முதுமலை: நள்ளிரவில் பிளிறிய யானைகள்... அடர் வனத்துக்குள் இறந்து கிடந்த குட்டி யானை!

சமீப நாள்களாக யானைகளின் இடப்பெயர்ச்சியைக் காண முடிகிறது. நேற்று நள்ளிரவு நீண்ட நேரம் இந்த பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் வழக்கத்திற்கு மாறானதாகவே இருந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு தொட்டகட்டி பிரிவு பகுதியில் யானை கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் வழக்கத்திற்கு மாறாக கேட்டுள்ளது.

இரவு நேரம் என்பதால் உள்ளே செல்ல முடியாததால் இன்று வனத்துறையினர் குறிப்பிட்ட அந்த பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் சென்று பார்த்ததில், இறந்தது பெண் குட்டி யானை என்றும்,பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கலாம், என்பதை உறுதி செய்தனர்.

இது குறித்து முதுமலை வனத்துறையினர்,"சமீப நாள்களாக யானைகளின் இடப்பெயர்ச்சியை காண முடிகிறது.நேற்று நள்ளிரவு நீண்ட நேரம் இந்த பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் வழக்கத்திற்கு மாறானதாகவே இருந்தது.இன்று காலை சென்று பார்த்தோம்.கூட்டத்தில் இருந்த யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது.வனக்கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கூறாய்வு மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.குட்டியின் இறப்பு குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றோம்"என்றனர்.