Published:Updated:

இந்தியாவின் போதாத கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள்; அரசுகள் விழித்துக்கொள்வது எப்போது?

தமிழ்நாட்டில், ஒரு நாளுக்கு 6,421 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மொத்த கொள்ளளவு 1,492 மில்லியன் லிட்டர் மட்டுமே.

நமக்கு எப்போதுமே தண்ணீரைப் பற்றிய ஒரு சிந்தனை இருந்துகொண்டேயிருக்கும். 24 மணிநேரமும் தண்ணீரின் தேவை குறித்த சிந்தனையோடு இருக்கும் நாம், நீர் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு கழிவுநீர் உற்பத்தியும் நடக்கும் என்பதை மறந்துவிடுகிறோம். நகர்ப்புறக் குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்படும் நீரில் 80 சதவிகித கழிவுநீராக மீண்டும் வெளியேற்றப்படுகிறது. அப்படி வெளியேற்றப்படும் கழிவுநீரை எங்கே கொண்டு செல்வது, என்ன செய்வது என்ற முறையான திட்டமிடல் இந்திய நகரங்களுக்கு இல்லை. ஆகவே, நேரடியாக ஓடைகள், ஏரிகள், நதிகளில் திறந்துவிடப்படுகிறது.

இந்தச் செயல்பாடுகளால்தான், சென்னை நகரத்தைச் செழிப்பாக வைத்திருக்க வேண்டிய இரண்டு நதிகள் இன்று நகரத்தின் பிரமாண்ட சாக்கடைகளாக மாறி நிற்கின்றன. நிலத்தடி நீரைப் பயன்படுத்த சட்டமியற்றிய நீதிமன்றங்கள், கழிவுநீரை நன்னீரில் கலக்காமல் பாதுகாக்கவும் ஒரு சட்டம் இயற்றியாக வேண்டும் என்று ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். ஆனால், இதைச் சட்டங்களால் மாற்ற முடியாது. அதற்கு முறையான திட்டமிடல் அவசியம்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சமீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியா முழுக்க இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளால், நாட்டில் ஒரு நாளுக்கு உற்பத்தியாகும் மொத்த கழிவுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே சுத்திகரிக்க முடியும் என்று கூறுகிறது. மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் பற்றிய தரவுகளைச் சேகரித்து இந்த அறிக்கையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொகுத்துள்ளது. நிறுவப்பட்ட சுத்திகரிப்பு ஆலையின் திறன், செயல்திறன், நடைமுறை பயன்பாட்டு நிலை போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இந்தியாவில் 72,368 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த அறிக்கைப்படி நாடு முழுக்கவுள்ள சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த செயல்திறனே நாளொன்றுக்கு 31,841 மில்லியன் லிட்டர்தான். அதாவது, ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் மொத்தக் கழிவுநீரில் 43.9 சதவிகிதம் மட்டுமே இப்போதுள்ள கட்டமைப்புகளால் சுத்திகரிக்க முடியும்.

இந்த 43.9 சதவிகித சுத்திகரிப்பு நிலைய கட்டமைப்புகளிலும்கூட, மொத்தமாக ஒரு நாளைக்கு 26,869 மில்லியன் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் அளவுக்குத்தான் மேம்படுத்தப்பட்டு, செயல்திறன் கொண்டவையாக உள்ளன. அதிலும், 20,235 மில்லியன் லிட்டர் கழிவுநீர் அளவுக்கு மட்டுமே நாடு முழுக்க மொத்தமாகச் சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்படுகிறது. அதாவது, ஒருநாளில் உற்பத்தியாகும் 72,368 மில்லியன் லிட்டர் கழிவுநீரில், சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவது 20,235 மில்லியன் லிட்டர் கழிவுநீர் மட்டுமே. இதில் மீதமுள்ள 52,133 மில்லியன் லிட்டர் கழிவுநீர் அப்படியே நீர்நிலைகளில் கலந்துவிடப்படுகிறது.

கழிவுநீர் சாக்கடையாகி நிற்கும் கூவம்
கழிவுநீர் சாக்கடையாகி நிற்கும் கூவம்
மெட்ராஸ் வரலாறு:  “கூவம் ஆற்றில் பயணம் செய்த ரோமாபுரி மன்னர்கள்”| பகுதி-1

நகரத்தைத் திட்டமிடும்போது சாக்கடைகளை அமைக்க வேண்டும். அந்தச் சாக்கடைகள் கழிவு உற்பத்தியாகும் இடத்திலிருந்து கொண்டுசென்று அப்படியே நீர்நிலையில் கலப்பதாக இருக்கக் கூடாது. அவை கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகால் ஆலைகளோடு இணைக்கப்பட வேண்டும். அங்கு முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டு மீதமாகும் கழிவுகளை அறிவியல்பூர்வமாக அப்புறப்படுத்த வேண்டும். நீர்நிலைகளுக்குத் தனிப்பண்பு ஒன்றுண்டு. குறிப்பிட்ட அளவு கழிவுகளை அவையே சுத்தம் செய்துகொள்ளும். அந்த அளவு அத்துமீறப்படும்போது சுயத்தை இழந்து இறக்கத் தொடங்குகின்றன. அப்படியொரு நிலைக்குக் கொண்டு போகாமலிருக்க இந்தச் செயல்முறை உதவிசெய்யலாம். இதுதான் கழிவுநீர் மேலாண்மையின் அடிப்படை. இதையே இந்தியாவின் நகரத் திட்டமிடுதலில் இதுவரை முழுமையாகச் செய்யவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தான் நாட்டின் 86 சதவிகித மொத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டமைப்புகள் இருக்கின்றன. அருணாசலப் பிரதேசம், அந்தமான் - நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களே அமைக்கப்படவில்லை. பீகார் போன்ற சில மாநிலங்களில் வெறும் 2,276 மில்லியன் லிட்டரை கையாளத் தகுந்த கட்டமைப்பே இருக்கின்றன. ஆனால், அதுவும் செயல்பாட்டில் இல்லை. அதேபோல், அஸ்ஸாமில் 809 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஒருநாளைக்கு உற்பத்தியாகிறது. ஆனால், அங்கு ஒரு சுத்திகரிப்பு நிலையம்கூட இல்லை.

அடையாறு
அடையாறு
மெட்ராஸ் வரலாறு: ``சென்னை  கூவம் ஆற்றில் ஒரு படகு பயணம்” |  பகுதி - 2

ஒரு நகரத்தின் கழிவுநீர் உற்பத்திக்கும் அங்கு கையாளப்படும் கழிவுநீரின் அளவுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி நிகழ்வதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு நாளுக்கு சராசரியாக 6,421 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு 1,492 மில்லியன் லிட்டர். ஆனால், பாதிக்கும் மேல் இப்போது முழு செயல்பாட்டில் இல்லை.

சென்னையின் நிலை குறித்துப் பேசிய சூழலியல் ஆர்வலர் பேரா.த.முருகவேள், ``செம்பரம்பாக்கத்திலிருந்து வரும் உபரிநீர்தானே ஆற்றில் ஓட வேண்டும். ஆனால், நகருக்குள் நுழையும்போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இரண்டுபுறம் இருந்தும் திறந்துவிடப்படுகிறது. அதுதானே ஆற்றில் பெரும்பாலும் ஓடுகிறது? இப்படி கழிவுநீர் கொட்டப்படுகிறதோடு, அங்கெல்லாம் கண்காணித்துத் தடுப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. அவையெல்லாமே கடலில்தான் சென்று கலக்கிறது. கடலுக்குள் இரண்டு கிலோமீட்டர் வரை அடையாறு கழிமுகப் பகுதியிலிருந்து சென்று பார்த்தாலும், ஆற்றிலிருந்து செல்லும் கழிவுநீர் தனியாக கறுப்பு நிறத்தில் தெரியும். நெகிழிக் கழிவுகள் மிதந்து கொண்டேயிருக்கும்.

இயற்கையான சுத்திகரிப்பு முறைகள் சில, நதிகளுக்கு உண்டு. நீர்நிலைகளில் நாணல் புற்கள் முளைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அவற்றுக்கு இயற்கையாகவே கன உலோகங்களைக் கிரகித்துக்கொள்ளும் பண்பு உண்டு. ஆனால், தூர்வாருகிறோம் என்ற பெயரில், அந்த நாணல் போன்ற செடிகள் அனைத்தையும் அகற்றிவிடுகிறோம். இதனால் ஆற்றின் இயற்கையான சுத்திகரிப்பு முறையும் தடைப்படுகிறது. இதனால், நதி தன்னைத்தானே சுத்திகரிக்கும் திறனை இழந்துவிடுகிறது. மழைக்காலத்தின்போது ஏற்படும் வெள்ளத்தில் அடையாறு முழுக்க அடித்துச் சென்றுவிடும். அதற்குப் பிறகு, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நிறுத்தினாலே, நதி குறிப்பிடத்தக்க அளவுக்குச் சுத்தமாகிவிடும். அதைச் செய்ய வேண்டியதுதான் முக்கியம்" என்று கூறினார்.

கூவம் ஆறு
கூவம் ஆறு
Srinivasulu.V / Vikatan
சென்னையின் வளர்ச்சிக்கு நடுவே வீழ்ந்த அடையாறு; ஒரு காலத்தில் எப்படி விளங்கியது தெரியுமா?

இன்று பல இடங்களில் கழிவுநீர்ச் சாக்கடைக் கால்வாய் அமைப்புகள் தோற்றுப்போய் பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். கழிவுநீர் வடிகால் அமைப்புகள் மையப்படுத்தப்பட்டிருப்பதால்தான் இதைச் சாதிக்க முடியாமல் தவிக்கிறோம். ஆங்காங்கே உற்பத்தியாகும் கழிவுகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மையப்படுத்தப்பட்ட இணைப்பு சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு செல்வதற்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். இது கழிவுநீர் ஏரி, ஆறு போன்ற பெரிய நீர்நிலைகளில் கலந்து அவற்றையும் சாக்கடையாக்காமல் காப்பாற்றும்.

இப்போது இருப்பதுபோல், மிகப்பெரிய குழாய்வழித் தடங்கள் அமைத்து அனைத்துப் பகுதிகளையும் இணைத்து ஓரிடத்துக்குக் கழிவுநீரைக் கொண்டு செல்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம். அதனால் பயனும் கிடைப்பதில்லை. ஒரு சில இடங்களிலேயே நகரத்தின் மொத்தக் கழிவுகளையும் சுத்திகரிக்க முடியாது. இந்தச் செயல்முறையில் மிகச் சொற்பமாகவே கையாள முடியும், மீதி அப்படியே கலந்துவிடப்படுகிறது. இப்படிச் செய்யும்போது, சுத்திகரிப்பு செயல்முறைக்குப் பின் வெளியேற்றப்படும் நீர்கூட மீண்டும் மாசடைகிறது. செலவு செய்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் அதே நீர்நிலையில்தான் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் வெளியேற்றப்படுகிறது. இப்படி வீண்செலவு செய்யும் வகையில்தான் இப்போதைய நகரக் கட்டுமானம் அமைந்துள்ளது.

பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை
`சென்னையின் வெள்ள அபாயம் இன்னும் நீங்கவில்லை!' - தமிழக அரசின் அறிக்கை சொல்லும் உண்மை

2007-ம் ஆண்டு, ஜப்பான் நாட்டின் கல்வி அமைச்சகமும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து பெருங்குடியில் வாழும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், பெருங்குடி பகுதியில் வாழும் தாய்மார்களின் தாய்ப்பாலின் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிமங்கள் கலந்திருப்பது தெரியவந்தது.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்களும் தாய்ப்பாலில் தென்பட்டதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஸ்ரீவாசன் தெரிவித்தார். பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாகக் கையாளாததுதான் இதற்குக் காரணம் என்று அப்போதே சொல்லப்பட்டது. ஆனால், சுமார் 14 ஆண்டுகள் கழித்து, இன்றும் இந்த நிலை இன்னும் மாறவில்லை. நகரத் திட்டமிடலில் கழிவுநீர் மேலாண்மைக்கான முக்கியத்துவத்தை இனியும் கொடுக்கவில்லை என்றால், சென்னை மட்டுமன்றி, இந்தியாவின் நகர்வாழ் மக்கள் அனைவருமே கணக்கிட முடியாத இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு