Published:Updated:

21.67 சதவிகிதமாக அதிகரித்துள்ள இந்திய வனப்பரப்பு... மத்திய அரசு சொல்வது சரிதானா?

இந்தியாவின் மொத்த வனப் பரப்பளவு, 2011-ம் ஆண்டில் இருந்ததைவிட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதை ஆரோக்கியமான முன்னேற்றமாகக் கருதுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலை ( Pixabay )

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியக் கானக அளவை நிறுவனம், நாட்டிலுள்ள மொத்த வனப்பரப்பையும் கணக்கெடுத்து ஆய்வறிக்கையாக வெளியிடும். அதன் 2017-வது ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் 1சதவிகித அளவிற்கு வனப்பரப்பு அதிகரித்துள்ளதாகக் கூறியது. அதுகுறித்து அப்போது பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன், ``அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ந்துவரும் தேவைகளையும் தாண்டி வனங்களைப் பாதுகாத்ததோடு, இந்தியாவில் வனப்பரப்பு 1% அதிகரித்தும் இருக்கிறது" என்று பெருமையாகக் கூறினார்.

``அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ந்துவரும் தேவைகளையும் தாண்டி வனங்களைப் பாதுகாத்ததோடு, இந்தியாவில் வனப்பரப்பு 1% அதிகரித்தும் இருக்கிறது."
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன்

இப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 2019-ம் ஆண்டுக்கான இந்தியக் காடுகளின் மொத்தப் பரப்பளவு குறித்த அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை, கடந்த ஆண்டு இருந்ததைவிட வெறும் 0.13 சதவிகிதம் இந்தியக் காடுகளின் அளவு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. வனப்பரப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியக் கானக அளவை, நிறுவனம் நடத்தும் இந்தக் காடுகள் பரப்பளவு கணக்கெடுப்பில், இந்திய வனங்களின் நிலப்பரப்பை அளப்பதற்கு அவர்கள் வைத்துள்ள அளவுகோல் குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வகுத்துள்ள வரையறைப்படி, 1 ஹெக்டேர், அதாவது 2.45 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 10% மரங்கள் இருந்தாலே போதும், காடு என்று அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்திய வன அளவை நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவிலுள்ள காடுகளின் மொத்தப் பரப்பளவைக் கணக்கிட்டு வெளியிடும். அதன்படி, 2019-ம் ஆண்டிற்கான இந்திய வனப்பரப்பின் மொத்தப் பரப்பளவு குறித்த அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்போது இந்தியாவிலுள்ள மொத்தக் காடுகளின் பரப்பளவு 7,12,249 சதுர கிலோமீட்டர். 2011-ம் ஆண்டில் 6,92,027 சதுர கிலோமீட்டராக இருந்த வனப்பரப்பு தற்போது 20,222 சதுர கி.மீ அதிகரித்துள்ளது.

இந்திய நிலப்பரப்பில், 33 சதவிகிதம் அளவுக்கு காடுகள் இருக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் 21.54 சதவிகிதமாக இருந்த வனப்பரப்பு, 2019-ம் ஆண்டில் 21.67 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்திய வனப்பரப்பு
இந்திய வனப்பரப்பு
Pixabay

2011-ம் ஆண்டின் வன அளவை நிறுவனத் தரவுகளின்படி, அப்போது 692,027 சதுர கிலோமீட்டர் காடுகள் இந்தியாவில் இருந்தன. அதிலிருந்து 20,222 சதுர கி.மீ உயர்ந்துள்ளது. அதாவது, 2011-ம் ஆண்டில் இருந்ததைவிட 3 சதவிகித கானகப் பரப்பு அதிகரித்துள்ளது. இதை ஆரோக்கியமான முன்னேற்றமாகக் கருதுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

`மிகவும் அடர்ந்த காடுகள்' என்ற வகைப்பாட்டில் இப்போது 99,278 சதுர கி.மீ உள்ளது. அடர்த்தி குறைவான காடுகள் 3,08,472 மற்றும் திறந்தவெளிக் காடுகள் 3,04,499 சதுர கி.மீ என்ற விகிதத்தில் இப்போதைய இந்தியக் காடுகளின் பரப்பளவு இருக்கிறது. இவை மூன்றும் முறையே 3.02 சதவிகிதம், 9.39 சதவிகிதம் மற்றும் 9.26 சதவிகிதம் என்றுள்ளன.

பல்லுயிரிய வளம், அரிய வகை உயிரினங்கள், புவியியல் சேவைகள் என்று பெரும்பாலானவை வாழ்வது அடர் காடுகளில்தான். ஆனால், அவற்றின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அதுபோக, திறந்தவெளிக் காடுகளாகக் குறிப்பிடப்படும், அடர்த்தியில்லாத நிலப்பகுதிகளின் அளவு மிக அதிகமாக உள்ளது. இந்த வரையறைக்குள், பழத் தோட்டங்கள், பண மரம் பயிரிடுதல்கள் அனைத்துமே வருவதால், அவற்றைக் காடுகளாகக் கருத்தில் எடுக்க முடியாது. இவற்றோடு, இந்தியாவில் 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அரசு ஒப்புதலோடு 30,36,642 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மனிதர்களின் மற்ற பயன்பாடுகளுக்காக காடுகளை அழிக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்திலுள்ள மாநிலங்களில் மட்டுமே 5,385.27 ஹெக்டேர் காட்டு நிலம் அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

காளி நதி
காளி நதி
Pixabay

பொருளாதார ரீதியாக வளர்க்கப்படும் பண மரங்களால் சூழப்பட்ட செயற்கைக் காடுகளின் பரப்பளவுதான் அதிகரித்துள்ளது என்பதை, அதிகரித்துள்ள திறந்தவெளிக் காடுகளின் பரப்பளவு நமக்கு உணர்த்துகிறது.

நாட்டின் மொத்தப் பரப்பளவில், வெறும் மூன்றே சதவிகிதம்தான் அடர்த்தியான காடுகள் இருக்கின்றன என்பது ஆரோக்கியமான போக்கு கிடையாது. மொத்த வனப் பரப்பளவில் 50 சதவிகிதத்திற்கு அடர்த்தியான காடுகள் இருந்தால்தான், நாட்டின் மொத்த மரப்போர்வை ஆரோக்கியமாக இருக்கிறதென்று கருதமுடியும். இந்த வகையான காடுகள்தான், அதிகமான கரிமத்தைக் கிரகிக்கின்றன. அவற்றின் இருப்புதான், சூடாகும் பூமியைக் குளிர்விப்பதில் அதிகப் பங்கு வகிக்கின்றன.

Vikatan

காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளதாகச் சொல்வது ஒருபுறமிருந்தாலும், இன்னொருபுறம் இருக்கும் உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். வடகிழக்கில் அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிர மற்ற 6 மாநிலங்களைச் சூழ்ந்திருக்கும் வனப்பகுதி, 2011-ம் ஆண்டிலிருந்ததைவிட சுமார் 18 சதவிகிதம் 2019-ம் ஆண்டில் குறைந்துள்ளது. மிகவும் அடர்த்தியான, பல்லுயிரிய வளம் மிகுந்த காடுகளைக் கொண்ட நிலப்பகுதியில், 18 சதவிகித கானகப் பரப்பை இழந்தது, இன்றுள்ள சூழலியல் நிலைமையில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகத்தான் கருத வேண்டும்.

பொருளாதார ரீதியாக வளர்க்கப்படும் பண மரங்கள்
பொருளாதார ரீதியாக வளர்க்கப்படும் பண மரங்கள்
Pixabay

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கணக்கெடுப்பு என்ற பெயரில் வெறுமனே மரங்களைக் காடுகளாகப் பதிவுசெய்வதை விட்டுவிட்டு, நியாயமான கணக்கெடுப்பின் மூலம் இயற்கையான காடுகளின் அளவைப் பதிவு செய்ய வேண்டும். அதுவே, இந்திய நிலப்பரப்பில் 33 சதவிகிதக் காடுகள் என்ற இலக்கை அடைய வழிவகுக்கும். அதனால் பலனும் உண்டாகும்.