Published:Updated:

ஆழ்துளைக் கிணறு விபத்துகள்... பஞ்சாப் செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்!

தவறிவிழுந்த குழந்தைகள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான விஷயம் அத்தனைக் குழந்தைகளுமே வெளியே விளையாடச் சென்றவர்கள்.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

திருச்சி, நடுக்காட்டுப்பட்டி குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் ரிக் இயந்திரம் 'டகட் டகட்' என்கிற சத்தத்துடன் 110 அடிக்கான குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது. தோண்டப்படும் ஆழ்துளைக் குழியில் மூன்று தீயணைப்புப் படை வீரர்கள் இறங்கி குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

அந்தச் சத்தம்தான் தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலை. ரிக்கிங் எந்திரம் மூலம் பொதுவாகப் பொருட்களைத் தூக்குவதற்காக உதவும் இயந்திரம். பெரும்பாலும் கிரேன்களை வைத்தோ அல்லது வலுவான கயிற்றினை பொருட்களில் கட்டியோ ரிக்கிங் முறையில் மேலே எடுப்பார்கள். இந்த ரிக்கிங் முறையைக் கொண்டுதான் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் 150 அடி ஆழத்தில் விழுந்த ஃபதேவீர் சிங் என்கிற இரண்டு வயதுக் குழந்தை காப்பாற்றப்பட்டது. தேசியப் பேரிடர் மீட்புக் குழு, துணை ராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை என அத்தனைப் பாதுகாப்புத் துறைகளும் இரண்டு நாட்கள் போராடி அந்தக் குழந்தையை மீட்டனர்.

ஆனால், காப்பாற்றப்பட்ட சில மணி நேரங்களில் அந்தக் குழந்தை உடல் வலிமையற்று போய் இறந்தது. பஞ்சாபில் குழந்தைகள் இப்படி ஆழ்துளைக் கிணறுகளில் விழுவது அது முதன்முறை அல்ல. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அதே பஞ்சாப்பின் ஹிசார் மாவட்டத்தில் 18 மாதக் குழந்தை ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 48 மணிநேரத்தில் போராடி மீட்கப்பட்டது. அந்தக் குழந்தை தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்றாலும், அந்த மாநில அரசு ஆழ்துளைக் கிணறுகள் பிரச்னையில் கறாரான முடிவொன்றை எடுக்க, விலைமதிப்பில்லாத 2 வயதுக் குழந்தையின் உயிர் தேவைப்பட்டது. 

மீட்புப் பணி
மீட்புப் பணி

அந்த மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், தனது 'தந்துருஸ்த் பஞ்சாப் மிஷன்' எனும் தூய்மை சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்கள் அனைவர் மீதும் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு துணை ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பினார். மேலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதை. சுமார் 350 அடி ஆழம் வரை குழந்தைகள் விழுந்ததற்கான தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பதற்கான எண்ணிக்கைத் தரவுகள் நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது. தவறிவிழுந்த குழந்தைகள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான விஷயம் அத்தனைக் குழந்தைகளுமே வெளியே விளையாடச் சென்றவர்கள். குழந்தைகள் விளையாடுவதைக் கூடப் பாதுகாப்பற்றதாக்கும் ஆழ்துளைக் கிணறுகள் தேவையா என்பது முடிவெடுக்கப்பட வேண்டிய கேள்வியாகவும், அதற்கான மாற்று குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

குழந்தை சுர்ஜித் எப்படியேனும் காப்பாற்றப்பட்டுவிட வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மொத்த தமிழகத்தின் ஒட்டுமொத்த சிந்தனை என்றாலும் பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் ஏன் இத்தனைத் தாமதம் என்கிற கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

நீட், கல்விக் கொள்கை போல ஆழ்துளைக் கிணறுகள் விவகாரமும் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக வளர்ந்திருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பான வகையில் மூடவேண்டும், அதுவும் மீண்டும் அதில் பிள்ளைகள் வீழ்ந்துவிடாதபடி மூடவேண்டும் என்பது முதன்மையாக அதன் உரிமையாளர் கடமை.

குழந்தை நலமுடன் மீண்டு வருவான், நம்புவோம். மீண்டு வந்ததும் இனியொரு குழந்தை ஆழ்துளைகளில் விழாமல் இருக்க முதல் காரியமாக தனிநபர்கள் செய்ய வேண்டியதையும், பஞ்சாப் மாநில அரசு போல தமிழக அரசு செய்ய வேண்டியதையும் நினைவில் நிறுத்துவோம்.

4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்