Published:Updated:

`காலி மதுபாட்டில் பிரச்னை; ரூ.10,000 அபராதம்!' - நீலகிரி ஆட்சியர் அதிரடி

காலி மது பாட்டில்களை பொது இடங்கள், சாலையோரங்களில் தூக்கி எறிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

J.Innocent Divya IAS, District Collector.
J.Innocent Divya IAS, District Collector. ( Arun.K )

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை அழகையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த காலங்களில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. `உன்னத உதகை' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

tasmac
tasmac

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் நீலகிரியில் 55 அரசு மதுபானக் கடைகள், 32 அரசு மது அருந்து கூடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாது பல தனியார் தங்கும் விடுதிகளில் பார்கள் உள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் மது பாட்டில்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வனப்பகுதிகள், புல்வெளிகள், விளைநிலங்கள், சாலை ஓரங்கள் என எல்லா இடங்களிலும் காலி மதுபாட்டில்கள் அதிகளவு வீசப்படுகின்றன.

`திரும்பும் பக்கமெல்லாம் புதுப்புது அருவிகள்..!’ - பெருமழையால் புத்துயிர்பெற்ற நீலகிரி

இதனால் இவற்றை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. குடித்துவிட்டு வீசப்படும் காலி மது பாட்டில்கள் உடைந்து வன விலங்குகளுக்கு காயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

liquor bottles
liquor bottles

இதன்படி மது பாட்டில்களை சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் வீசி எறியக் கூடாது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``55 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் இடவசதி உள்ள 32 மதுபானக் கடைகளுக்கு அந்தக் கடைகளுடன் இணைந்த கட்டடங்களில் மது அருந்தும் கூடங்களுக்கு 1.10.2019 முதல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கப்படும் மதுவை, உரிமம் வழங்கப்பட்டுள்ள மது அருந்தும் (பார்கள்) கூடங்களில் அருந்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

liquor bottles
liquor bottles

காலி மதுபாட்டில்களை குப்பைத் தொட்டியில் போடாமல் பொது இடத்திலோ, பொதுமக்கள் கூடும் இடங்களிலோ, சாலையோரங்களிலோ தூக்கி எறியப்படுவது கண்டறியப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ரூ.10,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு சூழலியல் ஆர்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள் என பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.