Published:Updated:

கோடை... கொரோனா தந்த கொடை!

தண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீர்

தண்ணீர்.

ஊரையெல்லாம் முடக்கிப்போட்ட கொரோனாவால் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. அதிலே முக்கியமானது, குடிநீர்ப் போராட்டங்களின்றிக் கடக்கிறது கோடை.

கடந்த ஆண்டில் கைகொடுத்த பருவமழைகள் இதற்கு முக்கியக் காரணம். கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு ஓர் ஆளுக்கு மூன்று ஆடைகள் மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்தமாய் தண்ணீர்த் தேவை குறைந்திருக்கிறது. கோடையில் தமிழகத்தில் குடிநீர் விநியோகம் எப்படியிருக்கிறது என்று களமிறங்கி விசாரித்தோம்...

சென்னை

சென்னையும் குடிநீர்ப் பஞ்சமும் இரட்டைக் குழந்தைகள் மாதிரி. மார்ச் வந்துவிட்டால் குடிநீர்ப் போராட்டங்கள் மார்ச்சிங் ஆகிவிடும். ஆனால் இந்த ஆண்டில் அமைதியாய் இருக்கிறது தலைநகரம்.

சென்னையின் குடிநீர்த் தேவை
சென்னையின் குடிநீர்த் தேவை

சென்னை மாநகருக்குப் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளிலிருந்தும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களிலிருந்தும், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தலைநகரில் வாழும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களில் 78 லட்சம் பேர், மெட்ரோ வாட்டர் நிறுவனத்தையே நம்பியுள்ளனர். சென்னை மாநகரில் 8 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு உள்ளது.

கொரோனா ஊரடங்கால் இப்போது பல லட்சம் மக்கள், சொந்த ஊர்களுக்குப் போய்விட்டனர். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் என எதுவுமே இயங்காததால் தண்ணீர்த் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஏரி, கடல்நீரைக் குடிநீராக்குதல், வீராணம் ஏரி, கிருஷ்ணா நீர் வரத்து... இப்படிப் பல்வேறு வகையான நீர் ஆதாரத்தை வைத்துப் பார்க்கும்போது சுமார் 8 டி.எம்.சி அளவுக்குக் கையிருப்பு இருக்கிறது. மாதத்திற்கு சென்னைக் குடிநீர்த் தேவை ஒரு டி.எம்.சி என்று வைத்துக்கொண்டால், அடுத்து வரும் எட்டு மாதங்களுக்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருக்கிறது. தண்ணீர்ப் பஞ்சம் வர வாய்ப்பேயில்லை.

கோடை... கொரோனா தந்த கொடை!

அசாதாரணமான இந்தச் சூழ்நிலையிலும் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 பேர்களில் 5,200 பேர் இப்போதும் பணிக்கு வருகின்றனர். தினமும் 5,200 லாரி டிரிப்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 85 கோடி லிட்டர் தண்ணீர், சென்னை மக்களுக்குத் தேவைப்படும். ஆனால் ஏப்ரல் 25 நிலவரப்படி, 65 கோடி லிட்டர் தண்ணீரே போதுமானதாக இருக்கிறது.

சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர் ஹரிஹரன், ‘‘சென்னை மாநகரம் அடிப்படையிலேயே ஒரு நீர்ப்பிடிப்பு உள்ள பகுதி. மூன்று ஆறுகள், 210க்கும் மேற்பட்ட சிறு குளங்கள், குட்டைகள் உள்ளன. மத்திய அரசின் உதவி மற்றும் நீடித்த நீர்ப் பாதுகாப்புத் திட்டத்தின்படி, அவற்றில் பெரும்பாலானவற்றைச் சீரமைத்தோம். சென்னையில் வீணாக இருந்த 320 கிணறுகளையும் தூர் வாரி தண்ணீர் தேங்கும் அளவிற்குச் சரி செய்தோம். கடந்த ஆண்டைவிட சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 1.51 மீட்டர் உயர்ந்துளளது. இதனால் 2.75 டி.எம்.சி அளவுக்கு நீர் ஆதாரம் கிடைத்துள்ளது. அதனால்தான், கொரோனா காலகட்டத்திலும் சென்னை மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகிக்கிறோம்’’ என்றார்.

நீர் ஆதாரங்களில் நீர் எடுப்பு
நீர் ஆதாரங்களில் நீர் எடுப்பு

மெட்ரோ வாட்டர் வாரிய நீர் சேமிப்புப் பிரிவின் நில நீர் புவியிலாளர் சுப்பிரமணியன், “சென்னையில் தற்போது சுமார் 8,10,000 கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பு என்று பார்த்தால், 8,75,672. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுமார் 15 குளங்களைப் பராமரிக்கிறார்கள். அறநிலையத்துறைக்குச் சொந்தமான 54 குளங்களில் 17-ல் மழை நீர் சேமிப்பு வசதி செய்து, அவற்றை சுற்றுவட்டார மக்களிடம் சொல்லி தொடர்ந்து கண்காணிக்கச் சொல்லியிருக் கிறோம். இந்த மாதிரியான நடவடிக்கையால் ஒன்று முதல் ஒன்றரை டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் உயருவதற்கு இதுபோன்ற நிறைய நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்றார்.

பிற பகுதிகளில்

கோயம்புத்தூரில் 7 முதல் 14 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் கேட்டு, நகரின் சில பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன. அணைகளில் உள்ள நீர் இருப்பை வைத்து ஜூன் மாதம்வரை சமாளிக்க முடியும் என்கிறார்கள், மாநகராட்சி அதிகாரிகள். அதற்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடுமென்ற வழக்கமான நம்பிக்கையுடன். மதுரையில் வைகை அணையின் நீர்மட்டம் 71லிருந்து 44 அடியாகக் குறைந்துள்ளதால் அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீர் விரைவில் நான்கு நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்ய உத்தரவிடப்படும் நிலை வரலாம் என்கிறார்கள்.

சென்னை ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னை ஏரிகளின் நீர் நிலவரம்

ஊரடங்கு காரணமாகத் திருப்பூரில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்குச் சென்றிருப்பதால் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. ஊட்டியின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து உள்ளிட்ட நீர் நிலைகள் மற்றும் அவலாஞ்சி, குந்தா, எமரால்டு, பைக்காரா, அப்பர் பவானி அணைகள் ஆகியவற்றில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. ஈரோட்டு மாநகராட்சிக்குக் காவிரி ஆற்றிலிருந்து ஒரு நாளுக்கு 65 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காகக் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் ஓரளவுக்கு நீர் வரத்து இருப்பதால், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 9 லட்சம் மக்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களுக்கும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளி லிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது மூன்று அணைகளிலும் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால், இரண்டு நகரங்களுக்கும் கோடைக்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது.

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஜூன் மாதம்வரை தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

மொத்தத்தில் தமிழகம் முழுக்கவே தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்பது நெருக்கடி காலத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு.

‘‘ஆற்று நீர், நிலத்தடி நீரின் தரம் உயர்ந்திருக்கும்!’’

தமிழகத்தில் லாக்டௌன் தண்ணீர் இருப்பு மற்றும் தரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடுமா என்பது குறித்துப் பேசிய நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ, “நாம் நிலத்தடி நீரில் 80 சதவிகிதம் விவசாயத்திற்கும் 15 முதல் 20 சதவிகிதம் மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்துகிறோம். 5 முதல் 10 சதவிகிதம்தான் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால் இந்த நீர் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கிறது. உணவு சார்ந்த தொழிற்சாலைகளைத் தவிர மற்றவை இயங்காததால், நீர்ப்பயன்பாட்டுடன் கணிசமாகக் கழிவுநீர் உற்பத்தியும் குறைந்துள்ளது. ஆறுகளின் மாசுபாட்டுக்குக் காரணமாக இருந்த ஆலைகள் இயங்காததால் நிச்சயம் நீரின் தரம் உயர்ந்திருக்கும்.

தண்ணீர்.
தண்ணீர்.

ஆற்றுப்படுகைகளில் கழிவுநீர் கலப்பதும் குறைந்துள்ளதால் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதைத் தக்கவைக்க முடியாது. உதாரணத்திற்கு, 2015-ம் ஆண்டு வெள்ளத்தில் கூவம் மற்றும் அடையாறு இரண்டுமே கிட்டத்தட்ட தூய்மையடைந்துவிட்டது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே அவை மீண்டும் மாசடைந்து மோசமான நிலைக்குச் சென்றது. மீண்டும் அதுபோல நடக்காமல் இருக்க வேண்டுமானால், மொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் அரசின் திறமையான திட்டமிடலும் அவசியம்’’ என்றார்.