Published:Updated:

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகள் பாதிப்பு... ஆபத்தின் அறிகுறியா?

கிரேட் பேரியர் ரீஃப்
கிரேட் பேரியர் ரீஃப்

கடலின் சூழலியல் அமைப்பில் மிகவும் முக்கியமான பவளப்பாறைகள் இப்படி பாதிக்கப்படுவது, ஆபத்தான அறிகுறி என்று காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கரைக்கடலில், 1,100 மைல்களுக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள உலகின் மிகப் பெரிய பவளத்திட்டு இது.

உலக வெப்பமயமாதல் காரணமாகப் பவளப் பாறைகள் உலகளவில் அழிந்துவருகின்றன. கடலின் மிக முக்கியமான வளங்களில் ஒன்றான பவளப்பாறைகள் அழிந்துவருவது, கடலின் ஆரோக்கியம் குறைந்துகொண்டிருப்பதன் அடையாளம் என்கிறார்கள் கடலியல் ஆய்வாளர்கள். இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறைப் பகுதியான கிரேட் பேரியர் ரீஃப், மீண்டுமொரு முறை மிகப்பெரிய பவள நிறமாற்றத்தைச் சந்தித்துள்ளது. இதுகுறித்துப் பேட்டியளித்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் கடலியல் பூங்காவின் மூத்த ஆராய்ச்சியாளர் டேவிட் வேச்சன்ஃபெல்ட், ``கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது முறை. இந்த முறை நடந்துகொண்டிருக்கும் நிறமாற்றத்தில் இதுவரை பல பவளப் பாறைகள் இறந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

பவளப்பாறைகள்
பவளப்பாறைகள்
கடலின் சூழலியல் அமைப்பில் மிகவும் முக்கியமான இந்தப் பகுதி இப்படி பாதிக்கப்படுவது, ஆபத்தான அறிகுறி!

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரேட் பேரியர் ரீஃபில் இதற்கு முன், 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இதுபோலவே பெரியளவில் நிறமாற்றம் நடந்தது. கடலின் சூழலியல் அமைப்பில் மிகவும் முக்கியமான இந்தப் பகுதி இப்படி பாதிக்கப்படுவது, ஆபத்தான அறிகுறி என்று காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

தண்ணீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும்போது, பவளப்பாறைகள் தங்களுடைய நிறங்களை இழந்து வெள்ளையாகத் தொடங்குகின்றன. இந்த நிறமாற்றத்தைச் சிறியளவிலோ, அதைவிடக் கொஞ்சம் அதிகமாகவோ சந்திக்கும் பவளப்பாறைகள் குணமடைந்துவிடுகின்றன. ஆனால், இந்த நிறமாற்றம் வீரியமிக்கதாக இருந்தால் மீண்டுவருவது சாத்தியமில்லாமல் போகின்றது.

வௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்? ஆச்சர்யம் தந்த ஆய்வுகள்!

இப்போது கிரேட் பேரியர் ரீஃப் சந்திக்கும் பிரச்னை குறித்துத் தெரிந்துகொள்ள, நாம் பவள நிறமாற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில், பவளப்பாறைகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்வோம்.

பெருங்கடல்
பெருங்கடல்

பவளப்பாறைகள் ஆழமற்ற கரைக்கடல் பகுதியில் வளர்பவை. அவை பல வண்ணங்களில் தரை முழுக்க நிறைந்திருக்கும். பெயர்தான் பாறைகளே தவிர அவை உயிருள்ள ஜீவன்கள். ஆனால், ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நகரத்தான் முடியாது. இவை தாவரங்களைப் போன்றவை. ஆனால் தாவரங்களில்லை. இவற்றில் பல வகைகள் உண்டு. கடினப் பவளப்பாறைகள், மெல்லிய பவளப்பாறைகள், காளான் வடிவப் பவளப்பாறைகள் என்று இன்னும் பற்பல வகைகள். கடினப் பவளங்கள் பாறைகளைப் போலவே உறுதியாக இருக்கும். மெல்லிய பவளங்கள் தாவரங்களைப்போல் நீருக்குள் வளைந்து அசைந்துகொண்டேயிருக்கும்.

இப்படியாக பல நிறங்களோடு கயிறுகளைப் போல் வளைந்தும் நீண்டும் பல கிளைகளாகப் பிரிந்தும் தரை முழுவதும் படர்ந்திருக்கும். இத்தனை நிறங்கள் இவற்றுக்கு எப்படிக் கிடைத்தன?

கிரேட் பேரியர் ரீஃப்
கிரேட் பேரியர் ரீஃப்

அதற்குக் காரணம், அவற்றைச் சார்ந்து வாழும் மஞ்சள் பாசிகள் (Zooxaanthallae). பெயர்தான் மஞ்சள் பாசிகள்... ஆனால் அவற்றுக்கு மஞ்சள் நிறம் மட்டும் சொந்தமென்றில்லை. பவளப் பாறைகளைச் சார்ந்து இவை வாழ்கின்றன என்று சொல்வது தவறு. இரண்டுமே இணைத்திற உறவுக்காரர்கள் (Symbiotic relations). அதாவது நீயின்றி நானில்லை, நானன்றி நீயில்லை என்பது போல இணைபிரியாதவர்கள். பவளப் பாறைகளின் மேற்புறத் திசுக்களில் வாழும் இந்தப் பாசிகள் ஒளிச்சேர்க்கையின் மூலம் தேவையான உணவை சமைத்துத் தானும் வாழ்ந்து, பவளங்களுக்குத் தேவையான புரதம், கால்சியம் போன்றவற்றைத் தந்து வாழவைக்கிறது. அதற்குக் கைம்மாறாக ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஊட்டச்சத்துகளையும் கரிம வாயுவையும் பவளங்கள் பாசிகளுக்குத் தருகின்றன. இவற்றால் சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை, அதிக வெப்பத்தை முழுமையாகத் தாங்க முடியாது. அப்படி நேரடித் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான கவசமாக இந்த வண்ணங்களைப் பாசிகள் பவளங்களின் உடலில் உருவாக்குகின்றன.

`கொரோனா பரவுவது 5G நெட்வொர்க்கினால்தான்!' - வதந்தியால் இங்கிலாந்தில் டவர்களுக்குத் தீ வைப்பு

இப்போது, இந்த வண்ணங்களும் அதைச் சுற்றி வாழும் மீன் வளமும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அவற்றின் வெளுத்துப்போன எலும்புகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

பவள நிறமாற்றம்
பவள நிறமாற்றம்

`பவளப்பாறைகள் அழிந்துவிட்டால் அவை கரைந்துவிடும் அல்லது அங்கேயே விழுந்து துகள்களாகிவிடும். ஆனால், இவை வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன’ என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால் பவளங்கள் அழிவதற்கு முதல் அடையாளம் தன் நிறங்களை இழப்பது. அதற்கு `பவள நிறமாற்றம்’ (Coral Bleaching) என்று பெயர். இரண்டாவது, அவ்விடத்தின் பல்லுயிர்ச் சூழலை இழப்பது. இறுதியில் சொச்சமாக மிஞ்சுவது அவற்றின் எலும்புகள் மட்டுமே. இந்த எலும்புகளைத்தான் இன்னும் வாழ்கிறது என்று சிலர் கூறுகின்றனர். காலநிலை அவசரம், உலக வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் தீவிரமடைந்து வருவதால், கடலின் தட்பவெப்பநிலை அதிகரித்து கிரேட் பேரியர் ரீஃப் என்ற பவளப்பாறைகளின் சொர்க்க பூமியைச் சுடுகாடாக்கி வருகின்றன.

காற்றுவெளியில் அதிக அளவில் கரிம வாயுக்கள் கலப்பது போலவே, கடற்பரப்பிலும் கரிம வாயு அதிகளவில் கலந்துகொண்டிருக்கிறது. இதனால் நீரின் சமநிலை பாதிக்கப்பட்டு அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. பவளப்பாறைகள் அடிப்படையிலேயே உணர்ச்சி மிகுந்தவை. சிறிய மாற்றங்கள் கூட அவற்றைப் பாதிக்கப் போதுமானது. அப்படியிருக்க இந்த அதீத கரிமவாயு கலப்பினால் கடலின் அமிலத்தன்மை அதிகமாவது, மஞ்சள் பாசிகளின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது. பாசிகள் அழியும்போது அதன் `பார்த்தா’ மட்டும் பார்த்துக்கொண்டா இருக்கும். அதுவும் அழிந்துவிடுகிறது. மஞ்சள் பாசிகளின் ஒளிச்சேர்க்கைச் செயல்பாட்டிற்கு கரிம வாயு வேண்டும் என்றும் அதைப் பவளங்கள் நீரிலிருந்து எடுத்து வழங்குகிறது என்றும் மேலே கூறினீர்கள். இப்போது அதே கரிம வாயு அவற்றின் அழிவிற்கு வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களே என்ற கேள்வி எழுகிறதா? அனைத்துமே அளவோடு இருக்கவேண்டும். அவற்றுக்குத் தேவைப்படும் கரிமமும்தான்.

ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு கிரேட் பேரியர் ரீஃப் தான் அடிப்படையாக விளங்குகின்றது. அதோடு, டார்ரெஸ் தீவுகளில் வாழும் பூர்வகுடிச் சமூகங்களின் வாழ்வாதாரத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கடலியல் ஆராய்ச்சியாளர்கள்
கடலியல் ஆராய்ச்சியாளர்கள்

பல ஆண்டுகளாகவே, கிரேட் பேரியர் ரீஃப் இந்தப் பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. அவை அழியும் வேகம் அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து ஆய்வாளர்களும் பல ஆண்டுகளாகவே எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவை அழியும் வேகத்தோடு ஒப்பிடுகையில் வளரும் வேகம் மிகவும் குறைவு. ஐந்தே ஆண்டுகளில் மூன்று முறை பெரியளவிலான பவள நிறமாற்றத்தைச் சந்தித்துள்ளன என்பது மற்றுமோர் எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு கிரேட் பேரியர் ரீஃப் தான் அடிப்படையாக விளங்குகின்றது. அதோடு, ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினியாவுக்கும் இடையேயுள்ள டார்ரெஸ் தீவுகளில் வாழும் பூர்வகுடிச் சமூகங்களின் வாழ்வாதாரத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூடுதலாக, மீன்பிடித்தல், சுற்றுலாத்துறை போன்றவற்றிலும் இவற்றின் இருப்பு பேருதவி புரிகின்றன. சூழலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் சேவை புரியும் இந்தப் பவளத் திட்டுகள் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

பவளப்பாறைகள்
பவளப்பாறைகள்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கரைக்கடலில், 1,100 மைல்களுக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள உலகின் மிகப் பெரிய பவளத்திட்டு இது. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் 80 சதவிகிதப் பவளப்பாறைகள் நிறமாற்றத்திற்கு ஆளாகிவிட்டன என்று மூத்த ஆராய்ச்சியாளர் வேச்சன்ஃபெல்ட் கூறியுள்ளார். ஏற்கெனவே, 40 சதவிகிதப் பாறைகள் மோசமான மற்றும் மிக மோசமான நிலையில்தான் இருந்துவருகின்றன. ஆகவே, மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ள இந்த நிறமாற்றத்திலிருந்து அவை உயிர் பிழைப்பது எளிய காரியமல்ல என்று அஞ்சுகின்றனர்.

ஆஸ்திரேலிய அரசு, இதைச் சரிசெய்யத் தொடர்ந்து போராடி வருகின்றது. இப்போது அவற்றை மீட்டுக்கொண்டுவரப் போராடுவது வேண்டுமானால் ஆஸ்திரேலியா மட்டுமாக இருக்கலாம். ஆனால், அவை இந்த நிலைக்கு ஆளாக அனைத்து நாடுகளுமேதான் காரணம். அனைவரும் வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களே உலக வெப்பமயமாதலுக்குக் காரணம். உலக வெப்பமயமாதலே பவளப்பாறைகள் அழிவுக்குக் காரணம்.

அடுத்த கட்டுரைக்கு