ஒவ்வோர் ஆண்டும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியாவிலுள்ள குற்ற வழக்குகள் குறித்த தரவுகளை வெளியிடும். அதில், 2014-ம் ஆண்டு சுற்றுச்சூழல் குற்றங்கள் என்ற பிரிவும் சேர்க்கப்பட்டது. 2016-ம் ஆண்டு அந்தப் பிரிவின் கீழ் 4,732 சூழலியல் குற்றங்கள் பதிவாகியிருந்தன. அதுவே 2017-ம் ஆண்டு, 42,143 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரே ஆண்டில் 37,411 குற்றங்கள் அதிகரித்துள்ளன. கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறதா!

உண்மையில், இந்தக் குற்றங்களில் இந்த ஆண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட புகையிலைச் சட்டத்தின்கீழ்தான் 70% வழக்குகள் (29,659) பதிவாகியுள்ளன. காற்று மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டங்களின்கீழ் வெறும் 36 வழக்குகளே பதிவாகியுள்ளன. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மட்டுமே சுமார் 5,000 வழக்குகள் காற்று மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பதிவாகியுள்ளதாகச் சொல்கிறார், சுற்றுச்சூழல் வழக்கறிஞர் உபாத்யாயா.
சூழலியல் குற்றங்கள் பெரும்பாலும் சிவில் குற்றங்களாகவே கருதப்படுவதால், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அவற்றைக் கருத்தில் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல், வனச்சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் 3,842 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சட்டங்களின்கீழ் பெரும்பாலும் தண்டிக்கப்படுவது பழங்குடியின மக்கள்தானே தவிர முக்கியக் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதாகவும், இந்தக் குற்றங்களைவிட மோசமான குற்றங்களைச் சிவில் குற்றமாக அல்லாமல் கிரிமினல் குற்றங்களாகப் பதிவு செய்யவேண்டுமென்று சூழலியல் வழக்கறிஞர்கள் பேசி வருகின்றனர்.
குற்ற ஆவணக் காப்பகத்தின் வேலை தரவுகளைத் தொகுப்பதே. சூழலியல் குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக அரசு அறிவிக்காத வரை, அதுகுறித்த விரிவான தரவுகளும் ஆழமான முடிவுகளும் கிடைக்காது என்பதும் குழப்பமான தரவுகளடங்கிய இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், சட்டவிரோத சுரங்கம் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை. அன்றாட வாழ்வுக்காகக் குறைந்தபட்சமாக வளங்களைப் பயன்படுத்தும் அப்பாவிப் பழங்குடிகளே இங்கு குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள்.பேரா.கீதன்ஜோய் சாஹூ, டாடா சமூக அறிவியல் நிறுவனம்