Published:Updated:

ஊழிக்காலம் - 4 | எலான் மஸ்க் அறிவித்த 100 மில்லியன் டாலர் பரிசு... கரிமத்தைப் பிரிப்பது ஏன் அவசியம்?

உமிழ்விலிருந்து கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கும் எளிய, குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டிக்குத்தான் 100 மில்லியன் டாலர் ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2021 ஜனவரி 21ல் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், ஒருவகை கரிம தொழில்நுட்பத்துக்காக விரைவில் ஒரு உலகளாவிய போட்டி நடக்கப்போகிறது என்றும், அந்தப் போட்டியின் பரிசுத் தொகைக்காகத் தனது சொத்திலிருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

"அவருடைய நிகர மதிப்போடு ஒப்பிடும்போது 100 மில்லியன் டாலர்கள் என்பது வெறும் பாக்கெட் மணி மாதிரிதான்" என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும், அவரது முன்னெடுப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது. தவிர, ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருந்த கரிம தொழில்நுட்பம் என்பது இப்போது முக்கியமான பேசுபொருள். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களில் அது முக்கியமானது.

elon musk
elon musk

பசுமைக்குடில் வாயுக்களால்தான் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கிறது எனவும், அவற்றைக் கட்டுப்படுத்தினால் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். ஒரு பசுமைக்குடில் வாயு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மூன்று அம்சங்களைப் பொறுத்து மாறுபடும். முதலாவது, காற்றில் அதன் அளவு. இரண்டாவது, வெப்பத்தைத் தக்கவைப்பதில் அந்த வாயுவின் திறன். மூன்றாவது, காற்றில் அதன் வாழ்நாள். இந்த மூன்று அம்சங்களையும் வைத்துப் பார்க்கும்போது, இருக்கும் பசுமைக்குடில் வாயுக்களிலேயே மிகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது கரியமிலவாயுதான்.

உலகின் சராசரி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2.0 டிகிரி செல்சியஸ் வரைதான் அதிகரிக்கலாம் என்பதே காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (IPCC) பரிந்துரை. 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தாலே பாதிப்புகள் அதிகமாகிவிடும் என்பதால், சமீபகாலமாக, 1.5 டிகிரிக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இலக்குகளை எட்ட வேண்டுமானால், காற்றில் கரியமில வாயுவின் அளவு 450 பி.பி.எம் இருக்கவேண்டும். அதற்காக முன்வைக்கப்படுவதுதான் கரிம பட்ஜெட் (Carbon Budget).

குளிர்காலத்தில், அறைக்கதவையும் ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு, ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். குளிர் தெரியவில்லை. கதகதப்பாக உணர்கிறீர்கள். திடீரென்று யாராவது உங்கள்மேல் இன்னொரு போர்வையைப் போர்த்தினால் என்ன ஆகும்? வெப்பம் அதிகரிக்கும், அசௌகரியமாக உணர்வீர்கள். அடுத்தடுத்து போர்வைகளைப் போர்த்திக்கொண்டே போனால் என்ன நடக்கும்? ஒரு கட்டத்தில் அந்தக் குளிரிலும் வியர்த்து விறுவிறுத்துப் போய்விடுவோம், இல்லையா?

பசுமைக்குடில் வாயு என்பது போர்வையைப் போலத்தான். சுற்றியுள்ள தட்பவெப்ப சூழலைப் பொறுத்து ஒரு போர்வை போதும் என்றால், கூடுதலான ஒவ்வொரு போர்வையும் நம் உடலின் அசௌகரியத்தை அதிகரித்தபடியே இருக்கும்.
Air Pollution
Air Pollution

இந்த போர்வைப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?

முதலில், கூடுதல் போர்வைகளைப் போர்த்தாமல் இருக்கவேண்டும். அதாவது, அடுத்தடுத்து தொடர்ந்து கரிம உமிழ்வுகளை வெளியிடாமல் இருந்தால் காற்றில் கூடுதலாகக் கரியமிலவாயு சேராமல் இருக்கும்.

அடுத்தது, ஏற்கெனவே போர்த்திய போர்வைகளை ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். அதற்கு உண்டான தொழில்நுட்பங்களைக் கண்டறியவேண்டும்.

இதில், கரிம பட்ஜெட் என்பது கூடுதல் போர்வைகளைப் போர்த்தாமல் இருப்பதைப் போன்றது. வீட்டில் மாதாமாதம் எவ்வளவு வரவு, செலவு என்பதைக் கணித்து பட்ஜெட் போடுகிறோம் இல்லையா? அதைப் போலவே, சராசரி கரியமில வாயு எவ்வளவு இருந்தால் நல்லது என்பதை முதலில் கணித்து, அந்த அளவு வரவேண்டுமானால் ஒவ்வொரு நாடும் எவ்வளவு கரிம உமிழ்வுகளை வெளியிடலாம் என்ற ஓர் அளவு வரையறுக்கப்படுகிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளும் இந்த அளவை சரியாகப் பின்பற்றினால் சராசரியான கரிம அளவும் சரியானதாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரிம உமிழ்வுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது?

உலகில் அதிகபட்சமான பசுமைக்குடில் வாயுக்கள், நிலக்கரி, பெட்ரோல் போன்ற புதைபடிம எரிபொருட்களைப் (Fossil fuels) பயன்படுத்தும்போதுதான் வெளியேறுகின்றன. ஆற்றலுக்காகவும் மின்சாரத்துக்காகவும் நிலக்கரி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவை அதிக அளவில் வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதில், நிலக்கரி பிரச்னையின் தீவிரம் மிகவும் அதிகம். 2018ல் மொத்த கரியமில வாயு உமிழ்வில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மூலமாக மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் நிலையங்களும் தொழிற்சாலைகளும் உலகெங்கும் இயங்கி வருகின்றன. மெதுமெதுவாக நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைத்து, வேறு வகையான ஆற்றலை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் இது, Phasing out coal usage என்று அழைக்கப்படுகிறது. ஒரு தீய பழக்கத்தைத் திடீரென்று விடமுடியாதவர்கள், அதைப் படிப்படியாகக் குறைத்து ஒருநள் முழுக்க நிறுத்துவார்களே, அதைப் போல நிலக்கரியின் பயன்பாடும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டும்.

நிலக்கரி சுரங்கம்
நிலக்கரி சுரங்கம்

புதைபடிம எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதில் இன்னொரு நன்மையும் உண்டு. 2018ல் நடந்த மொத்த உயிரிழப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு, புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் உண்டான காற்று மாசுபாட்டால் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு! இந்தியாவில் மட்டும் 2018ல் ஒரு மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்திருக்கிறார்கள் என்று அறிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. கொள்ளை நோய்க்காக நாம் தற்காலிகமாக அணிந்துகொண்டிருக்கும் முகக்கவசங்களை, காற்று மாசுக்காக நாம் நிரந்தரமாக அணிய வேண்டியிருக்கும். ஏற்கெனவே உலகின் பல பெருநகரங்களில் வருடத்தின் சில மாதங்களுக்காவது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஆகவே, புதைபடிம எரிபொருட்களைக் குறைத்துக்கொண்டால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு, காற்று மாசுபடுவதையும் குறைக்க முடியும்.

2030க்குள் உலகளாவிய பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு பாதியாகக் குறைக்கப்படவேண்டும் என்றும், 2050க்குள் உலக நாடுகள் அனைத்திலும் நிகர பூஜ்ய உமிழ்வு (Net Zero Emissions) ஏற்படவேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதென்ன நிகர பூஜ்ய உமிழ்வு?

நாம் காற்றில் சேர்க்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு எவ்வளவு இருக்கிறதோ, காற்றிலிருந்து மீட்டெடுக்கப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவும் அதே அளவில் இருந்தால், நிகர உமிழ்வு பூஜ்யமாகிவிடும். முன்பு சொல்லப்பட்ட போர்வை உதாரணத்தை வைத்து இதை விளக்கவேண்டுமானால், புதிய போர்வையை ஒருவர் போர்த்திய உடனேயே வேறொருவர் அதை எடுத்துவிட்டால் எப்படி இருக்கும்? நமக்கு எந்தப் பாதிப்பும் இருக்காதில்லையா? அதைப் போலத்தான் இதுவும். காற்றிலிருந்து கரியமில வாயுவை எடுப்பது Carbon Dioxide Removal (CDR) என்று அழைக்கப்படுகிறது.

புகை
புகை

"அட! வெளியிட்ட கரியமில வாயுவைக் காற்றிலிருந்து எடுத்துவிட முடியுமா? அப்படியானால் அதை எளிதில் செய்துவிடலாமே! பிரச்னை தீர்ந்தது!" என்று நமக்குத் தோன்றலாம். நிகர பூஜ்ய உமிழ்வு வருமளவுக்கு நாம் கரியமில வாயுவைக் காற்றிலிருந்து எடுக்க வேண்டுமானால், ஒரு வருடத்துக்கு சராசரியாக எட்டு பில்லியன் டன் கரியமில வாயுவைப் பிரித்தாக வேண்டும். கரியமில வாயுவைப் பிரித்தெடுப்பதற்காக நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் அந்த அளவுக்கு வளரவில்லை.

ஆகவே, உமிழ்வுகளை வெளியிட்டபின்பு அவற்றைப் பிரித்தெடுப்பதை விட, உமிழ்வுகளைக் குறைப்பதே எளிதானது.

இதில் எலான் மஸ்க் எங்கிருந்து வந்தார்?

உமிழ்வுகளைக் குறைப்பதிலேயே இரண்டு வகை உண்டு. ஒன்று, உமிழ்வு இல்லாத செயல்பாட்டைப் பின்பற்றுவது. உதாரணமாக, நிலக்கரியிலிருந்து ஆற்றலைப் பெறுவதற்கு பதிலாக, சூரிய ஒளியிலிருந்தோ காற்றிலிருந்தோ ஆற்றலைப் பெறுவது. இரண்டாவது, உமிழ்வு ஏற்படும் இடத்திலேயே கரியமிலவாயுவை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்வது. அதாவது, நிலக்கரியின் மூலமாக ஆற்றலைப் பெறும் ஒரு தொழிற்சாலையில் புகை வெளியேறும்போது, அந்தப் புகையிலிருக்கும் பசுமைக்குடில் வாயுக்களை மட்டும் பிரித்துவிடுவது.

உலக அளவில் ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சாலைகளை இந்த இரண்டாவது வழிமுறை எந்த அளவுக்கு ஈர்த்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எல்லா படிநிலைகளிலும் எரிபொருளை மாற்றுவதற்கு பதிலாக, உமிழ்வு வெளியேறும் இடத்தில் மட்டும் ஒரு கருவியைப் பொறுத்திவிட்டால் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று அனைவரும் நினைத்தார்கள்.

இது Carbon Capture and Storage (CCS) என்று அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல, முதலில் கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கவேண்டும், பிறகு அதை வேறொரு இடத்துக்கு மாற்றவேண்டும், மூன்றாவதாக, இதை பூமிக்கடியில் சேமிக்கவேண்டும்.

Carbon Capture
Carbon Capture

துரதிருஷ்டவசமாக, இதற்கான தொழில்நுட்பங்கள் எதுவுமே விலை குறைவாக இல்லை. கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கும் பல தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கலாகவும் இருந்தன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தாலும், எளிமையான, விலை குறைவான தொழில்நுட்பங்களைப் பெரிதாக உருவாக்க முடியவில்லை. சில சமயங்களில், மொத்த தொழிற்சாலையையும் சூரிய ஒளியால் இயங்கும்படியாக மாற்றுவதற்கு ஆகும் செலவை விட, உமிழ்விலிருந்து கரியமில வாயுவைப் பிரிப்பதற்கு மட்டுமே அதிகமான செலவு செய்யவேண்டியிருந்தது. அப்போதும் உமிழ்வைப் பிரித்தெடுக்கும் செயல்திறன் ஓரளவுதான் இருந்தது என்பது கூடுதல் சிக்கல்.

ஊழிக்காலம் - 3 | `புவி வெப்பமடைதல்' ஏன் `காலநிலை மாற்றம்' ஆனது? இது ஓர் அவசரநிலையா?

"உலகைக் காப்பாற்றவேண்டும் என்கிற ஒரு காரணம் மட்டுமே உலகைக் காப்பாற்றுவதற்குப் போதாது" என்கிறார் அறிவியல் எழுத்தாளர் மேகி கோயர்த். "இந்தத் தொழில்நுட்பத்தால் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும்" என்கிற ஒரு காரணத்தை மட்டும் சொல்லி, தொழிற்சாலைகளை நாம் திருப்திப்படுத்தமுடியாது. அது எளிமையானதாகவும், குறைவான செலவு கொண்டதாகவும், எளிதில் பராமரிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வெற்றிகரமாக இருக்காது. தொழிற்சாலை நிறுவனர்கள் அதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

ஊழிக்காலம்
ஊழிக்காலம்

உமிழ்விலிருந்து கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கும் எளிய, குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டிக்குத்தான் 100 மில்லியன் டாலர் ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.

கரிம பட்ஜெட், கரிமத்தைப் பிரித்தெடுப்பது, உமிழ்வைக் கட்டுப்படுத்துவது என்று எதுவுமே வெற்றிகரமாக அமையவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது காலநிலை மாற்றத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைத்தான் அடுத்தடுத்து பேசப்போகிறோம்.

அந்தப் பட்டியலில் நம் முதல் பேசுபொருள் உணவு. காலநிலை மாற்றத்தால் நம் அன்றாட உணவில் எதுவும் மாற்றம் ஏற்படுமா?

- Warming Up...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு