Published:Updated:

பிளாஸ்டிக் தடையின் ஓராண்டு... தமிழக அரசு சாதித்ததா... சறுக்கியதா!?

உண்மைதான். பிளாஸ்டிக்கைத் தடைசெய்து ஓராண்டாகியும்கூட, இன்னமும் அதன் பயன்பாடு பெரிய அளவில் குறையவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2019 ஜனவரி 1 அன்று, தமிழக அரசு ஒற்றைப் பயன்பாட்டுப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தது. இது, மக்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. மக்கள், மீண்டும் துணிப்பையை எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்வதை நாம் பார்த்தோம். பெரிய கடைகளில் பிளாஸ்டிக் பைக்குப் பதில் துணி அல்லது காகிதப் பைகள் கொடுக்கிறார்கள். ஆரோக்கியமான நல்ல மாற்றங்கள் நடந்தது என்று பலரும் பாராட்டினர். ஆயினும் இவை தொடக்கத்தில் மட்டுமே இருந்ததாகவும், நாளடைவில் இதில் தொய்வு ஏற்பட்டது என்றும் பேச்சு எழுந்தது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த தடை விதித்து ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயன்றோம்.

பிளாஸ்டிக் பொருள்கள்
பிளாஸ்டிக் பொருள்கள்
Pixabay

சென்னையில், சிறிய கடை போட்டு பழங்களை விற்றுக்கொண்டிருந்த அந்த மூதாட்டி, வாடிக்கையாளர்களுக்கு அதைக் காகிதத்தில் சுருட்டி, கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நடுநடுவே, சுமந்துசெல்ல சிரமப்பட்டு பிளாஸ்டிக் கவர் கேட்பவர்களுக்கு, மேசைக்குக் கீழே வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து, அதில் கட்டிக் கொடுத்தார். காகிதங்களில் வாங்கிச் சென்றவர்களைவிட, பிளாஸ்டிக் கவரில் வாங்கிச் சென்றவர்களே அதிகம். அவரை அணுகி பேச்சுக்கொடுத்தபோது, "இத விக்கணுமுன்னு எனக்கு மட்டும் என்ன ஆசையா? 'பிளாஸ்டிக் கவர்ல கொடு'ன்னுதான் வர்றவங்க எல்லோரும் கேக்குறாங்க. என்கிட்ட இல்லன்னா, இருக்கிறவன்கிட்ட வாங்கிட்டுப் போயிடுறாங்க. வியாபாரம்தான் பாதிக்குது. அதான் வெச்சிருக்கேன்" என்றார்.

உண்மைதான். பிளாஸ்டிக்கைத் தடைசெய்து ஓராண்டாகியும்கூட, இன்னமும் அதன் பயன்பாடு பெரிய அளவில் குறையவில்லை. பிளாஸ்டிக்கைத் தடைசெய்த அளவுக்கு, அதற்குரிய மாற்றுப் பொருள்களைப் போதிய அளவுக்கு அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில் கொண்டு சேர்க்கவில்லை என்பதை வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கின்றனர்.

தமிழகப் பொருளாதாரத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் பங்கு, ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய்.
Vikatan

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், மால்களிலுள்ள கடைகளில் துணிப் பைகளைக் கொடுப்பதற்காக குறிப்பிட்ட தொகையைத் தனியாகப் பெற்றுக்கொள்கிறார்கள். சாதாரண சிறு விற்பனையாளர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அதேநேரம், அத்தகைய பெரிய மால்களில் துணிப்பைக்கு காசு கொடுக்கத் தயங்காத மக்கள், எளிய மக்களின் சிறு கடைகளில் அவை இலவசமாகக் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், அவர்கள் வேறு வழியின்றி மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கே திரும்பவேண்டியதாகிவிட்டது. இவை போதாதென்று, இப்போது சந்தைக்குள் புதிதாக பயோ-பிளாஸ்டிக் ஊடுருவியுள்ளது. அது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத, மக்குகின்ற பிளாஸ்டிக் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குரிய பரிசோதனைகளை அரசு நிறுவனங்கள் இதுவரை முறையாகச் செய்யவில்லை. பயோ பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்த, வரையறுக்க, உரிய அளவுகோல்களை, விதிமுறைகளை, அனுமதி வழங்கல் முறையை வகுக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.நகரில் ஷாப்பிங்கில் ஈடுபட்டிருந்த மக்களில் சிலரிடம் நாம் பேசியபோது, "பிளாஸ்டிக் பயன்பாட்டை நாங்கள் குறைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால், அதற்குரிய மாற்றுப் பொருள்கள் கிடைப்பதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. அதனால், வேறு வழியின்றி பிளாஸ்டிக்கையே பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இப்போது, இயன்ற இடங்களில் பிளாஸ்டிக்கைத் தவிர்த்தாலும், சில இடங்களில் மாற்று கிடைக்காததால் அதையே பயன்படுத்துகிறோம்" என்றனர். அதோடு, மக்களும் முழுதாக மாறிவிடவில்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டில் பழகிவிட்டதால், அவர்களே அதைத்தான் கேட்டு வாங்குகிறார்கள் என்று விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

பாலிதீன் பைகள்
பாலிதீன் பைகள்

தமிழகத்தில் 8,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இருக்கின்றன. நேரடியாக 2,00,000 மக்களும் மறைமுகமாக 3,00,000 மக்களும் அத்தொழிலைச் சார்ந்துள்ளனர். தமிழகப் பொருளாதாரத்தில் இந்தத் தொழிற்சாலைகளின் பங்கு, ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய். பிளாஸ்டிக் தடை கொண்டுவந்த பிறகு இவர்களின் நிலை என்னவாயிற்று, அவர்களுக்காக என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்கள் எதையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கின்ற சிறு தொழிற்சாலைகள், மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கத் தேவையான உதவிகளைச் செய்து, அந்தப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தால், நேர்மறையான விளைவுகள் கிடைத்திருக்கலாம். அதையும் முறையாகச் செய்யவில்லை.

பிளாஸ்டிக் தடை குறித்துப் பேசிய துணிப்பை இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா, "ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் பொருள்களுக்குத்தான் இவர்கள் தடை விதித்திருக்கிறார்கள். ஒருகாலத்தில், இவற்றை சிறுதொழில் முதலீடாக ஊக்குவித்ததே அரசாங்கம்தான். அவர்களுக்குரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் உடனடியாகத் தடை விதிக்கும்போது, உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்ற அரசு அதில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், வெறுமனே தடை விதித்து, பயன்பாட்டை ரத்துசெய்வது மேலோட்டமாகத்தான் இருக்கும். இது, அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்

மூங்கில், பனை, பாக்கு, வாழை, துணி என்று அரசு முன்வைத்துள்ள மாற்றுப் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி, அவற்றின் விலையைக் குறைக்க வேண்டும். இதில் புதிதாக ஒருவர் தொழில் முனைய வந்தாலும், உற்பத்தியிலிருந்து சந்தை வரை அவர்களுக்குப் போதிய உதவிகள் கிடைப்பதில்லை. அதற்குரிய வழிவகையை ஏற்படுத்தாமல், தடை முழுமையாகச் சாத்தியமில்லை. அரசிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்வதில் விரிவான புரிதலோடுகூடிய கொள்கைகள் இல்லை. அதைக் கொண்டுவர வேண்டும்.

பெருநிறுவனங்களின் ஷாம்பூ, காபி மற்றும் டீ தூள் சாஷே கழிவுகளை என்ன செய்வது என்று இன்னும் இவர்கள் சிந்திக்கவே இல்லை. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல், வெறுமனே பிளாஸ்டிக் தடை என்று அறிவிப்பதால், மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது" என்று கூறினார்.

ஆங்காங்கே சின்னச்சின்ன விற்பனையாளர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. அவர்களுக்குப் பெரிய அளவில் அபராதங்களும் விதிக்கப்படுகின்றன. ஆனால், இது அனைவருக்கும் நடப்பதில்லை. பலர் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக் கழிவுகள்
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக் கழிவுகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டைக்  குறைக்க மாத்திரை வடிவில் பற்பசை! - கனடாவின் புது முயற்சி

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக தமிழக அரசு சுமார் மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. ஆனால், சென்னையில் மட்டுமே ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்திசெய்துகொண்டிருப்பதாகக் கூறுகிறது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம். பிளாஸ்டிக் தடை அமலில் இருந்துமே, பள்ளிக்கரணை, கொடுங்கையூர் முதல் தமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள கன்னியாகுமரி வரை குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்துகொண்டிருப்பது தொடர்கதையாகவே உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு