Published:Updated:

பழங்குடிகள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கொரோனா... ஆபத்தில் 10.4 கோடி பேர்!

பழங்குடியினக் குடியிருப்பு
பழங்குடியினக் குடியிருப்பு

காடுகளுக்குள் வாழும் பழங்குடியின மக்கள் கொரோனா வைரஸுக்கு எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

அவர்களுக்கு அடிப்படையிலேயே மற்ற மக்களுக்கு இருப்பதுபோல் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்காது. குறிப்பிட்ட பகுதியிலேயே பல நூறு தலைமுறைகளாக அவர்கள் வாழ்வதால், அந்தக் குறிப்பிட்ட பகுதியில் வரக்கூடிய நோய்களை எதிர்த்துச் செயலாற்றக்கூடிய அளவுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். ஆகவே, அவர்களுடைய உடல்நலம் கோவிட் 19-க்குப் பாதிக்கப்படுவது எளிது. அதுமட்டுமன்றி பழங்குடியின மக்களுடைய வாழ்வாதாரமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. உதாரணத்துக்கு, பிரேசிலுள்ள அமேசானாஸ் மாகாணத்தில் வாழ்கின்ற பூர்வகுடிகள் மத்தியில் அதிகளவில் கோவிட் 19 வைரஸ் பரவியுள்ளது.

பழங்குடிகள்
பழங்குடிகள்
Pixabay

`பூர்வகுடிகள் மத்தியில் கொரோனா அதிகம் பரவுவதால் குறிப்பிட்ட வைரஸை எதிர்த்து செயலாற்ற முடியாத அளவுக்குப் பூர்வகுடிகள் பலவீனமாக இருப்பதாகப் பலரும் குறிப்பிடுகின்றனர். அது உண்மையில்லை’ என்கிறார் ரியோ டி ஜெனீரோவைச் சேர்ந்த நோயியல் ஆய்வாளரான கார்லோஸ் கொய்ம்பிரா (Carlos Coimbra). அவரைப் பொறுத்தவரை, அடிப்படையிலேயே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ள சமூகத்தின் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகின்றது. இந்தக் குறிப்பிட்ட வைரஸை எதிர்க்கக்கூடிய எதிர்ப்பாற்றல் மட்டும் இல்லையென்று கிடையாது. பூர்வகுடிகள் மக்களிடமிருந்து பெரிதும் தனித்தே வாழ்வதால் அவர்களுக்கு நகர்ப்புறங்களில் பரவக்கூடிய, பொதுமக்கள் மத்தியில் பரவக்கூடிய சில நோய்களைத் தாங்கக்கூடிய ஆற்றல் இருக்காது. ஆனால், இன்று தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வது மற்றும் தடுப்பூசி போடுவது போன்ற செயல்பாடுகள் இன்ஃப்ளுயன்ஸா போன்ற நோய்களுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவிட் 19 மொத்த உலகத்துக்குமே புதிய நோய். ஆகவே, பழங்குடிகள் மத்தியில் இந்த பிரச்னை மேலும் சிக்கலாகின்றது.

கார்லோஸ் கொய்ம்பிராவின் கூற்று இவ்வாறு இருக்க, ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் வேறு மாதிரியாகக் கருதுகின்றனர். அந்த மக்கள் மலேரியா, டி.பி போன்ற நோய்களால் எளிதில் பாதித்துவிடுவதாலும் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுவதாலும் குழந்தை மரணங்கள் அதிகமிருப்பதாலும்தான் இப்போதும் கொரோனா தொற்று அவர்கள் மத்தியில் அதிகமிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பழங்குடி மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவு. அவர்கள் எந்தவொரு தொற்று நோயாக இருந்தாலும் அதற்கு எளிதில் பாதிக்கப்படுவதோடு, கடுமையான விளைவுகளைச் சந்திக்கின்றனர். அவர்களுடைய சமூக மற்றும் சூழலியல் காரணிகளும் இந்த விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரேயிடத்தில் அனைவரும் கூட்டாக வாழ்வது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்று பரவுவதை இன்னும் எளிதாக்குகின்றது.

அதிலும், இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்விடங்களில் இன்னும் போதுமான அளவுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள்கூட இல்லாமல்தான் இருக்கின்றன. அடிப்படைத் தகவல்களோ போதிய விழிப்புணர்வோ இல்லாமல் போனதால் தொற்று பரவுவது மேலும் தீவிரமடைந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியா முழுக்க உள்ள பூர்வகுடிகளில் மிக எளிதில் பாதிக்கக்கூடிய சமூகங்களாக 75 பழங்குடிக் குழுக்களை வகைப்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில்தான் அந்தப் பட்டியலைச் சேர்ந்த அதிகக் குழுக்கள் வாழ்கின்றன.

எளிதில் பாதிக்கக்கூடிய அளவுக்கு எதிர்ப்பாற்றலின்றி இருக்கும் பழங்குடிக் குழுக்கள் மத்தியில் எந்தவொரு கணக்கெடுப்பும் அவர்களுடைய நிலையைப் பதிவு செய்யும் விதத்தில் இன்னும் நடக்கவில்லை. அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. போதுமான தரவுகளின்றி, அத்தகைய பூர்வகுடிக் குடும்பங்களையோ அவர்களுடையோ வாழ்விடங்களையோ கண்டறிவது சாத்தியமில்லை. சமூகப் பொருளாதார விவரங்கள் தெரியாமல் அவர்களுக்குத் தேவைப்படுகின்ற பொருளாதார உதவிகளையோ மருத்துவ உதவிகளையோ முழுமையாக மேற்கொள்வது கடினம்.

இது மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான பூர்வகுடிகள் தங்கள் பகுதிகளைவிட்டு இடம்பெயர்ந்து வெளிமாநிலங்களில் வெளிமாவட்டங்களில் வேலைவாய்ப்பு தேடிச் சென்றவர்கள் பலர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் திரும்பித் தங்கள் கிராமங்களையே சென்றடைந்தால் அங்கு போதுமான இடமும் இப்போது இருக்காது. அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வாழ்வாதாரமும் இருக்காது. இது பழங்குடியினச் சமூகங்களைப் பெரிய பின்னடைவுக்கு ஆளாக்கும். அதோடு, இடப்பெயர்வில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்று சேரும்போது அவர்கள் மூலமாகக்கூட தொற்று பரவ வாய்ப்புள்ளது. அப்படிப் பரவினால், அது அந்தச் சமூகம் மொத்தத்தையுமே பாதித்துவிடும் பேரபாயம் உள்ளது.

கிராமப் பொருளாதாரம்
கிராமப் பொருளாதாரம்

மார்ச் 27-ம் தேதியன்று, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து மத்திய பிரதேசத்திலிருக்கும் ஜாபுவா மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து பணிபுரிந்துகொண்டிருந்த 30,000 பழங்குடியின ஊழியர்கள் திரும்பி வந்தனர். மார்ச் 25-ம் தேதி, ராஜஸ்தானிலிருந்த பன்ஸ்வாரா, துங்கர்பூர், உதய்ப்பூர், சிரோஜி ஆகிய மாவட்டங்களுக்கும் குஜராத்திலுள்ள தாஹோத், பஞ்ச்மஹல்ஸ், பனாஸ்கந்தா, சாபர்கந்தா மாவட்டங்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் திரும்பி வந்தனர். இப்படி வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் சென்று பணிபுரிகின்ற பூர்வகுடி ஊழியர்கள் குறித்த எந்தக் கணக்கீடும் வைக்கப்படுவதில்லை. கொரோனா நேரத்திலும்கூட, முறையாக ஒருங்கிணைத்துச் செயல்படாமல் ஆயிரக்கணக்கில் சாலைகளில் நடந்தே செல்ல வைப்பது பூர்வகுடிகளுடைய பாதுகாப்பை மேலும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றது. அதுமட்டுமன்றி, தனிமைப்படுத்தப் படுபவர்களுக்குத் தரப்படும் உணவு தரமானதாக இருப்பதில்லை. அதனால், தனிமைப்படுத்தப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் அவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்வதாக, ஜபுவாவிலுள்ள பத்திரிகையாளர் சஞ்சய் சௌஹன் பதிவு செய்துள்ளார். இது விளைவுகளை இன்னும் விபரீதமாக்கும்.

உலகளவிலான இதுபோன்ற தொற்று ஆபத்துகளின்போது, இப்படிப்பட்ட முறையற்ற மேலாண்மைக் குறைபாடுகளால் பூர்வகுடிகள் மத்தியில் இழப்புகள் பெரியளவில் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான காலகட்டங்களில் தேவைப்படுகின்ற கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவர்களைச் சென்றடைவதில்லை.

கோவிட் 19 போன்ற புதுப்புது தொற்றுகள் பரவுவதற்கும் காட்டுயிர் மற்றும் இயற்கை வளங்கள் அழிப்புக்கும் தொடர்பு இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு

காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பழங்குடிகளின் பங்கு இன்றியமையாதது. காலநிலை மற்றும் சூழலியல் பேரபாயங்களுக்கு மத்தியிலே, மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் பகுதிகள் எவையென்று பார்த்தால் அவை, பூர்வகுடிகளால் பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாகவே இருக்கின்றன என்பதை பலகட்ட ஆய்வுகள் தொடர்ந்து நிரூபிக்கின்றன. அவர்களுடைய பாதுகாப்பின்கீழ் இருக்கின்ற பகுதிகளில் பல்லுயிர்ச்சூழல் மற்றும் இயற்கை வளம் செழிப்பாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதமே பங்கு வகிக்கும் பூர்வகுடிகள், 80 சதவிகிதப் பல்லுயிரிய வளத்தைப் பாதுகாப்பத்தில் பங்கு வகிக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, கனிம வளத்தை அதிகமாகக் கொண்டுள்ள பகுதி என்பதாலும் இயற்கை வளம் நிறைந்த பகுதியாக இருப்பதாலும் சுரங்கம், தொழிற்சாலை, வேட்டை போன்றவற்றை அதிகளவில் பூர்வகுடி நிலங்கள் ஈர்க்கின்றன. அதன்விளைவாக, வெளியாட்களின் தொடர்பும் அவர்களுடைய வாழ்விடத்தில் அதிகரித்துவிட்டது. கட்டுப்பாடில்லாத, தொடர்ச்சியான வெளித் தொடர்பு பல்வகைத் தொற்றுகளை அவர்களிடம் கொண்டுவந்து சேர்க்கின்றது.

பழங்குடியினக் குடியிருப்பு
பழங்குடியினக் குடியிருப்பு

கோவிட் 19 போன்ற புதுப்புது தொற்றுகள் பரவுவதற்கும் காட்டுயிர் மற்றும் இயற்கை வளங்கள் அழிப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதியாகக் கூறுகின்றது. வியாபார ரீதியிலான பெருவிவசாயம், கட்டுப்பாடில்லாத கால்நடை வளர்ப்பு போன்றவை சூழலியல் சமநிலையைக் குலைக்கின்றன. இத்தகைய அதீத விவசாயத்தையும் அதீத கால்நடை வளர்ப்பையும் பூர்வகுடி நிலங்களில் ஊடுருவிய வெளிநபர்கள் செய்கின்றனர். இந்தியாவில் நடக்கும் வளர்ச்சி சார்ந்த இடப்பெயர்வு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களுடைய உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி ஊட்டச்சத்துக் குறைபாட்டில் தள்ளுகின்றது. அப்படி இடம் மாற்றப்படும் மக்கள் இத்தகைய தொற்றுப் பரவலின்போது பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் முன் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

பழங்குடியின மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களுடைய வன உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அதுவே, அவர்களுடைய ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, காடுகள் பாதுகாப்பிலும் துணைபுரியும். குறிப்பாக, கொரோனா விஷயத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று நோய் எதிர்ப்பாற்றல் எந்த அளவுக்கு இருக்குமென்பதை வயது வாரியாக வகைப்படுத்தி படிப்படியாகக் கவனிக்க வேண்டும். பூர்வகுடித் தலைவர்கள் வழியே, இந்தத் தொற்று குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேநேரம் உள்ளூர் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பழங்குடியின அமைப்புகள் வழியே பழங்குடிச் சமூகங்களுக்கு மிகவும் அடிப்படையான, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மிக எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பழங்குடிச் சமூகம்
பழங்குடிச் சமூகம்

பழங்குடிகள் பாதுகாப்பே காடுகள் பாதுகாப்பின் முதல்படி. அதுதான், எதிர்காலத்தில் கொரோனா, நிபா, சார்ஸ் போன்று வேறு எந்தப் புதிய தொற்று நோயும் பரவாமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நீண்டகாலச் செயல்திட்டம். உலகளவில் 90 நாடுகளில் வாழும் 5,000 வகையான பூர்வகுடிக் குழுக்களைச் சேர்ந்த 4,000 வகையான மொழிகளைப் பேசும் 370 மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் 104 மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். 2011-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவிகிதம் பேர் பழங்குடிகள். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாகவுள்ள இந்த 10.4 கோடி மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு