!

நவம்பர் 6-ம் தேதி எகிப்து நாட்டிலுள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில் 27-வது காலநிலை மாற்ற (COP27- Conference of the Parties) மாநாடு தொடங்கியிருக்கிறது. நவம்பர் 18-ம் தேதி வரை இரண்டு வாரம் தொடர்ந்து நடைபெறும் இந்த மாநாட்டில் 100-கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Published:Updated:
COP27 எகிப்து காலநிலை மாற்ற மாநாடு

காலநிலை மாற்றத்தின் பாதிப்பில் சுமார் 360 கோடி மக்கள் இருப்பதாகவும், 1986 பிப்ரவரிக்குப் பிறகு இந்த உலகத்தில் பிறந்த எந்தக் குழந்தையும் இதுவரை தன்னுடைய வாழ்நாளில் ஒரேயோர் இயல்பான மாதத்தைக்கூட பார்த்ததில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், எகிப்தில் தொடங்கியிருக்கும் காலநிலை மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

COP27 எகிப்து காலநிலை மாநாடு
COP27 எகிப்து காலநிலை மாநாடு

எகிப்து காலநிலை மாற்ற மாநாடு!

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், செயல்படுத்தவும், கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், நவம்பர் 6-ம் தேதி எகிப்து நாட்டிலுள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில் 27-வது (COP27- Conference of the Parties) மாநாடு தொடங்கியிருக்கிறது. நவம்பர் 18-ம் தேதி வரை இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் தொடர்ந்து விவாதித்துவருகின்றனர்.

மாநாட்டில் பேசிய உலகத் தலைவர்கள்

குறிப்பாக, ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், ``மனித இனம் நரகத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கிறது. நாம் உடனடியாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்படப்போகும் கோர பாதிப்புகளை சரிசெய்ய முடியாது. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், அழிந்துபோக வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வுசெய்ய முடியும்" என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அன்டனியோ குட்டரெஸ்
அன்டனியோ குட்டரெஸ்

அதேபோல, இந்தியா சார்பாக கலந்துகொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ``உலக நாடுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளின் வேகம் போதாது. உலகெங்கும் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் பெரிய ஆபத்தாக இருக்கின்றன. பசிபிக், கரீபியன் பகுதிகளில் வெப்பமண்டலச் சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், சிறிய வெப்பமண்டல நாடுகள் வெறும் சில மணிநேரத்தில் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இழக்கின்றன. இதைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பேரழிவு ஏற்படக்கூடும். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலக நாடுகள் போதிய நிதி அளிக்கத் தவறிவரும் சூழலில், உயிர்களைக் காக்க இயற்கைப் பேரிடர்கள் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பு தேவை" எனப் பேசியிருக்கிறார்.

பூபேந்தர் யாதவ்
பூபேந்தர் யாதவ்

இந்த நிலையில், காலநிலை மாற்றத்துக்குப் பெரும்பான்மையாகப் பங்களிக்கக்கூடிய, அதிக தொழில்மயமான வளர்ந்த நாடுகள், பாதிப்புகளை நேரடியாக அனுபவிக்கக்கூடிய தொழில்வளம் குறைந்த வளரும், ஏழை நாடுகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இதர நாடுகளின் தலைவர்கள் அழுத்தமாக எழுப்பியிருக்கின்றனர்.

`ஏழை நாடுகளுக்கு, பணக்கார நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும்!'

மற்ற நாடுகளைக் காட்டிலும் தொழில்மயமான வளர்ந்த பணக்கார நாடுகள் ஏற்படுத்தும் சூழலியல் மாசுபாட்டால், காலநிலை வேகமாக மாற்றமடைந்துவருவதாக, சூழலியல் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இதனால் வளரும், ஏழை நாடுகளே அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தி லாஸ் அண்ட் டேமேஜ் கொலாபரேஷன் (The Loss and Damage Collaboration) எனும் சர்வதேச அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய 55 நாடுகளின் பொருளாதாரங்கள், 2000-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 1/2 டிரில்லியன் டாலர்களுக்குமேல் பொருளாதார இழப்பைச் சந்தித்ததாகவும், அடுத்த பத்தாண்டுகளில் அது 1 ட்ரில்லியனாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும், வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் 2030-ம் ஆண்டுக்குள் 290 பில்லியன் வரை இருக்கும் என அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

ஏற்கெனவே, 2009-ம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில், வளரும் மற்றும் ஏழை நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதற்காகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காகவும் வளர்ந்த பணக்கார நாடுகள் 2020-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக உறுதியளித்திருந்தன. ஆனால், 2022-ம் ஆண்டான தற்போதுவரை பணக்கார நாடுகள் அந்த நிதியை ஏழை நாடுகளுக்கு வழங்கவில்லை.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

இந்த நிலையில், `காலநிலை வேகமாக மாற்றமடைந்து பெரும் பொருளாதார இழப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்திவரும் நிலையில், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்குவதாக உறுதியளித்த 100 பில்லியன் அமெரிக்க டாலரோடு, கூடுதலான நிதியைக் கொடுக்க வேண்டும்' என வளர்ந்துவரும், ஏழை நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், `காலநிலை மாற்றம் குறித்து விரைவாகச் செயல்பட வேண்டிய நேரம் இது’ என்றும், காலநிலை நிதியத்துக்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளின் தலைவர்கள், காலநிலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏழை நாடுகளுக்கு எவ்வளவு தொகையைத் தர ஒப்புதல் அளிக்கப்போகிறார்கள், உறுதியளித்த தொகையை கொடுப்பார்களா இல்லை, கடந்த மாநாடுகளில் தருவதாக கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டு, பிறகு கண்டுகொள்ளாமல் போனதுபோல் போவார்களா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால், காலநிலை மாற்றம் அதுவரை காத்திருக்காது!