Published:Updated:

அரசு தேயிலைத் தோட்டத்தை வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவு; வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும்!

டேன் டீ

"ஆங்கிலேயர் காலம் முதல் டேன் டீ வரை இயற்கை காடுகளை அளித்தே தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீலகிரி போன்ற பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்து வரும் அதே நேரத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது."

அரசு தேயிலைத் தோட்டத்தை வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவு; வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும்!

"ஆங்கிலேயர் காலம் முதல் டேன் டீ வரை இயற்கை காடுகளை அளித்தே தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீலகிரி போன்ற பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்து வரும் அதே நேரத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது."

Published:Updated:
டேன் டீ

'டேன் டீ' எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகம் இலங்கையில் இருந்து தாய்நாடு திரும்பிய தமிழக மக்களுக்காக 1968 -ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இலங்கையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக இருந்த இந்த மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை வசம் இருந்த வனப்பகுதிகளை குத்தகை அடிப்படையில் 11,000 ஏக்கர் பெறப்பட்டு தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் தாயகம் திரும்பிய சுமார் 2,500 தமிழ் குடும்பங்கள் இருந்தன. இவர்கள் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். முறையற்ற நிர்வாகம் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டேன் டீ நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

டேன் டீ
டேன் டீ

இதனால், தொழிலாளர்களுக்கான உரிய‌ ஊதியம் மற்றும் குடியிருப்பு பராமரிப்பு போன்றவற்றை வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, நஷ்டம் போன்ற காரணங்களைச் சொல்லி நீலகிரி மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுத்து வருகிறது.

மேலும் வால்பாறை மற்றும் நீலகிரி நடுவட்டம் பகுதியில் பணியாற்றி வந்த தோட்ட தொழிலாளர்களை கூடலூரில் குடியமர்த்தும் உத்தரவையும் அரசு பிறப்பித்திருக்கிறது. இந்த முடிவிற்கு தோட்ட தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் பல்வேறு தொழிற்சங்கங்களும் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்து விட்டு மீண்டும் வனத்துறை வசமே ஒப்படைக்க வேண்டும் என சூழலியல் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டேன் டீ
டேன் டீ

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் இயற்கை மற்றும் வன உயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் ஊட்டி சாதிக், "ஆங்கிலேயர் காலம் முதல் டேன் டீ வரை இயற்கை காடுகளை அளித்தே தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீலகிரி போன்ற பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்து வரும் அதே நேரத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அவற்றுக்கான போதிய வாழிடம் இல்லாத காரணத்தால் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. இதனால் மனித - வனவிலங்குகள் எதிர்கொள்ளும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பாவி தோட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிந்து வருகின்றனர்.

வனவிரிவாக்கம் செய்வது அவசர தேவையாக இருக்கிறது. அரசு தேயிலைத் தோட்டத்தை வனத்துறை வசம் ஒப்படைப்பதன் மூலம் பெரிய அளவிலான வனப்பரப்பு விலங்குகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் மனித வனவிலங்குகள் எதிர்கொள்வது 50 முதல் 60 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்லாது செக்ஷன் 17 பிரிவின் கீழ் உள்ள பெருந்தோட்ட முதலாளிகளின் பிடியில் இருக்கும் தோட்டங்களையும் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த தேயிலை பயிர்கள் அப்படியே இருந்தால் மரமாகி வனவிலங்குகள் உள்ளே நுழைவது கூட சாத்தியம் இல்லாமல் போய்விடும்.

சாதிக்
சாதிக்

தேயிலைச் செடிகளை அகற்றி விட்டு பூர்வீக தாவரங்களை அறிமுகம் செய்ய வேண்டும். இந்த தோட்டங்களை மட்டுமே பல தலைமுறைகளாக நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டதாக தெரியவில்லை. குறைவான கூலிக்கு கடுமையான உடல் உழைப்பைக் கொடுத்து கடைசி காலத்தில் சொந்த குடியிருப்பு கூட இல்லாமல் நிர்க்கதியாக இருக்கிறார்கள். தோட்ட தொழிலாளிடம் சென்று அவர்களின் உண்மையான தேவையை கேட்டறிந்து சொந்த குடியிருப்புடன் கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் கேட்பதை விட ஒருபடி உயர்வாக அரசு கொடுப்பதுதான் அவர்களின் இத்தனை ஆண்டுகால உழைப்புக்கு கொடுக்கும் மரியாதை" என்றார்.